ஞானசேர தேரர் தலைமையில் ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ செயலணி உதயம்!


நான்கு முஸ்லிம்கள்இடம்பெறுகிறார்கள், தமிழர்கள் முற்றாகப் புறக்கணிப்பு

‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ சட்ட வரைவை (draft Act) உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்கு, கலகொடாத்தெ ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட செயலணியொன்றை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச நிறுவியிருக்கிறார்.

விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இச் செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலாளரான ஜீவாந்தி சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுதலையாகும் பிரச்சினைக்குரிய ஞானசார தேரர்

இச் செய்லணியில் இடம்பெறும் மற்றவர்கள்: பேரா.தயானந்த பண்டா, பேரா. சாந்திநந்தன விஜேசிங்கா, பேரா.சுமேத சிறிவர்த்தன, என்.ஜி. சுஜீத பண்டிதரத்ன, சட்டத்தரணி ஐரேஷ் செனிவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பெ, இராந்த நவரட்ண, பாணி வேவால, காலி உலாமா கவுன்சில் மெளலவி மொஹாமெட், மொஹாமெட் இந்திகாப், கலீல் ரஹ்மான் மற்றும் அசீர் நிசார்டீன் ஆவர்.

ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், தேசியம், மதம், சாதி அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக பிரஜை ஒருவர் பாரப்ட்சத்துக்குள்ளாக்கப்படாத அல்லது விசேடமான கவனிப்புக்குட்படுத்தப்படாத வகையில் நீதிபரிபாலனம் பரிபாலிக்கப்படுவதுடன் அப் பிரஜையின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும் என இவ்வர்த்தமானி அறிவித்தலின் சாரம் இருக்கிறது.

அத்தோடு, ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்ற இக் கருத்துருவாக்கம் தேசிய, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான விழுமியங்களை அனுசரிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் இவ்வறிவித்தல் வலியுறுத்துகிறது.

இச்செயலணிக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம்:

  1. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடையும் வகையில் ‘ஒருநாடு, ஒரு சட்டம்’ கருத்துருவாக்கம் இருக்க வேண்டும்;
  2. இது தொடர்பாக நீதி அமைச்சினால் ஏற்கெனெவே தயாரிக்கப்பட்ட சட்ட வரைவையும், திருத்தஙகளையும் ஆராய்ந்து, அவற்றில் பொருத்தமானவற்றை புதிய வரைவில் இணைத்துக்கொள்ள முடியுமா என இச் செயலணி தமது ஆலோசனைகளை வழஙக வேண்டும்.

பிரதி மாதமும், இச் செயலணி தமது அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்குவதோடு, அடுத்த வருடம் பெப்ரவரி 28 இற்கு முதல் இறுதி அறிக்கையையும் இச் செயலணி சமர்ப்பிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டிருக்கிறது.

வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கிலப் பிரதி