Spread the love

ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலையின் எதிரொலி

சுகாதார மற்றும் நாகரீக அலங்காரப் பொருட்களைச் சந்தைப்ப்டுத்திவரும் ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் தோல் வெளிற்றும் பூச்சுக்களை இனிமேல் விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட் விவகாரம் உலகெங்கும் ஏற்படுத்தி வரும் நிறப்பிரச்சினை தொடர்பான விவாதங்களைக் கருத்தில் எடுத்து அந் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

ஜோன்சன் & ஜோன்சன், தற்போது நியூறோஜெனா (Neutrogena Fine Fairness cream) என்ற பெயரில் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும், கிளீன் அண்ட் கிளீயர் (Clean & Clear fairness cream) என்ற பெயரில் இந்தியாவிலும், தோல் வெளிற்றும் கிரீம்களை விற்று வருகிறது.



“எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் தோல் வெளிற்றும் கிரீம்கள் பற்றிய விளம்பரங்களில் நாம் கையாண்டுவரும் மொழிப் பிரயோகங்களில் “எங்கள் தயாரிப்புகள் உங்கள் சருமத்திலுள்ள கறுப்பு புள்ளிகளை அகற்றுவதன் மூலம் உங்கள் சொந்த தோலின் தனித்துவமான நிறத்தைவிட நல்ல வெள்ளை நிறம் அல்லது வெளிறிய நிறத்தைத் தருகின்றன” எனக்கூறப்படுவது பற்றிக் கடந்த சில வாரங்களில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடைபெற்று வரும் இனக்குரோத நடவ்டிக்கைகளிந் பின்னணியில் நாம் இவ்வகையான எமது தயாரிப்புகளை இனிமேல் விற்பனை செய்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். சில வர்த்தக ஸ்தாபனங்களில் இப் பண்டங்கள் விற்பனைக்கு இருந்தாலும், அவை விற்றுத் தீரும்போது நாம் அவற்றைத் தொடர்ந்து சந்தைகளுக்கு வழங்கமாட்டோம். இணையத்தளங்களிலிருந்தும் இப் பண்டங்களுக்கான அறிவித்தல்கள் நீக்கப்பட்டுவிடும்” என ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜோன்சன் & ஜோன்சன் இனிமேல் தோல் வெளிற்றும் பண்டங்களை விற்காது 1
நியூட்றோஜீனா – ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்பு

தோல் வெளிற்றும் பொருட்களைப் பாவிப்பதில் இந்தியாவே உலகத்தில் மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது. இத் தோல் வெளிற்றும் கிரீம்களுக்காக விளம்பரங்களைச் செய்த பல இந்திய நட்சத்திர பிரபலங்கள், கடந்த சில வாரங்களாக இப் பண்டங்களின் பாவனைக்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள்.

தோல் வெளிற்றும் பண்டங்ககளின் விற்பனை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. யூறோ மொனிற்றர் இன்ரெனாஷனல் என்ற நிறுவனம் வர்த்தகப் பண்டங்களின் பாவனை பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறது. அதன் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டு மட்டும் 6,277 வித்தியாசமான தோல் வெளிற்றும் பண்டங்கள் அறிமுகமாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜோன்சன் & ஜோன்சனின் இந்த முடிவு பெருமளவில் சந்தை நிலவரத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. 2019 இல் இந்தியாவில் மட்டும் இச் சந்தை $450 மில்லியன் விற்பனையை ஈட்டிக்கொடுத்திருக்கிறது. இதில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டட், புறொக்டர் & காம்பிள், லோறியால் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே பெரிய பங்கை எடுத்துவிட்டன. ‘ஃபெயர் & லவ்லி’ என்ற ஹிந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பு இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

Print Friendly, PDF & Email
Related:  தமிழ்நாட்டில் இன்னுமொருவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!