ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா காரணம் – விசாரணைக்குப் பரிந்துரைப்பு

“முறையான மருத்துவ செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையினால்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணமடைய நேரிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சசிகலா மீது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்” என இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஜெலயலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா மீது பல ‘முக்கிய தவறுகளைக்’ கண்டறிந்துள்ளது எனவும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களுக்கு சசிகலாவே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது. அக்டோபர் 18 அன்று தமிழ்நாடு சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அரசு விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவேண்டுமெனவும் செப்டம்பர் 2016 இல் அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல மாதங்களாக அவருக்கு எதுவித சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை எனவும் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யாமை திட்டமிடப்பட்ட செயல் எனவும் இதற்கு சசிகலா, முன்னாள் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பிரத்தியேக மருத்துவர் கே.எஸ்.சிவகுமார் மற்றும் அப்போலோ மருத்துவமனை அதிகாரிகளே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை இவ்விடயங்களை இரகசியமாக வைத்திருந்தது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னால் சூழ்ச்சி எதுவும் இருந்ததாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடாவிட்டாலும் 2011 இல் ரெஹெல்கா சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையில் சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்திருந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011இல் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சசிகலாவை வீட்டைவிட்டு வெளியேறுமாறு ஜெயலலிதா பணித்திருந்தார். இருவரிடையேயும் இருந்த உறவு மேலும் கசப்பாக மாறியதால் டிசம்பர் 2011 இல் சசிகலா வெளியேற்றப்பட்டார். மார்ச் 2012 இல் சசிகலா மீண்டும் ஜெயலலிதா வீட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய குடும்பத்தை அவர் வெளியே அனுப்பிவிடவேண்டுமென்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதிலிருந்து இருவரிடையேயுமான உறவு மேலும் விரிவடைந்துகொண்டு வந்தது என ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2015 இல் ஜெயலலிதா சுகவீனம் கண்டிருந்தார் எனைனும் அவரது மருத்துவர் சிவகுமார் உரிய மருத்துவ சிகிச்சைகளைக் கொடுக்கத் தவறியிருந்தார் எனவும் இவர் சசிகலாவின் மருமகனின் சகோதரர் எனவும் அறிக்கை கூறுகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சசிகலாவும் அப்போலோ மருத்துவமனையும் பலவிடயங்களை மறைத்துள்ளர் எனவும் இதனால் ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலை பற்றிய தகவல்களை அறியமுடியாமல் இருக்கிறது எனவும் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

விசாரணையின்போது பெறப்பட்ட சாட்சியங்களின்படி மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் எனவும் அவரது உடற் செயற்பாடுகள் சாதாரணமாகவே இருந்தன எனவும் ஆனால் அவரது சுகவீனம் பற்றி அவருக்கு சகலதும் மறைக்கப்பட்டன எனவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்படவிருந்த இருதய சிகிச்சைகளான அஞ்சியோ / அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளவிருந்த மருத்துவர்கள் ரெட்டி மற்றும் பாபு ஏப்ரஹாம் ஆகியோர் மேலிட அழுத்தங்களின் காரணமாக அவற்றைப் பின்போட்டு வந்தார்கள் எனவும் அறிக்கை கூறுகிறது. இம்மருத்துவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.