டடா | அடடா, படமாடா இது?

திரை விமர்சனம்

மாயமான்

வார விடுமுறை. ஷாருக்கானின் ‘பதான்’ பார்ப்போமென்று உள்ளே போனால் ரசிகர்களின் றேட்டிங் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ‘சும்மா பாக்கலாம்’ என்ற நண்பர் ரகுவின் விமர்சனம் ஓரளவுக்கு என் ஆர்வத்துக்கு கட்டை போட்டிருந்தது. சரி வேறென்னதான் வரிசையில் நிற்கிறது என்று தட்டிக்கொண்டு போனபோது டடா கண்ணில் பட்டது. பாக்கியராஜைத் தவிர வேறெந்த நடிகர்களும் கேள்விப்பட்டவர்கள் அல்ல, இயக்குனர் கணேஷ் கே. பாபுவுக்கும் இது முதல் படம். ஆனால் ரசிகர்களின் றேட்டிங் பதானை விட அதிகமிருந்தது. டிக்கட் எதுவும் வாங்காமல் ஐந்தூசன் உள்ளே விட்டது. பார்த்தேன்.

காதாநாயகப் பையனை கவின் ராஜை இதற்கு முதல் நான் பார்த்திருக்கவில்லை. நான் பிக் பொஸ் பார்ப்பதில்லை என்பதனாலாக இருக்கலாம். கதாநாயகியும் எனக்குப் புதிதுதான். ஆனால் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகப் பின்னர் அறிய முடிந்தது. இயக்குனர், நடிகர் என்று எவரையும் பற்றி அறிந்திராமல் படத்தைப் பார்த்துவிட்டுப் பின்னால் தேடி அறிவது எனது பழக்கம். எந்தவித முற்சாய்வுமில்லாது (bias) பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது அதற்கான காரணம்.

இயக்குனர் கணேஷ் பாபுவுக்கு இது முதல் படமாக இருந்தாலும் அவரின் நுண்ணறிவு முதலாவது காட்சியிலேயே தெரிந்துவிட்டது. டயலாக் எதுவுமே இல்லாது மணிகண்டன் (கவின் ராஜ்), சிந்து (அபர்ணா தாஸ்) இருவரும் படுக்கையில் காதல் மோகத்தில் சிக்கியிருக்கும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. கவின், அபர்ணா, கணேஷ் பாபு ஆகிய மூவரில் யார் வெர்றி பெறுகிறார்கள் எனக் கூறமுடியாத அளவு நடிப்பு இருந்தது. இதில் காமராவையும் விட்டுவிட முடியாது. இக்காட்சி ஒரு ஒருவகையில் character buildup. படத்தின் முழுநீளமும் இழையோடிய ஈகோவின் முதல் வெளிப்பாடு இது.

கதை பழசுதான். ஆ காலே லாக் ஜா என்ற இந்திப்படத்தின் தழுவல் எனப் பின்னர் அறிந்தேன். அந்தக்காலத்தில் என்றால் ஜெமினி கணேசன், முத்துராமன் போன்றோரைப் போட்டு அழுது கொட்டியிருப்பார்கள். ஆனால் பாட்டுக்கள் அசத்தியிருக்கும், அது வேறு. ஆனால் இப்படம் அதற்கு எதிர்மாறு. “எனக்குக் கண்ணீரே வராது” என்ற மணிகண்டனின் காரக்டர்… சரி அத விடுவோம். நீங்களே படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நடுத்தர இந்தியாவின் ஒரு சாதாரண அடுத்தவீட்டு ஐ.டி. இளைஞனாக வரும் கவின் ராஜில் விஜய் போன்ற மசாலா ஹீரோக்களின் பாதிப்புகள் எதுவுமே இல்லை என்பது ஆசுவாசம். பெரிதளவு எடுப்புகள் இல்லை. கடற்கரையில் வரும் ஒரே ஒரு களியாட்டப் பாட்டில் மட்டும் அவரது கைகள் கொஞ்சம் வேகமாக இயங்குகின்றன. மற்றும்படி ஒரு சாதாரண ஐ.டி. இளைஞனாகவே படம் முழுவதிலும் வருகிறார்.

அபர்ணா தாஸ் அதிகம் பேசாமல் முகத்தின் அசைவுகளால் மட்டும் வசனகர்த்தாவின் வேலைகளைக் குறைத்துவிடுகிறார். இயக்குனர் கணேஷ் பாவுக்கு அதிக வேலை இருந்திராது என்று நம்புகிறேன். கோபம், தாபம், மோகம், சோகம் அனைத்தையும் அவர் இயல்பாக வெளிப்படுத்துகிறார். இரண்டு இடங்களில் மட்டும் கவின் ராஜ் தனது நடிப்புத் திறமையை உச்சத்துக்குக் கொண்டுபோகிறார். அவரது அலுவலகத்தில் மகன் ஆதித்யா (மாஸ்டர் லியன் அர்ஜுனன்) சிந்துவை (அபர்ணா தாஸ்) சந்திக்குமிடத்தில். சிந்துவின் முகத்தைப் பார்ப்பதும் மணிகண்டனின் முகத்தைப் பார்ப்பதும் என்று என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் காட்சியும் அப்போது மணிகண்டனின் முகத் தோற்றமும் விபரிக்க முடியாதவை. இதில் நடிப்பைவிட காமரா / எடிட்டிங் தரும் காட்சிக் காலம் அற்புதம். மூன்று காட்சிகளுக்கிடையேயான (அபர்ணா, கவின், அர்ஜுனன்) காட்சி மாற்றம், வசனங்கள் ஏதுமில்லாது ரசிகர்களின் கண்களைப் பொங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாஸ்டர் லியன் அர்ஜுனன் ஒரு sweet little boy. களத்தூர்க் கண்ணம்மாவில் வரும் இளைய கமல் ஹாசன் போல அசத்துகிறார்.

