ஜேர்மானியரின் நான்காவது இராச்சியம்? – நாஜிகளின் மீள் வருகை
சிவதாசன்
வரலாறு சுழல்கிறது. ஹிட்லரின் ஆவி மீண்டும் உருக்கொண்டு அடுத்த தலைமுறை ஜேர்மானியர்களின் உடல்களில் புகுந்து உருக்கொள்ள வைக்கிறது. ஜேர்மனியில் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களின் பின்னால் ஏகப்பட்டவர்கள் கரந்துறையலாம் என்னும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஹிட்லர் முயன்று தோற்றுப்போன ‘மூன்றாவது ராச்சியத்தை’ மீண்டும் கட்டியெழுப்ப முனைப்புகள் நடைபெறுகின்றன. உலகெங்கும் வலதுசாரிகளின் ஒன்றிணைவு, மீளெழுச்சி துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. மக்களாட்சியின் மகிமை குன்றிப்போய் மீண்டும் மன்னராட்சியை உருவாக்க சிலர் துடிக்கிறார்கள்.
ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் மிகுந்த பணத்தை வைத்திருப்பவர்களும், சிலர் ஆயுதங்களை வைத்திருப்பவர்களுமென மிகவும் பயங்கரமான குழுவென்று அவர்கள் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டார்கள். பின்னர்தான் தெரியவந்தது இவர்களின் பின்னால் ஒரு பேரியக்கம் கட்டமைப்புப் பெற்று வருவது. ‘றைஸ்ச்பூகெர்’ (Reichsbuerger) என ஜேர்மானிய மொழியில் அழைக்கப்படும் இவர்களை ‘றைஸ்ச் இராச்சியத்தின் குடிமக்கள்’ எனத் தமிழ்ப்படுத்தலாம்.
றைஸ்ச் இராச்சியத்தின் வரலாறு
எமக்குத் தெரிந்த வரையில் ஹிட்லர் என்ற நாஜி உருவாக்க முனைந்த இராச்சியத்தை ‘மூன்றாவது இராச்சியம்’ (Drittes Reich) என்பார்கள். ‘ட்றிட்டிஸ்’ , ‘றைஸ்ச்’ என்ற சொற்களுக்கும் ‘திரி’, ‘ராச்சியம்’ என்ற சொற்களுக்கும் மூலம் ஒன்றா என்பதும் ஆராய்ச்சிக்குரிய விடயம். இது மூன்றாவது இராச்சியம் என்றால் முதலிரண்டும் எப்போது இருந்தன?
‘இராச்சிய மக்கள் இயக்கம்’ (Reichbuerger Movement) என்ற இயக்கம் 1871 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஜேர்மானிய மக்களின் புனித ரோமானிய சாம்ராச்சியம் என அழைக்கப்பட்ட இது 1806 வரையில் நீடித்தது. இரண்டாவது இராச்சியம் 1806 முதல் 1918 வரை கோலோச்சியது. இது பெரும்பாலும் மதவொழுக்கமான ‘புனித தந்தை, புனித மகன், புனித ஆவி’ என்ற தத்துவத்தை மக்களிடம் போதிப்பதை முதன்மைப்படுத்தியது. மூன்றாவது இராச்சியம் 1933 முதல் 1945 வரை, ஹிட்லரால் நிறுவ முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டது. அந்த இராச்சியத்தை மீள்நிர்மாணிக்கவென்று புதியதொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

ஜேர்மனியில் கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக அரசு அமத்தி வாசிக்கிறது எனவே படுகிறது. இதைப் பிரபலப் படுத்தினால் அதன் ஆதரவு பல்கிப் பெருகிவிடவும் கூடும். ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அரச உபகரணங்களின் வார்த்தைப் பிரயோகங்கள் உண்மையைப் போட்டுடைத்துவிட்டதோ எனவும் தோன்றுகின்றது. ‘அரசைக் கவிழ்க்க ‘றைஸ்ச்’ சதி’ என்று செய்திகள் வருமளவுக்கு இக்கூட்டம் பலம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. 1871 இல் போல ஒரு மன்னராட்சி ஒன்றை நிறுவுவதற்கு இக் கூட்டம் முயல்கிறது என விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கிறது. வரப்போகும் நான்காவது இராச்சியத்தின் மன்னராக அவர்கள் இராஜ பரம்பரையைச் சேர்ந்த 13 ஆவது ஹைன்றிக் இளவரசர் ரூஸைத் தெரிவுசெய்திருக்கிறார்களாம்.
