ஜேன் குடோல் (1934 – 2025): இந்த யுகத்தின் பெருமாது
சிவதாசன்
அக்கறையின்மையே எங்களது எதிர்காலத்திற்கான அச்சுறுத்தல். நாங்கள் ஒவ்வொருவரும் எமது வாழ்வுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாமுட்பட, எம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்கள் மீதும் மதிப்பும் அன்பும் வைத்திருக்க வேண்டும் – ஜேன் குடோல்
பேசா உயிரினங்களின் பெருமாது என வர்ணிக்கப்படும் ஜேன் குடோல் அக்டோபர் 01, 2025 அன்று, தனது 91 ஆவது வயதில் மறைந்தார். எதிர்மறை, இழிவு, கோபம், குறுமனம் எதுவுமில்லாது உலகை நல்வழிப்படுத்த முயன்ற, விலங்குகளுக்கும் உணர்வுகளுண்டு என்று நிரூபித்த ஒரு மகா தாய் ஜேன் குடோல்.
தன்சானிய வனங்களில் சிம்பான்சி என்ற குரங்கினம் மீது ஆராய்ச்சியை ஆரம்பித்து உலக சமாதானத்திற்கான தூதுவர் என ஐ.நா. வினால் அங்கீகரிக்கப்பட்டவர் அவர். வசீகரம், திறந்த மனது, நம்பிக்கை போன்ற குழந்தைகளின் சுபாவத்துடன் எப்போதும் உலகத்தை அகன்ற விழிகளுடன் ஆச்சரியத்தோடு விழிக்கும் ஒரு சிறந்த மாது அவர்.
பசுமை பொழியும் தன்சானியாவின் கோம்பே ஓடை சரணாலயத்தில் விலங்குகளின் குணாதிசயங்களைக் கற்றறியவென ஆரம்பித்தது அவரது கற்கைப் பயணம். பயமுறுத்தும் தோற்றம் கொண்ட சிம்பான்சி குரங்குகளிடையே குடும்ப உறவு பலமானது என்பதையும் அவர்களது தலைவர்கள் மென்மை, அக்கறை, பாசம் ஆகிய நற்குணங்களைக் கொண்டவை எனவும் வன்முறை மூலம் ஆதிக்கத்தைக் கொண்டுவர முயலும் ஆண் தலைவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை எனவும் அவரது ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. மனிதர்களைப் போலவே, தேவையேற்படின் கருவிகளை உருவாக்கிப் பாவனையிலீடுபடுத்துமளவுக்கு அவை விவேகமானவை என்பதையும் அவர் கண்டறிந்திருக்கிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீதான நீண்டகால புரிதல்களைச் சிதறடிக்கும் வகையிலானவை அவரது ஆராய்ச்சிகள்.
குடோலுக்கு 23 வயதாகவிருக்கும்போது, 1957 இல், தன்சானியாவிலிருந்த மானிடவியல் பேரறிஞரான லூயிஸ் லீக்கியின் அலுவலகத்தில் லீக்கியின் செயலாளராகப் பணியை ஆரம்பித்தார். அவரது ஆர்வத்தையும் திறமையையும் அவதானித்த லீக்கி சிம்பான்சி குரங்குகள் பற்றிய கற்கையில் ஈடுபடும்படி அவருக்கு ஆலோசனை வழங்கினார். பெரும்பாலான விஞ்ஞானிகள் மூடிய மனங்களுடன் பணிகளை ஆரம்பிக்கவே பயிற்றப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த லீக்கி முற்று முழுதாகத் திறந்த மனதுடன் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். குடோலின் இச்சுபாவம் லீக்கிக்கு மிகவும் சாதகமாகப் போய்விட்டது.
கருவிப் பாவனை
மனித குலத்தின் மிக நெருங்கிய உறவினர்களான சிம்பான்சிகளை ஆராய்வதன் மூலம் ஆரம்ப கால மனித சமூகம் பற்றி அறிவது மட்டுமல்லாது ஆணாதிக்க சமூகத்தின் சமுதாயத் தோற்றுவாய் பற்றி பாரபட்சமின்றிய ஆய்வை மேற்கொள்ள ஆணை விட பொறுமை காக்கும் ஒரு பெண்ணே தோதானவர் என லீக்கி நினைத்து குடோலை இப்பணியில் அமர்த்தினார். கருவிப் பாவனையில் சிம்பான்சிகள் சமர்த்தர்கள் என்பதை ஆறே மாதங்களுக்குள் குடோல் கண்டுபிடித்துவிட்டார். நீண்ட புற் தகடுகளை கறையான் புற்றுக்களில் நுழைத்து அதனால் வெளியேறும் கறையான்களை இரையாக்கிக்கொள்ளும் இக்குரங்குகளின் விவேகம் பற்றி அவரே முதன் முதலில் கண்டறிந்திருக்கிறார். குடோலின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து “நாம் இனிமேல் கருவிகளையும், மனிதர்களையும் மீள் வரைவு செய்துகொள்ள வேண்டும் அல்லது சிம்பான்சிகளையும் மனிதர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என லீக்கி அப்போது குறிப்பிட்டிருந்தார்.
