ஜேர்மனி | தமிழர்களின் இரண்டாம் கட்ட நாடுகடத்தல்களுக்குத் தயாராகிறது!

பல மனித உரிமைகள் அமைப்புக்களினதும் எதிர்ப்புக்களையும் சட்டை செய்யாது, ஜேர்மனி, கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி 24 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்தியிருந்தது.

தற்போது மேலும் பல தமிழர்களை நாடுகடத்த அது தாயாராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 2021 இல் ஜேர்மனியின் சில நகரங்களில் நூற்றுக்கு மேலான தமிழ் அகதிகள், எதிர்பாராத வேளைகளில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இடைத்தங்கல் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுப் பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் இம் மனிதாபமற்ற நடவடிக்கைகளை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களும் பலவித ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர். இருப்பினும் கடைசி நிமிடத்தில் டுசுல்டோர்ஃப் விமானத்தில் வைத்து விடுவிக்கப்பட்ட நான்கு பேரைத் தவிர மீதமுள்ள அனைவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு விட்டனர். இதே போன்று சுவிட்சர்லாந்திலுமிருந்து ஏககாலத்தில் பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர். கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் விமான நிலைய அதிகாரிகள் குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைந்திருந்தனர்.

இலங்கையில் தமிழ் மற்றும் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என சர்வதேச நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 வது அமர்வின்போது கொண்டுவந்த தீர்மானத்தின் இணைப் பிரேரணை நாடான ஜேர்மனி, அது கொண்டுவரப்பட்டுச் சில நாட்களிலேயே தமிழ் மக்களை இலங்கைக்கு நாடு கடத்தியிருப்பது குறித்து பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்திருந்தன. துன்புறுத்தல், மற்றும் மனிதாம்சமற்ற வழிகளில் கைதிகளை நடத்துவது, தண்டனை வழங்குவது போன்ற விடயங்களில் இலங்கை மிக மோசமாக நடந்துகொள்கிறது என்பதை மனித உரிமை ஆணையாளர் மிகவும் காத்திரமாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தும், ஜேர்மனி எந்த உலக அபிப்பிராயத்தையும் மதிக்காமல் மீண்டுமொரு தடவை தமிழர்களை நாடுகடத்துவதற்குத் தயாராகிறது.

இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைப் பதிவுசெய்துவரும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற அமைப்பு, 2015-2018 வரை பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 178 துன்புறுத்தல் சம்பவங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. இதைவிட ஐ.நா.வின் விசேட விசாரணைக் குழுவின்முன் வெளிநாடுகளிலுள்ள 22 பேர் சாட்சியமளித்திருக்கிறார்கள். 2019 இல் கோதாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேலு 5 பேர்கள் கடத்தல், துன்புறுத்தல், பாலியல் வன்முறைகள் தொடர்பாக, வெளி நாடுகளில் வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர் என இத் திட்டத்தின் அமைப்பாளரான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

அதே வேளை, இங்கிலாந்தில் நடைபெற்ற உயர் தீர்ப்பாயம், அமைதிக்கான தமிழ் செயற்பாட்டாளர்களை இலங்கை அதிகாரிகள் மோசமாக நடத்திவருகிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டதுடன், இலங்கை ஒரு ‘சர்வாதிகார ஆட்சி’ என்பதையும் அங்கீகரித்திருக்கிறது.

This comes as Britain’s Upper Tribunal has officially recognised the threat of “ill-treatment” to peaceful Tamil activists posed by the Sri Lankan state which the tribunal defines as an “authoritarian regime”.

ஜேர்மனியில் தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராகச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைப்பான ‘ஈழத் தமிழர்களுக்கான மக்கள் சபை’ (People’s Council of Eelam Tamils in Germany / Volkrat der Eelam Tamilen (VETD) நாடுகடத்தல்களை எதிர்த்துத் தொடர்ந்தும் பலவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.