இக் குழுவுக்கான போர்ப்பயிற்சிகள் ஜேர்மனியின் தூரிங்கியா மாநிலத்திலுள்ள பர்ணசாலையொன்றில் (hunting lodge) நடைபெற்றுவந்ததாக அதை முற்றுகையிட்டதன் மூலம் தகவல்களை காவற் படையினர் பெற்றுள்ளனர். இப் பர்ணசாலை இளவரசர் ரூஸுக்குச் சொந்தமானது. 19 ஆம் நூற்றாண்டு கோதிக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் இப்பர்ணசாலை ஆயுதப் பயிற்சிக் களமாகவும், கூடுமிடமாகவும் பாவிக்கப்படுகிறது என காவற் படையினர் சந்தேகிக்கின்றனர். இக்களமிருக்கும் பாட் லோபெண்ஸ்டீன் என்னும் சிற்றூரில் வாழும் மக்களுக்கு அனுப்பட்ட கடிதங்களில் அவர்களது ஜேர்மானிய கடவுச் சீட்டுகள் இனிமேல் மதிக்கப்பட மாட்டா என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இளவரசர் ரூஸின் நாட்டின் குடியுரிமைக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென அது கோருவதாகவும் அவ்வூர் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
இச்சதிகாரர்கள் ஆயுதங்களோடு சென்று ஜேர்மானிய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்து மக்கள் எழுச்சியைத் தூண்டிவிடத் திட்டமிட்டிருந்ததாக காவற்துறை கூறுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் இராணுவ, காவல்துறை அதிகாரிகள், ஜேர்மனியின் மாற்றீடு கட்சியின் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஒரு ரஷ்ய பிரஜை ஆகியோர் அடங்குவர்.
புள்ளிகளை இணைத்தல்
மக்களைப் பொறுத்தவரை அவர்கள் யாரோ ஒருவருக்கு அல்லது எதோ ஒன்றுக்கு விசுவாசமாக இருக்கவே பழகிக்கொண்டவர்கள். குலங்களாக (tribes) இருக்கும்போது குலத் தலைவர்களுக்கும் பின்னர் குறுநில அரசர்களுக்கும், தொடர்ந்து மன்னர்களுக்கும் / தெய்வங்களுக்கும் விசுவாசமாக இருக்கப் பழக்கப்பட்ட மக்கள் ஜனநாயகம் என்ற மாற்றுபதேசிகளால் தேசங்களுக்கும், கொடிகளுக்கும் இப்போது அரசியல்வாதிகளுக்கும் விசுவாசமாக இருக்கப் பழக்கப்பட்டு விட்டார்கள். இதிலும் சலித்துப்போக அவர்கள் மனங்களை மன்னராட்சி மகிமை ஆக்கிரமிக்கிறது. இது ஜனநாயகப் பிரசங்கிகளின் மகா தோல்வியெனவே கொள்ள வேண்டும்.
துரும்பர் காலத்தில் அமெரிக்காவில் பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டதற்கும் தற்போது ஜேர்மனியில் பாட் லோபெண்ஸ்டீன் எழுச்சிக்கும் இடையே கோடொன்றைப் போடமுடியாது எனச் சொல்ல முடியாது. துரும்பர் வடகொரியாவின் சர்வாதிகாரியைச் சந்தித்தபின் தானும் அவரைப்போல் இருக்கவேண்டுமென விரும்பியதாகச் செய்திகள் வந்திருருந்தன. மத்திய கிழக்கு, மற்றும் சுல்தான் ஆட்சிகள் இன்னும் வெற்றிகரமாக கோலோச்சுவதும் அவற்றுடன் ஜனநாயக கோமாளிகள் கைகோர்த்துக் களிநடனம் புரிவதும் மன்னராட்சியின் மகிமையைக் கனவுகாண்பவர்கள் மனங்களில் உற்சாகத்தைத் தரலாம். நாம் தமிழர் மட்டுமென்ன. பொன்னியின் செல்வனில் மயங்கி சோழரின் மீள்வருகைக்காக கனவுகாணவில்லையா?
வராலாறு சுழலுமென்றும் தெரியும். அது நமது வாழும் காலத்தில் சாத்தியமாகுமென்று தெரியாது.