‘ஜெய் பீம்’: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி அதன் தயாரிப்பாளர் சூர்யா மற்ரும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வன்னியர் சமூகத்தினால் தொடரப்பட்ட வழக்கை சென்னாஇ உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
டிசம்பர் 2021 இல் ருத்ர வன்னிய சேனை அமைப்பின் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதன் வழக்கறிஞர் கே.சந்தோஷினால் பதியப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 11 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. வன்னியர் சமூகத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் வகையில் ஜெய் பீம் படத்தில் வசனங்களும் காட்சிகளும் புகுத்தப்பட்டிருந்ததாக சூர்யா, அவர் மனைவி ஜோதிகா மற்றும் ஞானவேல் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஒரு பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தின் சுவரில் வன்னியர் சங்கத்தின் இலச்சினையான அக்னி குண்டத்தின் படத்தைத் தாங்கிய கலண்டர் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதே வேளை அக் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கைதிகளை மிக மோசமாகச் சித்திரசதை செய்யும் இரக்கமற்ற ஒருவராகவும் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமல்லாது இக்குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரியின் பாத்திரத்தில் நடிப்பவரின் பெயர் குருமூர்த்தி என்பதும் வன்னியர் சமூகத்தின் தலைவரது உண்மையான பெயர் குருமூர்த்தி என்பதும் வன்னியர் சங்கத்தின் குற்ரச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமைந்தன.
தமிழ்நாடின் ஆதிவாசிகள் ஆதிக்க சமூகங்களினாலும் அவர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் மற்றும் காவற்துறையினராலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு நடத்தப்படுவதற்கு எதிராக, இளைப்பாறிய நீதிபதி சந்துருவின் உண்மைக் கதை ஒன்றைத் தழுவி ஜெய் பீம் எடுக்கப்பட்டிருந்தது. சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோமோல் ஜோசே மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் இப் படத்தில் நடித்திருந்தர்கள்.
வன்னியர் சங்கத்தின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டவுடன் படத்தில் வரும் ‘அக்னி குண்ட’ காட்சி திருத்தப்பட்டது எனினும் வன்னியர் சங்கமும், கூடவே பாட்டாளி மக்கள் கட்சியும் இப் படத்துக்கும் அதன் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீதும் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.