World

ஜோர்ஜ் ஃபுளோய்ட் | என்ன நடந்தது?

கைது முதல் மரணம் வரை கடைசித் தருணங்கள்

மே 25 அன்று ஜோர்ஜ் ஃபுளோய்ட் மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரிகளின் கரங்களில் கொலையுண்டதற்கு முன்னான தருணங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் காணொளியும், 911 உரையாடல் பதிவுகளும் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், டெறெக் ஷோவின் என்பவருக்கு இரண்டாம் நிலைப் பொலிஸ் குற்றமும், தோமஸ் லேன், ஜே.கியூங், ரூ தாவோ ஆகியோருக்கு, கொலையில் உதவியதற்காக, சூழ்நிலைக் கொலைக் குற்றங்களும் (manslaughter charges) பதிவாகியுள்ளன. நால்வரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

911 அழைப்பு

மஹ்மூட் அபுமேயாலே யின் கடையில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் சிகரட் வாங்கியிருக்கிறார். பணம் கொடுத்துவிட்டு வந்து வாகனத்தில் ஏறியிருக்கும்போது கடைக்காரர் வந்து ஜோர்ஜ் கொடுத்த 20 டாலர் ‘கள்ள நோட்டு’ என்றும் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க ஜோர்ஜ் அதற்கு மறுத்துவிட்டார் எனவும், ஜோர்ஜ் அப்போது மிகவும் போதையில் இருந்தார் எனவும் கடைக்காரர் கூறியிருக்கிறார்.

கடைக்காரர் 911 இற்கு அழைத்தபோதும் ஃபுளோய்ட் எங்கேயும் போகாது, தனது வாகனத்துள்ளேயே இருந்திருக்கிறார்.

“சரி, நான் உதவியை (பொலீசை) அனுப்பியுள்ளேன். அவர்கள் வருவதற்கு முன் ‘குற்றவாளி’ இடத்தை விட்டு விலகினால் உடனே அழைக்கவும்” என 911 உதவியாளர் கூறுகிறார்.



பொலிஸ் வருகை

மாலை 8:08 மணிக்கு பொலிஸ் அந்த இடத்திற்கு வருகிறது. அதிகாரி தோமஸ் லேன் வாகனத்துள் ஓட்டுனர் ஆசனத்தில் இருக்கும் ஃபுளோய்ட்டுடன் பேசுகிறார். பின்னர் லேன் தனது கைத்துப்பாக்கியை உருவி ஃபுளோய்ட்டின் கைகளை ஸ்டியரிங் வீல் மீது வைக்கும்படி பணிக்கிறார். பின்னர் அதிகாரி லேன், ஃபுளோய்ட்டை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்து கைவிலங்குகளைப் போடுகிறார். அப்போது ஃபுளோய்ட் முரண்டுபிடித்ததாகவும், கைவிலங்குகள் போடப்பட்டதன் பிறகு ஒத்துழைத்ததாகவும் பொலிஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மஹ்மூட்டின் கடையிலுள்ள வெளிப்புறக் காமிராவின் பதிவுகளில் ஃபுளோய்ட் முரண்டு பிடித்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

மால 8:14 போல் ஃபுளோய்ட் பொலிஸ் வாகனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். அப்போது திடீரென்று அவர் நிலத்தில் விழுந்துவிடுகிறார். தனக்கு ‘இறுக்கமான இடங்களுக்குள் இருப்பது அச்சம் தருகிறது (claustrophobic)’ என ஃபுளோய்ட் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது. பொலிஸ் வாகனத்துள் ஏறுவதற்கு ஃபுளோய்ட் முரண்டு பிடித்ததாகவும் அதனால் அவர் வேண்டுமென்றே நிலத்தில் வீழ்ந்ததாகவும் பொலிஸ் பதிவு கூறுகிறது.

வாகனத்தில் ஏற்றப்பட்ட ஃபுளோய்ட்டை, மாலை 8:19 அளவில், அதிகாரி ஷோவின், பொலிஸ் வாகனத்தின் ஆசனத்தில் (passenger side) இருந்து வெளியே இழுக்கிறார். அப்போது ஃபுளோய்ட், கைகளில் விலங்குகள் மாட்டியபடியே நிலத்தில் முகம் குப்புற விழுகிறார். அப்போது ஷோவின் தனது முழங்காலை ஃபுளோய்ட்டின் பின் கழுத்தில் வைத்து நிலத்தோடு அழுத்தி நெரிக்கிறார். அதிகாரி கியூங்க் முதுகையும், லேன், கால்களையும் பிடித்துக்கொள்கின்றனர்.