வீ.ரி.வி. கணேஷ் தன்னாலியன்ற அளவு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில வசனங்களும் நகைச்சுவையாக இருக்கின்றன. ஒரே ஒரு இடத்தில் அலுவலகத்தில் ஒரு கோமாளியை மணிகண்டன் அடிப்பதைத் தவிர – அது ஒரு இயபான அடி மட்டுமே, பெரிய எடுப்புகள், டூப்புகள் இல்லை- வேறு சண்டைக் காட்சிகள் இல்லை. அந்த வகையில் இது இந்தியத் திரைப்படப் பாரம்பரியத்தை (மலையாளம் தவிர்ந்த) முறியடிக்கிறது.

கதை பழசு. திருமண்மற்ற பாலியல் உறவு, கர்ப்பிணி, பிரசவம், அனாதை இல்லம் என்று கதை தூசிபடிந்தது தான். ஆனால் அந்தக்காலத்துக் கதையைப்போல் இல்லாமல் இக்கதையின் பாதை எதிர்பாராத சந்து பொந்துகளூடு போகிறது. முடிவு? அதே தான். (ஊப்ஸ்…).

எழுத்து, இயக்கம் கணேஷ் பாபு என்றிருக்கிறது. நறுக்கான, கருத்துச் செறிவுள்ள வசனங்கள். பாடல்களும் கருத்துப் பொதிந்தவை. ஒரு குத்துப் பாட்டை விட மற்றவை எல்லாம் பொருத்தமான இடங்களில் இயல்பாகப் பொருந்துபவை; செருகப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

இரண்டு இடங்களில் இயக்குனருடன் உடன்பட முடியவில்லை. ஒன்று சிந்து கர்ப்பிணித் தாயாக இருக்கும் போது அவரது உதரம் செயற்கையானது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. சேலையால் மறைத்துக் காட்டியிருக்கலாம். இரண்டு: கடற்கரையில் வரும் குத்துப் பாட்டுக் காட்சி. அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஒன்று கூடல் (கனடாவிலிருந்து கற்றுக் கொண்டார்களோ?) நடக்கிறது. பணியாளர்கள் typical நடுத்தரக் குடும்பங்களிலிருந்து வரும் ஸ்டைலான இளைஞர்கள், இளைஞிகள். ஆனால் திடீரென்று நாயகன் (கவின் ராஜ்) மதுவைப் போட்டுவிட்டு குத்தாட்டம் ஆட ஆரம்பித்தவுடன் வந்துசேரும் படை வாலியின் வானரப் படைபோல் இருக்கிறது. குடிமிகள், காதணிகள், பரட்டைத் தலைகள், கருப்புடல்கள். ஏதோ தேடிப்பிடித்துக் கொண்டுவந்தவை போல இருந்தது. சரி பணியாளர்களுக்கு ஆடத் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். விஜய் ரசிகர்களை மகிழ்விப்பதற்கான தேவை இங்கு ஏன் வந்தது? இந்தச் செருகல் மட்டும் படத்துக்குப் பொருந்தவில்லை. வேறு விதமாக இதைச் செருகியிருக்கலாம். இப்பாட்டு வராமலிருந்தால்கூட படம் இதே றேட்டிங்கை எடுத்திருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

பொக்ஸ் ஒஃபீஸில் இது வெற்றியளித்ததோ தெரியாது. அதற்காக இக்குத்துப்பாட்டை மன்னிக்கலாம். கணேஷ் பாபுவின் படங்கள் அடிக்கடி வரவேண்டும்.

புதிய தலைமுறைத் தமிழகத்தில் நிறைய திறமைவாய்ந்த இயக்குனர்களும் நடிக நடிகைகளும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோசம். கட்டவுட்டுகள் கட்டிப் பாலூத்தும் கூட்டத்தை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் நடிகர்களும், சங்கங்களும் ஒழிக்கப்பட்டால் இப்படியானவர்கள் தலையெடுக்க வாய்ப்புண்டு. Spoiler alert எதுவுமில்லாது சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். படத்தைப் பாருங்கள். கைக்குட்டை / ரிஸ்ஸ்யூ பெட்டிகள் கைவசம் இருந்தால் நல்லது.