Spread the love

ஞாபகங்கள் ஒரு வகையில்  விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது. கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு  வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக  ஞாபகத்தில் இருக்கிறது.  பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும்  கடந்திருப்போம். சில ஒட்டிக்கொள்கின்றன. சில தொலைந்து போகின்றன. எது தொலையும் எது தங்கி நிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக  ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு  பள்ளிகால  கனவுகள்  பற்றியது.

சின்ன வயதில்  நண்பர் கூட்டம் ஒன்று  இருந்தது. பொதுவாக  எல்லோருக்கும் இருந்திருக்க கூடும். அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை போகிற போக்கில் பயணிப்பார்கள்.  ஏறினாலும் இறங்கினாலும் பெரிதாக அலட்டிக்கொள்வது கிடையாது. நாளையைப் பற்றி யோசித்து இருக்கிற பொழுதை சிதைக்கத் தெரியாதவர்கள்; முடிந்தவரை அந்தந்தப் பொழுதுகளுக்கு வஞ்சகம் செய்யாதவர்கள்; சின்னச்சின்னப்  பகிடிக்கும் வாய் கிழியச் சிரிப்பவர்கள்; கப்பல் கவிண்டாலும் கணக்கில் எடுக்க மாட்டாதவர்கள். அவர்களோடு  கூடி இருக்கிறபோது சந்தோசங்கள் தானாக வந்து சேரும்.

முன்பெல்லாம் ஊருக்குள் வீரசாகசங்கள் நடப்பதுண்டு. ஓடாமல் நிக்கிற  லொறியை இடுப்பில்  கட்டி இழுப்பது, ஓடுகிற  ட்ரக்டரை நெஞ்சில் ஏற்றுவது  செங்கட்டியை கையால் உடைப்பது என அது பலவகைப்படும். அவ்வப்போது ஆணழகன் போட்டியும் நடந்தேறும். எண்ணெய் பூசிய ஜாம்பவான்களின் தசைகள் மேடையேறித் தனித்தனியே நடனமாடும். இவைகளைப் பார்த்த எங்கள்  நண்பர் ஒருவருக்கும் பயில்வான் ஆகிற ஆசை வந்து தொலைத்தது.

அப்போதெல்லாம் பருத்தித்துறையில் பயில்வானாக மாற இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது. அதற்கு மேலும் இருந்திருக்க கூடும். ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்காததால் எங்களுக்கு தெரிந்திருக்க  வாய்ப்பில்லை.

சோதி அண்ணாவின் கராட்டி வகுப்புகள் வீரபாகுவின் கட்டடத்தில் மேல் தளத்தில் நடக்கும். பச்சை முட்டையை வெறும் வயித்தில் குடித்த பிறகு சோதி அண்ணாவிடம் கராட்டி பழகுவது ஒரு வழி.



சாண்டோ துரைரத்தினம் வீட்டில் பொடி பில்டிங் (body building) நடக்கும். இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்த கடலையை அவிக்காமல் சாப்பிட்ட பிறகு சாண்டோ அண்ணா  வீட்டில் பாரம் தூக்குவது மற்றைய வழி.

முட்டை விலை கட்டுபடியாகாது என்பது தெரிந்தது. பிறகு யோசிக்க என்ன இருக்கிறது. சாண்டோ வீட்டுக்கு போவதென நண்பர்கள் ஒருமனதாக முடிவுக்கு வந்தார்கள். கூட்டமாக சவனாய்க்கு போனோம். சாண்டோ துரைரத்தினம் வீட்டு கதவை தட்டினோம்.  பயில்வான் ஆகிற ஆசையை சொன்னோம். எங்களைப் பார்த்த சாண்டோவுக்கு சிரிப்பு வந்தது. முதலில் போய் படிக்கிற வேலையை பாருங்கள் பிறகு பயில்வான் ஆகலாம் என்றார். நாங்கள் விடுவதாக இல்லை.

Related:  ஜேபி ஆன கதை... பிரியதர்சன் பக்கங்கள்-13

அதிஸ்டம்  சொல்லிகொண்டா வருகிறது? அப்போதுதான் சாண்டோவின் இரண்டாவது மகன் ஹரி அறைக்குள் இருந்து எட்டி பார்த்தான். ஹாட்லியில் ஒன்றாக படிக்கிற கதையைச் சொல்லி எங்களுக்கும் பழக்கிவிடும்படி  அப்பாவிடம் சிபார்சு செய்தான் . வேறு வழியில்லாமல் சாண்டோவுக்கு  எங்களையும் ஆட்டத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று.

அடுத்த நாள் பின்னேரம் ரியுசனில் பாதிநேரம் இருந்தோம் மிகுதி நேரம் சாண்டோவின் வீட்டில் பயில்வான் பயிற்சியில் இருந்தோம். முதல் நாள்  பயிற்சி ஆரம்பமானது. கால்களும் கைகளும் இறுகிய பிறகுதான் பாரம் தூக்கமுடியுமென சொன்னார். முதலில் ஐயாயிரம்  தரம் இருந்து எழும்ப சொன்னார். இலக்கங்களில் கொஞ்சம் திருகுதாளங்கள் செய்து பார்த்தோம். அப்படியிருந்தும் யாராலும்  ஆயிரம் இலக்கத்தைக்கூடத்  தாண்ட முடியவில்லை. சரி நாளைக்கு வந்து ஐயாயிரம்  தரம் இருந்து எழும்பிய பிறகு பயிற்சியை தொடங்கலாம் என திருப்பி  அனுப்பி வைத்தார்.

