World

ஜேர்மனி: ஹனோவர் நகரத்தில் பொதுக் கட்டிடங்களில் வெந்நீர் பாவனைக்குத் தடை

யூக்கிரெய்ன் விடயம் தொடர்பாக ரஷ்யாவுடன் எழுந்த பிணக்கைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு வழங்கிவரும் எரிவாயுவின் அளவை ரஷ்யா கணிசமாகக் குறைத்திருந்தது. தற்போது எரிவாயு வழங்கும் ஒரு குழாயைச் சீரமைப்புக் காரணமாகச் சில வாரங்கள் மூடுவதற்கு ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வரும் எரிவாயு விநியோகத்தில் தடை ஏற்படுமென்பதால் ஜேர்மனி பலவழிகளிலும் எரிவாயுப் பாவனையைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் ஹனோவர் நகராட்சி தனது பொறுப்பிலிருக்கும் பொதுக் கட்டிடங்களில் வெந்நீர் விநியோகத்தைத் தற்காலிகமாகத் தடைசெய்துள்ளதுடன் வெந்நீரின் உச்ச வெப்பநிலையையைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளது.

எரிவாயுவைச் சேமிக்க கேர்மனி எடுத்த முடிவின் பிரகாரம், ஹனோவர் நகரத்திலுள்ள பொதுக் கட்டிடங்கள், விளையாட்டரங்குகள், தேகாப்பியாச நிலையங்கள், நீச்சல் தடாகங்கள் போன்ற இடங்களில் வெந்நீர் விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பொதுக்கட்டிடங்களில் வெந்நீரின் அதியுச்ச வெப்பநிலை 15 பாகை செல்சியஸைத் தாண்டக்கூடாது என நகராட்சி ஆணை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை பொதுக்கட்டிடங்களின் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும் என்பதோடு இதர மாதங்களில் கட்டிடங்களின் வெப்பமூட்டிகள் முற்றாக நிறுத்தப்படலாமெனவும் நகராட்சி எச்ச்சரித்துள்ளது. மேலதிகமாக வெளிப்புற வெளிச்சம் மற்றும் தேவையற்ற அலங்கார நீரூற்றுகள் போன்றவையும் அணைக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

சக்தி சேமிப்புக் காரணங்களுக்காக ஹனோவர் மாத்திரமல்லாது டுசுல்டோர்ஃப் நகரம் உள்ளிட்ட மேலும் பல நகரங்களும் இதே போன்ற நடவடிக்கைகளுக்குத் தயாராகின்றன. சராசரி பாவனையிலிருந்து 15% சக்தி சேமிப்பை எய்தவேண்டுமென்று இந் நகரங்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் ஜேர்மானிய மக்களது எரிவாயுக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்குமென வியாழன்ன்று அரசாங்கம் எச்சரிந்த்திருந்தது. அக்டோபர் 1 முதல் ஆரமபமாகவிருக்கும் இவ்வதிகரிப்பு செப்டம்பர் 2024 வரை நீளலாம் என ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன.

சூழல் பாதுகாப்புத் திட்டங்களின் காரணமாக கேர்மனி தனது நிலக்கரியைப் பாவித்து மின்சாரம் உற்பத்தியாக்குவதைத் தவிர்த்து எரிவாயுவைப் பாவித்து மின்சார உருவாக்கத்துக்கு மாறியிருந்தது. இதற்கான எரிவாயுவின் சுமார் 30% த்தை ரஷ்யாவே வழங்கி வந்தது. யூக்கிரெய்ன் போர் ஆரம்பமாகியதிலிருந்து நேசநாடுகள் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவிடம் வாங்கும் எரிவாயுவின் அளவை ஜேர்மனி கணிசமான அளவு குறைத்திருந்தது.

நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக மின்சாரத்தின் விலை 1 கிலோவாட்மணிக்கு 1.5 முதல் 5 யூரோக்கள் உயர்த்தப்படலாம் என பொருளாதார அமைச்சர் றொபேர்ட் ஹேபக் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக வருடமொன்றுக்கு 20,000 கி.வா.ம. சக்தியைப் பாவிக்கும் சராசரி வீடொந்றின் வருடாந்த மின்சாரக் கட்டணம் 1000 யூரோக்களால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.