IndiaNews

ஜெயலலிதாவின் வேத நிலையம் மருமக்களுக்குப் போகவேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவரது மருமகள் தீபாவுக்கும் மருமகன் தீபாக்கிற்கும் போகவேண்டும் என நேற்று (நவம்பர் 24) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேத நிலையம் என அழைக்கப்படும் இவ் வீடு தமிழ்நாடு அரசுடமை எனவும் அதை ஒரு ஞாபகச் சின்னமாக மாற்றிப் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப் போகிறோமெனவும் முன்னாள் அ.இ.அ.தி.மு.க. அரசு சென்ற வருடம் அறிவித்திருந்ததது. இதை எதிர்த்து தீபாவும், தீபாக்கும் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்கள். இவ்வழக்கு நேற்று (நவம்பர் 24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அச்சொத்து தீபாவுக்கும், தீபாக்கிற்குமே உரியது எனக்கூறி அதற்கான உரிமையை நீதிமன்றம் உரியவர்களுக்கு மாற்றிக்கொடுத்துவிட்டது.

அவ்வீட்டிற்கான சாவிகளை மூன்று வாரங்களுக்குள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிடவேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இவ் வீட்டை வாங்குவதற்கென முற்பணமாக அரசாங்கம் கொடுத்திருந்த 67.9 கோடி ரூபாவைத் திருப்பிக் கொடுக்கும்படியும் அது உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்திலுள்ள இவ் வீட்டைத் தமது பேத்தியார் (ஜெயலலிதாவின் தாயார்) என்.ஆர்.சந்தியா (வேதா ஜயராமன்) 1967 இல் வாங்கியிருந்ததாகவும், அதனால் தான் அவ்வீட்டிற்கு ‘வேத நிலையம்’ எனப் பெயரிடப்பட்டிருந்ததாகவும் தீபா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.