• Post category:WORLD
  • Post published:January 6, 2021
Spread the love

நேற்று நடைபெற்று முடிந்த ஜோர்ஜியா மாநிலத்தின் இரண்டு செனட்சபை ஆசனங்களுக்கான தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கெலி லோஃப்ளெரைத் தோற்கடித்ததன் மூலம், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ரஃபேல் வார்ணொக் செனட்டாராகத் தெரிவுசெய்யப்படுகிறார்.

ஜனாதிபதி ட்றம்பின் அதி தீவிர ஆதரவாளரான கெலி லோஃப்ளரை வார்ணொக் தோற்கடித்துவிட்டார் என அசோசியேட்டட் பிரெஸ் இன்று அதிகாலை 2:00 மணிக்கு அறிவித்துள்ளது. வார்ணொக், அட்லாண்டாவில் மார்ட்டின் லூதர் கிங் ஒரு காலத்தில் போதகாராகவிருந்த எபினேசர் பப்டிஸ்ட் தேவாலயத்தில் மூத்த போதகராகப் பணியாற்றுகிறார்.

இவ் வெற்றியின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஜனநாயகக் கட்சியின் கனவு நிறைவேறும் தருணம் அண்மித்து வருகிறது. செனட் சபையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜனநாயகக் கட்சிக்கு மேலும் ஒரு ஆசனம் தேவைப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கிவந்த ஜோர்ஜியா மாநிலத்தை மீண்டும் ஜனநாயகக்கட்சியின் பக்கம் எடுத்துக்கொண்ட பெருமை ஜோ பைடனைச் சாருகிறது.

செனட் சபைக்கான இரண்டாவது தேர்தலில் குடியரசுக் கட்சியின் கடந்தகால உறுப்பினர் டேவிட் பேர்டூவை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில், முன்னாள் விவரணப்படத் தயாரிப்பாளர் ஜொன் ஒஸ்ஸோஃப் போட்டியிடுகிறார். இருவரும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது உள்ளனர்.



இந்த இரண்டு ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி பெறுமாகில், அது அமெரிக்க அரசியலில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனது இரும்புப் பிடிக்குள் செனட் சபையை வைத்திருக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மக்கொண்ணெல், அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் பல சமூகத் திட்டங்களைத் தோற்கடிக்க வழி செய்த ஒருவர். செனட் சபையின் வெற்றியை ஜனநாயகக் கட்சி உறுதிப்ப்டுத்துமானால் மிட்ச் மக்கொண்ணெலின் அதிகாரம் பறிக்கப்படும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பல நேர்மையான குடியரசுக் கட்சி வாக்காளர்களை அந்நியப்படுத்தியிருந்தமையும் இத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு பெருகியமைக்குக் காரணம்.

அதே வேளை, ஜனநாயகக் கட்சி சார்பில் பிரசாரம் செய்த ஜோ பைடனது அயராத பங்களிப்பு இத் தேர்தலின் வெற்றிக்கு வலுச் சேர்த்துள்ளது. “இந்த ஒரு மாநிலத்தினால், நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் தலைவிதியையே மாற்றிக்கொள்ள முடியும்” என அவர் தனது பிரச்சாரத்தை முடித்துவைக்கும்போது தெரிவித்திருந்தார்.

வார்ணொக் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர். ஜோர்ஜியா மாநிலத்தில் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியினர் கறுப்பின மக்களாவர். இத் தேர்தலில் கறுப்பின மக்கள், தொண்டர்கள், வாக்காளர்கள் என வரலாறு காணாத அளவுக்குத் தமது உழைப்பை நல்கியிருந்தனர்.


Print Friendly, PDF & Email