LIFEபிரியதர்சன்

ஜேபி ஆன கதை… பிரியதர்சன் பக்கங்கள்-13


இலங்கையில் ஜேபி (Justice of Peace) என்று பதவி ஒன்று இருக்கிறது.  சுத்த  தமிழில் சமாதான நீதிவான் என்று  சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை.  சில  ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். “இப்ப ரொம்ப பிசி ” பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட  மாட்டார்கள். அவர்களைப் பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபி யாக வருவதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம்.

எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார்.  இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலைக் குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம்  நேரம் செல்லப் போனால் காட்டுகிற இடத்தில் கையொப்பம் போட்டு வேறு ஒரிடத்தில் சீலைக் குத்துவார். மற்றும்படி அவர் அருமையான  நல்ல ஜேபி.

நான் முதன்முதலாகக் கடவுச்சீட்டு எடுப்பதற்கு அவரிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறேன். என்னைபோலப் பலருக்கு அவரின் கையொப்பத்தை நம்பிப் பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னுமொரு வகை ஜேபி இருக்கிறார்கள்.

மொரட்டுவ பஸ் வெள்ளவத்தைக்கு வந்து சேர்கிறபோது  பெரும்பாலும் பஸ் முழுக்க ஆட்கள் இருப்பார்கள்.  பெரிய மனசு படைத்த  கண்டக்டர் ஒரு காலையும் இரண்டு கைகளையும் பஸ்சுக்குள் திணிக்க  என்னை போன்றவர்களுக்கும் வசதி செய்து தருவார்.ஒருமாதிரி  ஏறி ஒற்றை காலில் தொங்கி மெஜஸ்டிக் சிட்டியில் இறங்கி ஒரு குட்டி நடை போட்டால் பம்பலபிட்டி கடற்கரை தெரியும்.  அதற்கு பக்கத்தில்  காலாவதி திகதி முடிந்த பழைய கட்டடம் ஒன்று இருந்தது. அதுவே அப்போது பாஸ்போர்ட் ஒப்பீஸ்சாகவும்  இருந்தது. அந்த பகுதியில் போகிறபோது கொஞ்சம் தலையை திருப்பினாலும்  பின்னால் மந்திரவாதி போல ஒருவர் வந்து நிப்பார். ஜேபி சைன் வேணுமா என்று  கேட்பார். ஐம்பது ரூபாய்க்கு ஜேபி சைன் சுடச்சுட கிடைக்கும். அவர்கள் உண்மையான ஜேபியா அல்லது  கள்ள ஜேபியா என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

ஜேபி பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான். இதற்கு மேல் ஒரு அங்குலமும் நான் அறியேன்.

கிறிஸ்துவுக்கு பின் வந்த காலமொன்றில் மகிந்த குடும்பமாக அரசை ஆண்டார் . புத்த மதம் அரசமதம் என்பதால் சிலசமயங்களில் அவருக்கு அகிம்சை மற்றும் காருண்யம்   பற்றிய ஞாபகம்  வருவதுண்டு. அப்போதெல்லாம்  அவருடைய சீருடை அணிந்த படைவீரர்கள் கொலை போன்ற சிறு  பாவங்களைச் செய்ய மாட்டார்கள். வெள்ளை வானும் சீருடைய அணியாத அவருடைய மற்றைய  படையினரும் அந்தக் குறையை நிவர்த்தி செய்தார்கள். இப்படியாகப் புத்தமதத்தின்  மகிமையை  உலகறியச் செய்த பெருமைக்காக இப்போதும் அவரைச் சிலர் தலையில் வைத்துக்  கொண்டாடுவதுண்டு.

