Opinion

ஜே.வி.பி. யின் இந்திய வரவு: சென்னை புறக்கணிக்கப்பட்டது ஏன்?

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா தனது பரிவாரங்களுடன், பெப்ரவரி 05 அன்று உத்தியோக பூர்வ அழைப்பை ஏற்று இந்தியா சென்று அதன் பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவால் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜயசங்கர் ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். புது டெல்ஹி, அஹ்மதாபாத், திருவனந்தபுரம் ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும், ஐந்து நாட்கள் நீடிக்கும், இப்பயணத்தில் ஜே.வி.பி. அங்கம் வகிக்கும் கூட்டணியான மக்கள் சக்தியின் (NPP) தேசிய நிறைவேற்றவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் உடன் சென்றிருக்கிறார். சென்னை இப்பயணத்தில் இடம்பெறவில்லை என்பது மிக்கியமாக அவதானிக்கப்படவேண்டியது.

இதற்கு முதல், கடந்த வருடம், திசநாயக்கா சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கிறார். கடந்த அக்டோபர் 27 அன்று அவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் பல முக்கிய நகரங்களுக்குச் சென்றிருந்தாலும் தமிழர் அமைப்புக்களையோ அல்லது தலைவர்களையோ சந்திக்க முயற்சித்தமை பற்றி அறிய முடியவில்லை. அவரது அடுத்த பயணம் கனடாவிற்காகவும் இருக்கலாம். இவையெல்லாவற்றிலுமிருந்து உய்த்துணரக்கூடிய ஒரு அனுமானம் அவர் தமிழர்களை அங்கீகரிக்கவோ அல்லது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டவோ முயலவில்லை என்பதே. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தமிழர் தரப்பு அவரை உதாசீனம் செய்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்க் 2022 முதல் திசநாயக்காவைச் சந்தித்து வருபவர். அமெரிக்கா பயணமாவதற்கு ஒரு வாரத்திற்கு முதல் அமெரிக்க தூதுவர் பெலவத்தவிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்திற்குச் சென்று கலந்துரையாடியிருக்கிறார். ‘அரகாலயா’ மக்கள் புரட்சியின் பின்னால் ஜே.வி.பி. உட்பட்ட ‘இடதுசாரிகள்’ இருந்தனரென்பதும் இவர்கள் எல்லோருக்கும் பின்னால் இருந்தவர் யாரென்பதும் பலருக்கும் தெரிந்த பரகசியம்.

மொத்தத்தில் ஜே.வி.பி. உருமாற்றம் (metamophorsis) பெற்றிருக்கிறது. அது தந்திரமா அல்லது ராஜதந்திரமா தெரியாது. ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான 76 ஆண்டுகால வரலாற்றில் முதல் தடவையாக ஆட்சி இரண்டு பாரம்பரிய கட்சிகளிடமிருந்து முற்றாக மூன்றாவது கட்சியிடம் கையளிக்கப்படவிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றெடுத்த பொதுஜன பெரமுனவையும் ஒரே பாரம்பரியத்தினுள்தான் அடக்கவேண்டும்.

எழுபதுகளில் றோஹண விஜேவீர மூலம் பரவலாக அறியப்பட்ட இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. யிடம் ஆட்சி சென்றிருந்தால் சிலவேளைகளில் தமிழர் தேசத்தை இந்தியா துண்டித்திருக்க வாய்ப்புண்டு. சீன / வடகொரிய ஆதரவுடன் வளர்த்தெடுக்கப்பட்ட ஜே.வி.பி. யில் இடதுசாரி சித்தாந்தங்கள் வலுவாகக் காணப்பட்டிருப்பினும் பின்னாட்களில் அது சிங்கள தேசியத்தின் ஆதிக்கத்தால் உருமாற்றம் கண்டு இதர பாரம்பரிய கட்சிகளின் இன்னுமொரு வடிவத்திலேயே இயங்கி வந்தது. இதனால் அது எப்போதுமே இந்திய / தமிழர் எதிர்ப்புக் கொள்கையை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தது. இதன் விளைவாகத்தான் 13 ஆவது திருத்தத்தின் அங்கமான வடக்கு-கிழக்கு இணைப்பை அதனால் துண்டிக்க முடிந்தது.

