ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை | ஆர்ப்பாட்டக்காரரைப் பாரவண்டியால் நசித்துக்கொல்ல முயற்சி
காயங்களுடன் சாரதி கைது
ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை தொடர்பாக, அமெரிக்காவில் இன்று மினியாபொலிஸ் நகரின் பெருந்தெரு ஒன்றில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தவர்களை நசித்துக் கொல்லத் திட்டமிட்ட பாரவண்டி சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள், பெண்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வார்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பாரவண்டி (semi truck) ஒன்று திடீரென்று ஆர்ப்பட்டக்காரரை நோக்கி வந்தது. சுமார் 30 மைல்கள் வேகத்தில் வந்துகொண்டிருந்தாலும் ஆர்ர்ப்பாட்டக்காரரை ண்மிக்கும் போது அது வேகத்தை அதிகரித்தது எனச் சாட்சியங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். நல்ல வேளையாக வண்டி வருவதை அவதானித்த பலர் மற்றவர்களைப் பாதையினின்றும் தள்ளிக் காப்பாற்றிவிட்டனர்.
வாகனம் நிறுத்தப்பட்டுச் சாரதி தாக்கப்பட்டதாகவும், தற்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இச் சம்பவத்தை நேரில் பார்த்த பிரெட் ஹொஃப்லாண்ட் தனது ருவிட்டர் மூலம் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
வண்டியின் வேகத்தைக் குறைக்க சிலர் தமது மிதி வண்டிகளை வண்டியின் முன்னர் எறிந்ததாக இன்னுமொரு சாட்சி தெரிவித்துள்ளார்.
கறுப்பின ஜோர்ஜ் ஃபுளொயிட் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து 6 வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இக் கொலையைப் புரிந்தவரான வெள்ளையினப் பொலிஸ் அதிகாரி டெரெக் ஷோவின் மூந்றாம் நிலைக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மீதமுள்ள மூவரையும் கைது செய்யும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.