Health

ஞாபகசக்தியை அதிகரிக்க மாத்திரை – தூக்கத்தையும் அதிகரிக்கிறதாம்?


ஞாபக மறதியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு ஒரு மருந்திருக்கிறது. உங்களில் சிலர் இம் மாத்திரையை ஏற்கெனவே எடுத்துக்கொண்டுமிருக்கலாம்.

ரோக்யோ மெடிக்கல் அண்ட் டென்ரல் யூனிவேர்சிட்டி (Tokyo Medical and Dental University (TMDU)) எலிகளில் செய்த ஆய்வைக் கொண்டு இதை நிரூபித்திருக்கிறார்கள்.

பீனியல் சுரப்பி (pineal gland) என்றொரு உறுப்பு மூளையின் மத்தியில் இருக்கிறது. “ஆன்மாவின் இருக்கை” என இதை றெனீ டெஸ்கிறட்டீஸ் விபரிப்பார். இதன் பலம் இன்னும் முற்றாக அறியப்படவில்லை. இது எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு எமக்கு விடயங்களைக் கிரகிக்கும் சக்தியும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் நம் முன்னோர். தியானத்தின் மூலம் இதன் சக்தியை அதிகரிக்கலாம் என்றும் கூறுவார்கள்.

‘இரவு-பகல்’ என்னும் நாள் வட்டத்தை உணர்வதன் மூலம் இச் சுரப்பி, இரவில் மட்டும் சுரக்கும் ஹோர்மோனை மெலெற்றோனின் (melatonin) என்று அழைப்பர். இதைக் குறிஇடாக வைத்துக்கொண்டுதான் உடல் தனது ‘கடிகாரத்தை’ இயக்குகிறது. எப்போது தூக்கம் வரவேண்டும் எப்போது விழிக்கவேண்டுமென்ற அந்த அறிவிப்பை இந்த ஹோர்மோனே செய்கிறது. இச் சுரப்பில் ஒழுங்கீனம் இருந்தால் உங்களது தூக்கத்திலும் ஒழுங்கீனம் இருக்கும். எனவே கடந்த காலத்தில் தூக்கப் பிரச்சினைக்காக நீங்கள் வைத்தியரிடம் சென்றிருந்தால் உங்களுக்கு அவர் இந்த மெலற்றோனின் மாத்திரையையும் பரிந்துரைத்திருக்கலாம்.

இந்த மெலற்றோனின் சுரப்பு பற்றி அறிந்தவையைவிட அறியாதவை நிறையவுண்டு. உடற் கடிகாரம் பல தொழிற்பாடுகளை நிர்வகிக்கும் ஒன்று. எனவே அதைக் குழப்பும் இந்த மெலற்றோனின் உடலில் பல குழப்பங்களையும் உருவாக்க முடியும். எனவே இது குறித்த பல ஆராய்ச்சிகளில் பல விஞ்ஞானிகளும் இறங்கியிருக்கிறார்கள்.ரோக்யோ TMDU பல்கலைக்கழகம் செய்து வருவதும் இப்படியான ஒன்று.

முறையான தூக்கத்தினால் உடல் பெறும் பல நன்மைகளில் ஒன்று ஞாபக சக்தி. இதையேதான் ரோக்யோ TMDU பல்கலைக்கழகமும் நிரூபித்திருக்கிறது.

இப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியின்போது மெலற்றோனின் சுரப்பின் சமிபாட்டினால் உருவான AMK எனப்படும் பதார்த்தத்தை எலிகளுக்குக் கொடுத்து அவற்றின் ஞாபக சக்தியப் பரிசோதித்தார்கள். இப் பதார்த்தத்தின் அளவை அதிகரித்தபோது (dose) ஞாபகசக்தியின் அளவும் அதிகரிப்பதை அவர்கள் அவதானித்தார்கள். மெலற்றோனின் சமிபாடடைந்து AMK ஆக மாறுவதை அவர்கள் தடுத்து நிறுத்தியபோது எலிகளின் ஞாபகசக்தியில் முன்னேற்றம் ஏதும் காணப்படாததையும் அவர்கள் அவதானித்தார்கள்.

ஞாபகசக்தியை எப்படிப் பரிசோதிக்கிறார்கள்?

எலியின் நடமாட்டத்தின்போது அதன் வழியில் குறுக்கிடும் பொருட்கள் முன்னரே பழக்கப்பட்டவையாக இருப்பின் அது அப்பொருளை ஆராய்வதில் அதிக நேரம் மினக்கெடுவதில்லை. பொருள் ‘புதியதாக’ இருந்தால் அதை ஆராய்வதில் அதிக நேரம் செலவழிக்கும். மனிதரிலும் இப்படித்தான் ஞாபகசக்தி அருகிப்போகும்போது (cognitive decline) ஏற்கெனவே அறிமுகமானவர்களையும், அறிமுகமான இடங்களையும் அடையாளம் காண்பதில் சிரமம் காணப்படுகிறது.

எலிகளில் செய்யப்பட்ட இப்ப்ரிசோதனைகளின்போது AKM பதார்த்தத்தை முற்றாகத் தடுத்தபோது ஏற்கெனவே பரிச்சயமான பொருட்களையே அவற்றால் ஞாபகமீட்டுக்கொள்ள முடியவில்லை. மாறாக AKM பதார்த்தத்தை அதிகரித்தபோது அவற்றால் அப்பொருட்களை விரைவாக அடையாளம் காண முடிந்தது.

பொருட்களை அறியும் பரிசோதனையை, மெலற்றோனின் அல்லது AMK எதுவுமில்லாது இளம் மற்றும் முதிய எலிகளில் செய்தார்கள். ஒரு பொருளை ஒரு இளம் எலிக்கு மூன்று தடவைகள் அறிமுகம் செய்தால் அது அப்பொருளை ஞாபகத்தில் வைத்துவிடும். ஆனால் முதிய எலிக்கு அது முடியாது. முதிய எலிக்கு AKA பதார்த்தத்தைக் கொடுத்த பின்னர் அதனால் பொருட்களை ஞாபகமீட்ட முடிந்தது.இப் பரிசோதனையின் முடிவாக, AMK எனப்படும் மெலற்றோனின் சமிபாட்டு விளைபொருளான ஒரு பதார்த்தம் இளைய மற்றும் முதிய எலிகளில் அவற்றின் ஞாபக்சக்தியை அதிகரிக்கின்றது என TMDU பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். மூளையின் கிப்போகம்பஸ் (hippocampus) எனப்படும் அனுபவங்களை நினைவுகளாக்கும் உறுப்பில், இப் பதார்த்தம் மாற்றங்களைச் செய்கிறது என்கிறார்கள் அவர்கள்.

அப்போ தூக்கத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் மெலற்றோனின் சுரக்கிறது. மெலற்றோனின் சமிபாடடையும்போது அதன் விளைபொருட்களில் ஒன்றாக AMK உற்பத்தியாகிறது. AMK ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் முதுமை மறதி போன்ற பல நோய்களுக்கும் சிகிச்சைகளைக் கண்டுபிடிக்க உதவுமா என்று பல விஞ்ஞானிகள் ஆராய முன்வந்துள்ளார்கள்.

எனவே அடுத்த தடவை மருந்தகத்துக்குப் போகும்போது வைட்டமின் மாத்திரைகள் பகுதியில் மெலற்றோனின் supplement இருக்கிறதா என்று பாருங்கள்.

அதற்கு முன் உங்கள் வைத்தியருடன் ஆலோசித்துவிட்டு … மெலற்றோனினைப் பாவித்துப் பாருங்கள்.