****

55 வயதுடைய களனி பல்கலைக்கழகப் பட்டதாரியான அனுரகுமார திசநாயக்கா 2000 ஆண்டு முதல் பாரளுமன்ற உறுப்பினராகவும், 2004 முதல் கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 2019 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 418,558 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தவர். நாகரிக (designer) ஆடைகளிலும் சொகுசுப் பயணங்களிலும் பெரு விருப்புக்கொண்ட அவருக்கும் இடதுசாரிச் சித்தாந்தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையெனப் பலர் கூறினாலும் கட்சி அவரையே தலைவராக்கியிருக்கிறது. அதற்குக் காரணம் அவர் நாகரிகமாக நடந்துகொள்பவர், வசீகரமாகப் பேசக்கூடியவர் என்பதனாகவிருக்கலாம். அவர் தலைமையின் கீழ் ஜே.வி.பி. களைகட்டியிருக்கிறது என்பது உண்மை.

இடதுசாரியம் என்ற மெழுகு மாளிகை அதன் ஆரம்பத்திலிருந்தே உருக ஆரம்பித்துவிட்ட ஒன்று. 1991 இல் சோவியத் குடியரசின் வீழ்ச்சி ஏறத்தாழ அதை முற்றாக அழித்துவிட்டிருந்தது. இதற்குப் பின்னால் ஏகாதிபத்திய சக்திகள் இருந்தன / இருந்துவருகின்றன என வேண்டுமானால் சுய கழிவிரக்கம் கொண்டு சமாளித்துப் போகலாம். இதிலிருந்து விலகிப்போன ரஸ்யாவும், விலகிவரும் சீனாவும் இக் கருத்துக்கான சாட்சிகள். 1500 களில் வாழ்ந்த இத்தாலிய தத்துவஞானியான நிக்கோலோ மக்கியாவெல்லி கூறியதைப் போல ‘முடிவே பாதையைத் தீர்மானிக்கும்’ (the end justify means) என்ற தத்துவமே என்றும் நிலைத்து நிற்கிறது. ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றத் தீர்மானித்து விட்டது. பாதை இப்போது வளைந்து நிமிர்ந்து சற்றிலும் எதிர்பாராத வகையில் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முடிவு ஆச்சரியத்தையும் தரலாம். இந்தவிடத்தில் தமிழர் போராட்டம் உங்களது நினைவுக்கு வந்து தொந்தரவு பண்ணினால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

ஜே.வி.பி. தலைவரின் இந்திய வருகை இரு சக்திகளினதும் பாதை மாற்றங்களையும் அவற்றின் முடிவு ஒரே இடமென்பதையும் கட்டியம் கூறுகின்றது. இந்தியா இல்லாத சமன்பாடு இலங்கையில் ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்காது என ஜே.வி.பி.யும் இலங்கை மக்களின் அடுத்த தேர்வு ஜே.வி.பி. தான் என இந்தியாவும் தீர்மானித்து இருவரும் ஒரு முடிவை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிகிறது. இப்பாதைமாற்றங்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் ஜே.வி.பி. தனது இடதுசாரிச் சித்தாந்தத்தைச் சற்றே தள்ளி வைத்திருக்கவும் வாய்ப்புண்டு. எனவே ‘இந்திய மேலாதிக்கம்’, ‘ஆக்கிரமிப்பு’, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம்’ போன்ற சொற்கள் இனிமேல் ஜே.வி.பி. வகுப்புகளில் கற்பிக்கப்படா என எதிர்பார்க்கலாம்.

