ஜெருசலேம்

நிசார் கப்பானி

————
தமிழில்

எம். ஏ.நுஃமான்

இது ஒரு மீள் பதிவு – நன்றி: நிசார் கப்பானி / எம்.ஏ.நுஹ்மான்

என் கண்ணீர் வற்றும்வரை அழுதேன்
மெழுகுவர்த்தி அணையும்வரை தொழுதேன்
தரை வெடிக்கும்வரை முழந்தாளிட்டிருந்தேன்
முகம்மதையும் ஏசுவையும் பற்றிக் கேட்டேன்

ஓ ஜெருசலேம்,
தீர்க்கதரிசிகளின் சுகந்தமே
பூமிக்கும் வானத்துக்குமிடையிலான குறுக்குப் பாதையே
சட்டங்களின் காப்பிடமே

விரல்கள் கருகிய, விழிகள் மூடிய குழந்தை நீ
இறைதூதர்கள் கடந்துசென்ற நிழல் அடர்ந்த
பாலைவனப் பசுஞ்சோலை நீ
உன் தெருக்களைத் துயர் சூழ்ந்துள்ளது
நீ கறுப்பு ஆடை அணிந்த கன்னி

சனிக்கிழமை காலை, ஏசுவின் பிறந்த நாளில்
யார் மணிகளை ஒலிப்பார்?
கிறிஸ்மஸ் தினத்தில் குழந்தைகளுக்கு
யார் பொம்மைகள் கொண்டுதருவார்?

ஓ ஜெருசலேம்,
துன்பத்தின் நகரமே
கண்களில் அலையும்
ஓர் பெரிய கண்ணீர்த் துளியே
மதங்களின் முத்தே

உன்னைச் சூழ்ந்த ஆக்கிமிப்பை யார்தான் நிறுத்துவார்?
இரத்தம் தோய்ந்த உன் சுவர்களை யார்தான் கழுவுவார்?

பைபிளை யார் பாதுகாப்பார்?
குர்ஆனை யார் மீட்டெடுப்பார்?
ஏசுவை யார் காப்பாற்றுவார்?
மனிதர்களை யார் காப்பாற்றுவார்?

ஓ ஜெருசலேம்,
என் நகரமே

ஓ ஜெருசலேம்,
என் அன்பே

நாளை எலுமிச்சைகள் பூக்கும்
ஒலிவமரங்கள் மகிழ்வுறும்
உனது கண்கள் நடனமிடும்
நாடுகடந்த புறாக்கள்
உன் புனிதக் கூரைக்குத் திரும்பிவரும்
உன் குழந்தைகள் மீண்டும் விளையாடுவார்கள்
உன் ரேசா மலைகளில்
தந்தையரும் தனையர்களும் சந்திப்பார்கள்

எனது நகரம்
சமாதானத்தின் நகரம்
ஒலிவ மரங்களின் நகரம்.