அப்போது ஃபுளோய்ட் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” எனப் பல தடவைகள் கூறுகிறார். ‘பிளீஸ்’, ‘அம்மா’ என அவர் பல தடவைகள் கெஞ்சுவது காணொளியிலும், பதிவுகளிலும் காணக்கூடியதாகவுள்ளது. அப்போதும் அதிகாரி ஷோவின் தன் முழங்காலை அகற்றவில்லை. மற்றய அதிகாரிகளும் தங்கள் நிலைகளிலிருந்து மாறவில்லை. ஃபுளோய்ட்டின் ‘கெஞ்சல்களுக்கு’ ப் பதிலளித்த அவர்கள் “நீ ஒழுங்காகப் பேசக்கூடியதாகவிருக்கிறதுதானே” எனப் பதிலளித்துள்ளார்கள்.

” நாங்கள் அவரைப் புரட்டிப் போட வேண்டுமா” என்று அதிகாரி லேன், ஷோவினைக் கேட்கிறார். அதற்கு ” இல்லை, அவரைப் பிடித்த இடத்திலேயே அவர் வைத்துக்கொள்ளப் படுவார்” என ஷோவின் பதிலளிக்கிறார்.

“அவரது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ (worried about excited delirium) என நான் அஞ்சுகிறேன்” என அதிகாரி லேன் ஷோவினுக்குக் கூறுகிறார். “அதற்காகத்தான் நாங்கள் அவரது வயிற்றைக் கீழே வைத்திருக்கிறோம்” என ஷோவின் பதிலளிக்கிறார்.

மாலை 8:24 மணிக்கு ஃபுளோய்ட்டின் உடலில் அசைவு இல்லாமல் போய்விடுகிறது. அவரது அசைவற்ற உடலையும், பேச்சு நிறுத்தப்பட்ட நிலையையும் காணொளி காட்டுகிறது. ஒரு அதிகாரி ஃபுளோய்ட்டின் நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறார். “நாடித்துடிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என அவர் கூறுகிறார்.

மாலை 8:25 மணி: அதிகாரிகள் இன்னும் அதே நிலைகளில் தான் இருக்கிறார்கள்.

மாலை 8:27 மணிக்கு, ஃபுளோய்ட்டின் கழுத்திலிருந்து ஷோவின் தனது முழங்காலை நீக்குகிறார். மொத்தத்தில், ஷோவின் தனது முழங்கால் மூலம், 8 நிமிடம் 46 செக்கண்ட்களுக்கு ஃபுளோய்ட்டின் கழுத்தை நெரித்து வைத்துக்கொண்டிருந்திருக்கிறார். ஃபுளோய்ட்டின் அசைவு நின்றுபோய் 2 நிமிடங்கள் 53 செக்கண்டுகளுக்கு அவர் தொடர்ந்தும் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்திருக்கிறார்.



மரண பரிசோதனை அறிக்கை

திங்களன்று இரண்டு மரண பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒன்று உத்தியோகபூர்வமானது, மற்றது ஃபுளோய்ட் குடும்பத்தால் பிரத்தியேகமாகச் செய்யப்பட்டது. இரண்டுமே, ஃபுளோய்ட்டின் மரணம் ஒரு கொலை என முடிவு செய்துள்ளன. ஆனால் அதற்கான காரணத்தில் இரண்டும் வேறுபடுகின்றன.

ஷோவின் முழங்காலிலினால் கழுத்தை நெரித்ததாலும், மற்றய அதிகாரிகள் ஃபுளோய்ட்டின் முதுகில் தமது உடல்களினால் அழுத்தத்தைக் கொடுத்ததாலும் ஏற்பட்ட மூச்சுத் திணரலினாலேயே மரணம் ஏற்பட்டது என்கிறது பிரத்தியேக அறிக்கை.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ அதிகாரியின் அறிக்கைப்படி, “அதிகாரிகளின் கட்டுப்பாடு, கழுத்து நெரிப்பு ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது” எனக் கூறப்படுகிறது. மூச்சுத் திணறல் பற்றி இங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு, ஃபுளோய்ட்டின் உடலில் போதை வஸ்து, வலி மருந்து போன்றந இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன எனவும் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மரணத்தின் காரணம் கொலை எனபது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.