****

புதிய பாதையின் முடிவில் ஜே.வி.பி. ஆட்சி அமைந்தால் எப்படியிருக்கும் என்றொரு கற்பனை விரிந்தது. அமைந்தால் அது ஒரு ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதற்காக உழைக்கும்; திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படும். திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு சர்வதேச வர்த்தகத்தை வளர்த்துக்கொள்ளும். அது டொலரிலா அல்லது BRICS நாணயத்திலா என்பதைத் தீர்மானிக்க குறைந்தது மூன்று வருடங்களாவது தேவைப்படலாம். சீன-இந்திய உறவுச் சமநிலையைப் பேணுவதற்கு ஜே.வி.பி. எடுக்கவிருக்கும் முயற்சிக்கு இந்தியா வழக்கம்போல நெளிந்து இடம் கொடுக்கும். ‘இந்திய விரிவாக்க’த்தை விமர்சித்துவந்த ஜே.வி.பி. யின் வயதாகிய தோழர்களைச் சமாளித்து நடைமுறை யதார்த்தத்தை ஆதரிக்கும் புதிய ‘படித்தவர்கள்’ பொறுப்பேற்கும்வரை இந்தியா நெளிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் மீண்டுமொரு தடவை தமிழர்களின் அபிலாட்சைகள் இந்தியாவினால் கைவிடப்படலாம். இம்மாற்றங்களை நடைமுறைப்படுத்த அவகாசம் தேவையெனக்கூறி நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை உடனடியாக ஒழிக்காமல் ஒரு தவணையாவது ஜே.வி.பி. ஆட்சி காலத்தைக் கடத்திவிட வாய்ப்பிருக்கிறது.

மாற்றங்களுக்கான அவகாசம் என்ற மன்னிப்புடன் 13 ஆவது திருத்தம் தள்ளிவைக்கப்படும். 1988 இல் நடைபெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தல்களை ஜே.வி.பி. பகிஷ்கரித்தமைக்கு ‘அது இந்திய விரிவாக்கத்தின் பிள்ளை’ என்பது காரணம் எனினும் பின்னர் அவ்வெதிர்ப்பைக் கைவிட்டு தேர்தல்களில் பங்குபற்றியமைக்குக் காரணம் தமது மக்களாதரவைக் காட்டி சிறுகச் சிறுக மத்தியை நோக்கி நகர்வதற்கான உத்தியெனவே பார்க்கப்பட்டது. மத்திக்கு வந்த பின்னர் ஜே.வி.பி. யிற்கு மாகாணசபைகள் தேவைப்படா. ஆனாலும் இந்தியாவைப் பகைக்காமல் இருப்பதற்காக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம்.

****

ஜே.வி.பி. யின் ஆட்சியில் அமெரிக்க எதிர்ப்பு ஏறத்தாழ இல்லாது போகும். சர்வதேச நாணய நிதியம் உட்பட வெளிநாட்டுக்கடன்கள் தீர்க்கப்படும்வரை வெளிவிவகாரக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் இருக்கமாட்டா. 1970 களில் இருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கும் தற்போதுள்ள ஆதரவாளர்களுக்கும் பாரிய வித்தியாசமுண்டு. கழுத்துகளில் பட்டிகளோடு சொந்த வாகனங்களில் வேலைக்குப் போகும் புதிய தலைமுறையினர் வேறு ரகத்தினர். ‘அரகாலயா’ விற்குப் பின்னான வாக்காளர்களிடம் ராஜபக்சக்களின் பணமும், மிரட்டல்களும் எடுபடாது.

ஜே.வி.பி. ஆட்சி மாற்றத்தைத் தக்கவைப்பதற்காக உலக அரங்குகளில் தமிழர்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் சர்வதேசத்தின் குரல்கள் அடங்கிப் போகும். புலம் பெயர் தமிழர்களது குரல்கள் கொடி, பதாகை, வாகனப் பேரணிகளுக்குள் அடங்கிப்போகும்.