அதற்கு பிறகு சாண்டோ வீட்டுக்கு மட்டுமல்ல சவனாய்க்குப் போவதையே நிறுத்திக் கொண்டோம்.  இப்படியாக  பயில்வான் கனவு ஒரே நாளில்  கலைந்தது.



இன்னுமொரு சம்பவம். எண்பத்து மூன்றின் கடைசி அல்லது எண்பத்து நான்கின் தொடக்கமாக இருக்க வேண்டும். வயதும் பக்குவமும் கொஞ்சம் கூடியிருந்தது. நாட்டின் நிலமைகள் வேறு திசையில் பயணிக்க தொடங்கியிருந்தன. பெரும்பாலான எங்கள் வயதுக்காரின் எண்ணங்களில் பெரும்  மாற்றம் தொற்றிக்கொண்டது. சிரிப்புகள் குறைந்து போயின. சீரியஸ் பேச்சுகள் வந்து சேர்ந்தன. ஜனநாயகமா அல்லது மாக்சிசமா ஈழத்தின் ஆட்சி என்பதுவரை அது நீண்டிருந்தது.  

அது ஒரு வழமையான சனிக்கிழமை. (CME) சிம்ஈயில் பகல் நேர வகுப்புகள் இருக்கும். புத்தகமும் கையுமாக வீட்டில் இருந்து புறப்பட்டேன்.  இனி புத்தகமும் நானும் வீடு திரும்பப்போவதில்லை என்பது தெரியும். யாருக்கும் அது பற்றி மூச்சுவிடவில்லை. இந்தியாவிற்கு பயிற்சிக்கு போவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிவாகியிருந்தது.

வெயில் மறையாத பின்நேர பொழுதொன்றில் மணற்காடு கடற்கரையை சென்றடைந்தோம். மீனவர் வாடியொன்றை ஒதுக்கியிருந்தார்கள். ஓட்டியும் வள்ளமும் வந்து சேரும்வரை அங்கு இருக்கும்படி சொல்லப்பட்டிருந்தது. கூட இருக்கிற மற்றையவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். நாட்டை விட்டு போவது பற்றிய எந்த பதட்டமும் இருக்கவில்லை. யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வந்தது பற்றிய சின்ன  உறுத்தல் மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது. அப்பாவின் சைக்கிளை வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல்  இடைநடுவில் போட்டு விட்டு வந்ததை சொல்லி ஒருவர் வருத்தப்பட்டார்.  திருநாவுக்கரசு மாஸ்டர் வகுப்பில் அரைவாசி பேரை காணாமல் தலையில் கைவைக்கபோகிறார் என சொல்லி இன்னுமொருவர்  சிரிக்க வைத்தார்.  நேரங்கள் நகர்ந்தன.



வானம் இருட்ட தொடங்கியிருந்தது. காற்று கொஞ்சம் பலமாக வீசியது. அது மணலை காவிவந்து விசிறி எறிந்தது.  அலைகள் ஆளுயர எழுந்து இறங்கியது. இடியும் மின்னலும் அந்த இரவை வெருட்டியது. சோவெனப் பெய்த மழை நிலமையை இன்னும் மோசமாக்கியது. இதுதான் கடலோர வாழ்கையாக இருக்கக்கூடும் என எங்களுக்குள் பேசிகொண்டோம். உண்மை அதுவல்ல. அதுவொரு பேய் காற்றும் கடல்கொந்தழிப்புமான அசாதாரணமான இரவு என்பது பின்னர் தெரிந்தது.  வள்ளம் இன்றைக்கு புறப்படுவதற்கு சாத்தியமில்லை என்பதை பக்கத்து வாடி மீனவர்கள்  சொல்லிப்போனார்கள்.  அவர்கள் காச்சிய கஞ்சியை  கொண்டு வந்து தந்தார்கள் . மணல் கஞ்சிக்குள் வந்து விழுவதை தடுப்பதுவும் நனையாமல் நிப்பதுவும்  பெரும் சிரமமாக இருந்தது. நித்திரை இல்லாத ஒரு முழு கடற்கரை  இரவை முதன் முதலில் பார்க்கக் கிடைத்தது.

Related:  ஜேபி ஆன கதை... பிரியதர்சன் பக்கங்கள்-13

படிக்க போன பிள்ளைகள் வீடுவந்து சேராததால் பருத்தித்துறையில் சில வீடுகள் அல்லோகல்லோலப்பட்டன. இரவு முழுக்கத் தேடியும் எந்த சேதியும் இல்லை. அப்போதெல்லாம் படிக்க போனவர் வீடு திரும்பவல்லையென்றால் இயக்கத்தில் ஒரு இலக்கம் கூடியிருக்கும். கொஞ்சம் மினக்கெட்டால் எந்த இயக்கம் என்ற துப்பு மட்டும் வேண்டுமானால்  கிடைக்கும்.

வள்ளம் போகாமல் வாடியில் தங்கியிருக்கிற செய்தி எப்படியோ காலையில்  ஊருக்குள் கசிந்தது.  பெரியவர்கள் மணற்காட்டுக்கு படையெடுத்தார்கள். கடல் கடந்த  பயிற்சி கைநழுவிப் போனது. இப்படியாக இந்தியக் கனவும் கைநழுவிப் போனது.

Print Friendly, PDF & Email