IndiaNews

ஜெயலலிதா சொத்துப் பதுக்கலை விசாரித்த அதிகாரி நல்லம்மா நாயுடு திடீர் மரணம்!

தமிழ்நாடு



தொடரும் மர்மங்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா மற்றுப் பலரின் முறைகேடான சொத்துச் சேர்ப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் நல்லம்மா நாயுடு இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

நல்லம்மா நாயுடு

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991-1996 காலப்பகுதியில் அவரது சொத்துக்கள் 2.6 கோடி ரூபாவிலிருந்து 66.65 கோடியாக அதிகரித்தமை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி, 1996 இல் தொடுத்திருந்த வழக்கு தொடர்பாக நல்லம்மா நாயுடு விசாரணைகளைச் செய்திருந்தார். இதன் விளைவாக பதியப்பட்ட FIR இன் பிரகாரம் டிசம்பர் 1996 இல் ஜெயலலிதாவின் வாசஸ்தலமான போயஸ் கார்டன் நல்லம்மா நாயுடுவின் தலைமையில், தொடர்ந்து 5 நாட்கள் பொலிசாரின் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதன்போது பெருமளவிலான நகைகள், சேலைகள், தங்கம் ஆகியவை மீட்கப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுடன் சேர்த்து, சசிகலா, இளவரசி, வீ.என். சுதாகரன் ஆகியோர்மீது ஜூன் 1997 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படிருந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸ் பொறுப்பதிகாரி வி.சி. பெருமாள், ஜெயலலிதாவின் வீட்டில் தேடுதல் வேட்டையைச் செய்யும்படி தான் நாயுடுவுக்கு உத்தரவை வழங்கியிருக்கவில்லை எனவும் இதனால் அப்போது மேற்கொள்ளப்பட்ட முழு விசாரணையும் சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். ஆனால் நாயுடுவை அவமானப்படுத்தும் நோக்கில் பெருமாள் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே பெருமாள் அப்படி நடந்துகொள்கிறார் என அரச தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா வாதாடியிருந்தார். இறுதியில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, வாதி தரப்பை ஏற்று, பெறுமாளின் உத்தரவின் பேரிலேயே நாயுடு தன் விசாரணைகளைச் செய்திருந்தார் என்பதை ஏற்றுக்கொண்டு, ஜெயலலிதாவையும் அவரது சகாக்களையும் குற்றவாளிகளெனத் தீர்ப்பளித்திருந்தார்.

நாயுடு விசாரணைகளை மேற்கொண்ட காலத்திலும் அதற்குப் பிறகும் அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள், அவரத்கு வீட்டுக்குகு குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற பொய்யான மிரட்டல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் பல இருந்து வந்தன எனவும் ‘வீக்’ என்னும் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.



இதனால் ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கு பின்னர், 2003 இல், பங்களூருக்கு மாற்றப்பட்டது. பங்களூர் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் குற்றவாளிகளெனத் தீர்ப்பளித்திருந்தாலும், பின்னர் கர்நாடகா உயர் நீதிமன்றம் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் 2014 இல் இவ்வழக்கை மீண்டும் விசாரித்த விசேட நீமிமன்றம் ஒன்று ஜெயலலிதாவை ஊழல் செய்தவர் எனத் தீர்மானித்து 4 வருட சிறைத்தண்டனையையும், 200 கோடி அபராதத்தையும் வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. திரும்பவும் 2015 இல் இவ்வழக்கை எடுத்த கர்நாடகா உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசேட நீதிமன்றம் விசாரிக்கச் சட்டத்தில் இடமில்லை எனத் தீர்ப்பளித்தது. இவ்வுயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பின்னர் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்திருந்ததன் விளைவாக அனைவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இக் காலகட்டத்தில் ஜெயலலிதா மரணமடைந்ததன் காரணமாக எஞ்சியவர்கள் தமது மீதியான காலத்தை சிறைக்குள் கழித்தனர்.

இப்போது தி.மு.க. அரசு கோடைநாடு சொத்து, அங்கு நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மீண்டும் எடுத்திருக்கிறது. இந் நிலையில் நல்லம்மா நாயுடுவின் மரணம் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.