உணர்வுகள், கலாச்சாரம்
விலங்குகளுக்கும் உணர்வுகளும் கலாச்சாரப் பின்பற்றுதலும் உண்டு என குடோல் கூறுகிறார். சிம்பான்சிகள் விடயத்தில் குல மரபுகளுக்கேற்ப சமூகங்களாகப் பிரிந்து வாழ்தல் என்பது வழமை என குடோல் கண்டறிந்தபோது பெரும்பாலான விஞ்ஞானிகள் இதை எள்ளி நகையாடியிருந்தார்கள். ‘கோம்பேயின் சிம்பான்சிப் போர்’ பற்றி அவர் எழுதியது மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்று. நான்கு வருடங்களாக நடைபெற்ற இப்போரில் ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எட்டு மூத்த ஆண் குரங்குகள் இன்னுமொரு சமூகத்தின் ஆறு ஆண் தலைவர்களைக் கொன்றுவிட்டு அச்சமூகத்தின் பிரதேசத்தைக் கைப்பற்றின எனவும் ஆனால் மிக விரைவிலேயே, மூன்றாவதொரு சமூகத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்த ஆண் குரங்குகள் வெற்றியாளர்களைக் கொன்றுவிட்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட்டன என இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
தன்னம்பிக்கை
திடசங்கற்பம், வலு, தன்னம்பிக்கை ஆகியன குடோலின் குணாதிசயங்களில் சில. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு இலகுவில் அடிபணிந்து போகமாட்டார். அதே வேளை மற்றவர்களின் செயற்பாடுகளில் தலையிடாமல், அவற்றைப் புறந்தள்ளாமல் தனது சொந்த பாதையில் சென்று அவரது கண்டுபிடிப்புக்களைச் செய்திருந்தார்.
அவரது கற்பனைத் திறனும் விலங்குகள் மீதான பாசமுமே அவரது ஆபிரிக்கப்பயணத்தின் உந்துதல்கள். சிறு வயதில் அவர் வாசித்த, 1912 இல் எட்கார் றைஸ் பறோவினால் எழுதப்பட்ட, “ரார்சான் ஒஃப் த ஏப்ஸ்” என்ற கதையை வாசித்தது முதல் சிம்பான்சிகள் மீது அவரது கவனம் அதிகரித்திருந்தது. இக்கதையை வாசித்தபின் “ரார்சான் பிழையான ஜேனைத் திருமணம் செய்துவிட்டார்” என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.
சிறந்த கதை சொல்லி
ஜேன் குடோல் ஒரு சிறந்த கதை சொல்லி. விலங்குகளைப் பற்றிய உண்மையான அறிவை மக்களிடம் பரப்ப கதைகள் மூலம் சொல்வதே சிறந்த வழி என அவர் நம்பினார். குரங்குகள், டொல்ஃபின்கள், எலிகள், கணவாய்கள் போன்ற விலங்குகளின் உயர் விவேகம் பற்றி அவர் கவர்ச்சியான படங்களின் உதவியுடன் கதைகள் மூலம் விளக்குவார். பல உலகத் தலைவர்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், இயற்கை பேணுவோர் போன்றோருக்கு ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாது பல மில்லியன் குழந்தைகளின் வாழ்விலும் அவர் ஊடறக் கலந்திருந்தார்.
‘ஜேன் குடோல் இன்ஸ்டிடியூட்‘ என்ற நிலையத்தின் மூலம் உலகின் பல மூலைகளிலுமுள்ள மக்களிடம் இயற்கையைப் பேணுதல் பற்றிய விழிப்புணர்வுகளை ஏறபடுத்துவது மட்டுமல்லாது இளையோரை ஈடுபடுத்தும் வகையில் “றூட்ஸ் & ஷூட்ஸ்” எனும் பெயரில் அவர் ஆரம்பித்த அமைப்பு 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. மனிதர், விலங்குகள் மற்றும் சூழல் ஆகியவற்றிடையேயுள்ள தொடர்புகள் விடயத்தில் குழந்தைகளுக்கு அறிவூட்டல் செய்வது முதல் அவரவர் வாழிடங்களில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளை ஊக்குவிப்பதிலும் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது.
“அக்கறையின்மையே எங்களது எதிர்காலத்திற்கான அச்சுறுத்தல். நாங்கள் ஒவ்வொருவரும் எமது வாழ்வுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாமுட்பட, எம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்கள் மீதும் மதிப்பும் அன்பும் வைத்திருக்க வேண்டும்” என்று போதித்த ஜேன் குடோலுக்கு எமது அஞ்சலி!
