Uncategorized

ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணப்பேன் – இஸ்ரேல் பிரதமர்

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இஸ்ரேலிய தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்குக் கரையில் இருக்கும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணப்பேன் என பிரதமர் பெஞ்ஞமின் நெட்டன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

தற்போது இஸ்ரேலின் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், ‘ஏரியா C’ என அழைக்கப்படும், மேற்குக் கரையின் 30 வீதமானபாலஸ்தீனப் பிரதேசம். இங்கு 65,000 பாலஸ்தீனர்களும் 11,000 இஸ்ரேலிய அத்து மீறிய குடியேற்றவாசிகளும் வசிக்கிறார்கள். இராணுவம் குடியேற்றவாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

மிக வளமான விவசாய பூமியான இப்பிரதேசம் அயற் பிரதேசங்களைவிட சில பாகைகள் உஷ்ணமானதும் நிறைந்த நீர் வளத்தைக் கொண்டதால் வருடம் பூராவும் விவசாயம் செய்யக்கூடிய நிலங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. சிரியாவிலிருக்கும் அன்ரி-லெபனான் மலைகளிலிருந்து உற்பத்தியாகி வரும் ஜோர்தான் ஆற்றினால் வளம்பெறும் இப் பூமியில் கடந்த 10,000 வருடங்களாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இஸ்ரேலின் நட்பு நாடான இஸ்ரேல் ஈறாகப் பல அரபு நாடுகள் நெட்டன்யாஹுவின் இவ்வறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

“இன்று, நான் எனது உத்தேசத்தைச் சொல்கிறேன்: புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்ததும் ஜோர்தான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கு இறந்த கடல் (nothern Dead Sea -இது ஒரு ஏரி) பகுதிகளை இஸ்ரேலுக்குச் சொந்தமாக்குவேன். இஸ்ரேலிய மக்களான உங்களிடமிருந்து வலுவான ஆணை கிடைத்ததும், தேர்தல் முடிந்த கையோடு இதை நடைமுறைப்படித்துவேன் ” என நேற்று, ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பின்போது நெட்டன்யாஹு கூறினார்.

இத் தேர்தலில் நெட்டன்யாஹுவின் கட்சி ஆட்சியத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகின்ற நிலையில் கடும் போக்கு வாக்காளர்களினதும், கட்சிகளினதும் ஆதரவு அவருக்குத் தேவை. எனவே தான் இப்படியான கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தும் விடயங்களைப் பேசிவருகிறார். அதே வேளை அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சமாதானத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசனைகளை நிகழ்த்திய பின்னரே இஸ்ரேலினால் எதுவும் செய்ய முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

நெட்டன்யாஹுவின் இந்த அறிவிப்பிற்கு அமெரிக்க ஆதரவு உண்டா என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில், அமெரிக்க கொள்கையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

“இஸ்ரேலிய தேர்தலுக்குப் பிறகு எங்களுடைய ‘ சமாதானத்துக்கான பார்வை’ என்ற எமது தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்துவோம். இப் பிரதேசத்தின் நீண்டகால ஸ்திரம், பாதுகாப்பு, வாய்ப்புகள் போன்ற விடயங்களைத் தரவல்ல சரியான பாதையை நோக்கி நாம் நகர்வுகளை மேற்கொள்வோம்” என்ற அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

2017 இல் ரெல் அவிவ் இலிருந்த அமெரிக்கத் தூதரகத்தை சர்ச்சைக்குரிய பிரதேசமான ஜெருசலேமிற்கு இடம் மாற்றியதிலிருந்து, ட்ரம்ப் ஒரு நீதியான மத்தியட்சத்தை வகிக்கத் தகுதியற்றவர் எனக் கூறி பாலஸ்தீனியன் தரப்பு அமெரிக்க சமாதான முயற்சிகளை நிராகரித்து வருகிறது.

“நெட்டன்யாஹு கூறியபடி அப் பிரதேசங்களை இஸ்ரேலுடன் இணைப்பாராகில், இதுவரை இருதரப்பும் கையெழுத்திட்ட சகல் ஒப்பந்தங்களும், கடமைகளும் உடனேயே முடிவுக்கு வந்துவிடும்” என பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்திருக்கிறார்.

அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் எல்லோரும், இது இஸ்ரேல்-பலஸ்தீனிய சமாதான முயற்சிகளைப் பாதிக்கும் என, நெட்டன்யாஹுவின் திட்டத்தைக் கண்டித்திருக்கின்றனர். ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ வெளியுறவு அமைச்சர்களின் அவசரகாலச் சந்திப்பு ஒன்றினைச் சவூதி அரேபியா கோரியிருக்கிறது.

1967 இஸ்ரேலிய – அரபு போரின்போது இஸ்ரேல் மேற்கு கரையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

“அளவுக்கதிகமான அமெரிக்க ஆதரவு தான் நெட்டன்யாகுவின் இந்த அபார நம்பிக்கையை வளர்த்துவிட்டிருக்கிறது. ட் ரம்ப் இல்லாவிட்டால் னெட்டன்யாஹு இப்படிப் பேசியிருக்க மாட்டார்” என அரபுத் தரப்பு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நெட்டன்யாஹுவின் பேச்சைத் தொடர்ந்து காசா பிரதேசத்திலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இஸ்ரேலும் பதிலுக்குத் தாக்குதல்களை மேற்கொண்டது. பாதிப்புகள் பற்றி எதுவும் பேசப்படவில்லை.