Spread the love

வேத நிலயத்தை (போயஸ் கார்டின்) உத்தியோகபூர்வ முதலமைச்சர் இல்லமாகப் பாவிக்கலாம்

சென்னை மே 27, 2020: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது மருமக்களான ஜெ.தீபா, ஜெ.தீபாக் ஆகியோர் உரித்துடையவர் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்து உரிமத்தொடர் சட்டம் 1956 (Hindu Succession Act 1956) இன் பிரகாரம் இவ்விருவரும், இரண்டாம் தர வாரிசுகள் (Class II Heirs) ஆகவிருக்கிறார்கள் என்றும் அவர்கள் எந்த வேளையிலும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க.விற்குப் பாரிய பின்னடைவைக் கொடுத்த இவ்வழக்கில், நீதிமன்றம் இன்னுமொரு விடயத்தையும் கூறியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேத இல்லத்தை, அ.இ.அ.தி.மு.க. திட்டமிட்டிருந்ததுபோல், நினைவாலயமாக மாற்ற முடியாதென்றும், விரும்பினால் அதை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லமாகவோ அல்லது அலுவலகமாகவோ பாவிக்கலாமென்றும் அது தீர்ப்பளித்துள்ளது.

இன்று (புதன்) வெளியாகிய இத் தீர்ப்பின் பிரகாரம், தமிழ்நாடு அரசாங்கம் விசேட அறிக்கையொன்றின் மூலம் இச் சொத்துக்களின் வாரிசுகளுக்கு அறிவித்தல் வழங்கவேண்டுமென்றும் அத்தோடு, போயஸ் கார்டினிலுள்ள வேத நிலையத்தை அரசு சுவீகரிக்கும் பட்சத்தில் அதற்கான உரிய நட்டஈடு தீபா, தீபாக் இருவருக்கும் வழங்கப்படவேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இதற்கு முன்னரும், 2018 இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி ஒரு நீதிபதியால் இதே போன்றொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும், ஜெயலலிதா உயில் எதுவும் எழுதிவைத்திராமையாலும், இறப்பின்போது சட்டப்படி அவருக்கு வாரிசுகள் எவரும் இல்லாதபடியாலும், அவரது சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவேண்டுமென அ.இ.அ.தி.மு.க. சார்பில் கே.புகழேந்தி மற்றும் பி.ஜானகிராமன் ஆகியோர் மேன்முறையீடு செய்திருந்தார்கள். இம்மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குடோஸ் ஆகியோர் வழங்கிய தீர்ப்பே இன்று வெளியாகியுள்ளது.

10 கிரவுண்ட் (24,000 ச.அடி) பரப்பளவுள்ள வேத நிலையத்தை நினைவாலமாக்க முடியாதெனவும், அதன் பாவனைக்கான நட்டஈடாக பெருமளவு பணத்தைக் கொடுக்காமல் அதைக், கட்டுமானத் திட்டங்கள், குடிநீர் வழங்கல், நீர் நிலைகளைத் துப்புரவு செய்தல் போன்ற திட்டங்களுக்கு அரசு பாவிக்கலாமெனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“ஒரு தலைவருக்குக் கொடுக்கக்கூடிய காணிக்கை என்னவென்றால் அவரது கொள்கைகள், கோட்ப்படுகளைப் பின்பற்றி மக்களுக்கும், சமூகங்களுகுமான அபிவிருத்திப் பணிகளைச் செய்வதுதான். அரசாங்கம் ஒரு தலைவர் வாழ்ந்த வீட்டை நினைவாலையமாக மாற்றினால் ஒவ்வொரு அரசும் தமது முதலமைச்சர்கள் வாழ்ந்த வீடுகளை நினைவாலயங்களாக மாற்ற வேண்டி ஏற்படும். இது பொதுமக்களின் பணத்தை விரயமாக்கும் செயலாகும்” என இத் தீர்ப்பின் போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு விரும்பினால், முழு இல்லத்தையும் நினைவாலயமாக மாற்றாமல் ஒரு பகுதியை வேண்டுமானால் நினைவாலயமாக வைத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related:  வேதராஜன் பாலாஜி | சதுப்பு நிலப் பேணலுக்கான ஒரு தனி மனிதனின் பயணம்

ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 1,000 கோடி ரூபாய்களுக்கு மேற்படலாம் எனக் கூறப்படுகிறது.



வேத நிலையத்தை நினைவாலயமாக மாற்றும் முயற்சிகள் தமிழ்நாடு ஆளுனரின் ஆதரவோடு அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு பின்னடைவைக் கொடுத்துள்ளது.

வாரிசுகளான தீபாவும், தீபாக்கும் விரும்பினால் எந்தவொரு சொத்தையும் விற்று அப்பணத்தை ஒரு தேசிய வங்கியில் நிரந்தர இடுகையில் வைத்திருக்கமுடியுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Print Friendly, PDF & Email