வடக்கு கிழக்கில் உரிமைப் போராட்டங்களை மெளனிக்க வைப்பதற்காக ஜே.வி.பி. அரசு அபிவிருத்திகளில் அதிகம் மினக்கெடும். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாகி வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியின் ‘அரசியல் தீர்வு’ ஏகாதிபத்தியம் ஒழிந்து தென்னிலங்கைக் கட்சிகளின் ‘அபிவிருத்தி’ ஆதிக்கம் வளர இடமுண்டு. மத்திய பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாக இருந்தால் அரசியலமைப்பு மாற்றப்படுவது நிச்சயம். அப்போது இந்தியா முற்றாக நெளிந்து வளைந்து போகுமானால் 13 ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் மீண்டும் சிங்களம், பெளத்தம் உரிய இடங்களில் அமர்ந்துகொண்டு ஏனைய இன, மதச் சமூகங்களை ஏளனமாகப் பார்க்கும். வர்த்தக விரிவாக்கம் ஒன்றின் மூலமாக மட்டுமே இலங்கையைச் சீன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கலாம் என்ற சங்கிகளின் சித்தாந்தத்தின் பிடியில் தமிழர் விடுதலை நிச்சயம் அடிபட்டுப் போகும். ஜே.வி.பி. தலைவரின் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பயணம் இதையேதான் சுட்டிக்கட்டுகிறது.

****

அப்போ ரணில் விக்கிரமசிங்கா? ரணில் தனது அதி மேதாவித்தன வெளிப்பாட்டினால் இந்தியாவின் வேண்டாத பெண்டாட்டி ஆகிவிட்டார். இந்தியா அவரை நம்பத் தயாரில்லை. ராஜபக்சக்களே அதன் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது. இதனால்தான் ஜனாதிபதியாகி ஒரு வருடத்தின் பிறகு ரணிலுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு வந்தது. ராஜபக்சக்கள் ஊழலில் சிறந்தவர்கள் மட்டுமல்ல சிங்கள – பெளத்த தேசிய வெறியர்களையும் கைக்குள் வைத்திருந்தவர்கள். இந்தியாவின் வியாபார நலன்களுக்கு அது சாதகமாக இருந்தது. ரணிலுக்கு ராஜபக்ச அரசியல் கைவராத கலை. நாட்டை ஓரளவுக்கு ‘மேற்கத்தைய’ ஸ்டைலுக்கு கொண்டுவருவதையே அவர் விரும்பினார். அதற்குத் தமிழரின் பங்கு முக்கியம் என்பதையும் அவர் நம்புகிறார். இந்தியாவின் ஆதிக்கத்தைவிட இலங்கைத் தமிழரின் ஆதிக்கம் அவருக்கு உகந்ததாகவிருந்தது. அவரின் ஆட்சியில் இந்தியா எதிர்பார்த்தது கிட்டவில்லை. ராஜபக்சக்களை அகற்றி ரணிலைக் கொண்டுவந்தது அமெரிக்காதான். இதில் இந்தியாவிற்கு உடன்பட்டு இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. இன்றய நிலையில் ஜே.வி.பி. என்ற குதிரையில் பணத்தைக் கட்டுவதே சிறந்தது என இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் தீர்மானித்துவிட்டது போலத் தெரிகிறது. எனவேதான் அநுரகுமார திசநாயக்காவின் சூறாவளிச் சுற்றுப்பயணம்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று தேர்தலில் இருந்து ஒதுங்குவது. அல்லது சஜித் பிரேமதாசவுடன் இணைந்து பொது வேட்பாளராகக் குதிப்பது. இந்திய-அமெரிக்க கூட்டுச் சதி அவருக்கு எதிரான விளைவுகளைத் தருமெனவே படுகிறது. நொண்டிக் குதிரையில் அவர்கள் பணத்தைக் கட்ட மாட்டார்கள். அவர் வென்றால் தமிழர் எதிர்பார்த்த ஒரு சில அரசியல் சலுகைகளாவது கிடைக்கலாம் என மூத்த தமிழ் அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களது வாக்குகளும் அவருக்குக் கிடைக்க வேண்டும். பிரிந்துபோயிருக்கும் தமிழ்சமூகத்திடம் அதை எதிர்பார்க்க முடியாது.

தமிழருக்கு பாதைகள் தான் முக்கியமே தவிர முடிவல்ல என்பதே முடிந்த முடிவு. வாழ்க தமிழினம்! (Image Credit: The Hindu)