அந்தக் காலத்தில்  நான் கொழும்பில் இருந்தேன். அப்போதெல்லாம் காந்தி லொட்ச்சில்  இடியப்பமும் சொதியையும் சப்பிட்டு நெல்சன் பிளேசில் பொழுதை போக்குவது வாழ்வின் பெரும் பேறாக இருந்தது. வெள்ளவத்தையில் இருந்த பழைய வீடுகள் வானுயர்ந்த தொடர் மாடி மனைகளாக  புது வடிவம் எடுத்தது. சுவிசிலும் யுகே (uk) இலும் இருந்த நம்மவரின் ஆசையில் அது பெரும் வியாபாரமாக மாறியது. பேராதனையிலும் மொரட்டுவவிலும் படித்த இன்ஜினியர்கள் சிலர் புதிதாக குட்டி முதளாளிகளாக மாறினார்கள். நானும் சிலகாலம் குட்டி முதளாளியாக உருமாறியிருந்தேன்.இங்கிலாந்தில் படிப்பை முடித்த மயந்த திசாநாயக்க அமைச்சர் ஆகிற கனவில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். மயந்த திசானாயக்க காமினி திசாநாயக்கவின் கடைசி மகன். அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்கவின் தம்பி. இப்படி நீண்ட  பட்டியல் இருந்தாலும்  அரசனின் முதுகை சொறிவதை தவிர அமைச்சர் ஆக வேறு வழி கிடையாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அரசன்  காலில்  போய் கிடந்தார். அரசர் அவரை வெள்ளவத்தையின் ஆளுங்கட்சி அமைப்பாளராக்கி அடுத்து வருகிற தேர்தலில் வென்று எம்பி (mp) ஆகி வரும்படி சொல்லி அனுப்பி வைத்தார். தேர்தலில் வெல்கிற சூக்குமம் எந்தப் புத்தகதிலும்  இல்லாததால் மனுசன் கொஞ்சம் திண்டாடிப்போனார்.  

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.

பல வருடங்களாக  பழம் திண்டு கொட்டை போட்ட வெள்ளவத்தை  விதானையார் மயந்த திசானாயக்கவுக்கு  ஆலோசனை சொன்னார். அதன் பிரகாரம் விதானையாரே புதிய அமைப்பாளரைச் சந்திக்கிற கூட்டம் ஒன்றையும்  ஒழுங்கு செய்தார்.

கொள்ளுபிட்டியில் இருந்த அமைப்பாளரின் மாளிகையில் அந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பறையில் பெரிய சோபாவில் அவர் இருந்தார். பக்கத்தில் வெள்ளைநிற அலசேசன் நாய் அவரது காலை நக்கி தன் விசுவசத்தைக் காட்டியபடி இருந்தது. மற்றைய பக்கத்தில் விதானையார் கட்டிய கையோடும் குனிந்த முதுகோடும் முடிந்த வரை தன் மரியாதையைக் காட்டியபடி நின்றார். அவர்களுக்கு முன்னால்  நாங்கள் பத்து பேர் வரை அமர்ந்திருந்தோம். எல்லோரும் வெள்ளவத்தையில் வியாபாரம் செய்பவர்கள். அரிசி கடை வைத்திருப்பவர், எண்ணெய்க் கடை வைத்திருப்பவர், கட்டடம் கட்டுபவர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.அமைப்பாளர் பேசினார். வருகிற தேர்தலில் தான் வெல்ல உதவவேண்டும் என்றார் . அதற்கு பிறகு வெள்ளவத்தையில்  பாலும் தேனும் ஓடுமென்றார். கொழும்பில் தமிழருக்கு ஒரு தூசியும் விழாமல் பார்ப்பதாகவும் சொன்னார். பேசி முடிந்த பிறகு விதானையாரைத் திரும்பி பார்த்து சொன்னதெல்லாம் சரியா என மெதுவாக கேட்டார். விதானையார்  அவரது காதுக்குள்  ஏதோ குசுகுசுத்தார்.  பிறகு  எங்களை  பார்த்து “உங்கள் எல்லோரையும் ஜேபி ஆக்குவேன்” எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.

இரண்டு கிழமைக்கு பிற்பாடு ஒரு கடிதம் வந்திருந்தது. நான் ஜேபி ஆகியிருப்பதாகவும் பொருத்தமான திகதி ஒன்றில்  சத்தியபிரமாணம் செய்யும்படியும் எழுதப்பட்டிருந்தது.

ஜேபி ஆன வெட்கம் கெட்ட கதையை  எப்படிச் சொல்வது?  பிளேன் ஏறி கரை சேரும்வரை அடை காத்தேன். இன்னுமொரு  நல்ல ஜேபி யை இலங்கைத் திருநாடு இழந்து போனது.