ஜோக்கோவிச்சுக்கு அவுஸ்திரேலிய நுழைவு அனுமதி வழங்கியமை சரியானதே – நீதிமன்றம் தீர்ப்பு
கோவிட் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாமல் அல்லது கோவிட் தொற்று இல்லை என்பதை நிரூபிக்காமல் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாது என்ற சட்டத்தின்கீழ் அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உலகின் ரென்னிஸ் சம்பியனான நோவாக் ஜோக்கோவிச்சை உடனடியாகத் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
டிசம்பர் மாதத்தில் செய்த கோவிட் பரிசோதனைகளின்படி அவருக்கு நோயில்லை என வழங்கப்பட்ட பழங்கப்பட்ட பத்திரம் செல்லுபடியாகும் என ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் முன்வைத்திருந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இருப்பினும் குடிவரவு அமைச்சரின் அதிகாரத்தைப் பாவித்து அவருக்கு வழங்கப்பட்ட நுழைவு அனுமதியை ரத்துச்செய்ய முடியுமென அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய குடிவரவுச் சட்டங்களை மீறி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு ஜோக்கோவிச் பாவித்த மருத்துவ விதிவிலக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அவது நுழைவு அனுமதியை மறுத்திருந்தது. ஜோக்கோவிச்சுக்கு அனுமதி வழங்கியமை தவறு என நாடு முழுவதும் அவுஸ்திரேலிய பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் அதேவேளை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசனும் இவ்விடயத்தில் சட்டமீறல் இடம்பெற்றிருப்பதாகவும் ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே’ என்ற தொனியிலும் கருத்து தெரிவித்துள்ளார்.