ஜெனிவா ஐ.நா. வருடாந்த உற்சவம் ஆரம்பம்: மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தயார்

பதிலளிக்க பெப். 19 வரை இலங்கை அரசுக்கு சந்தர்ப்பம்

இவ்வருடத்துக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கை பெப்ரவரி 28 அன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னர் அதைப் பார்வையிடுவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது எனவும் அறியப்படுகிறது.

பெப்ரவரி 28 இல் சமர்ப்பிக்கப்ப்டவிருக்கும் இவ்வறிக்கை மார்ச் 03 அன்று சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதற்கு முன்னர், நேற்று (14), இவ்வறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் பார்வைக்கென அனுப்பப்பட்டது எனவும் அதில் ஏதாவது திருத்தங்களை முன்வைக்க இலங்கை விரும்பினால பெப்ரவரி 19 வரை அதற்கான சந்தர்ப்பம் உண்டு எனவும் தெரியவருகிறது.

47 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட மனித உரிமைகள் சபையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சீ.ஏ.சந்திரப்பெருமா இவ்வறிக்கை தொடர்பான விடயங்களை சபையில் கையாள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயங்களில் பெரும்பாலான நாடுகள் தமக்கு சார்பான நிலைப்பாடுகளை எடுப்பார்களெனத் தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பீரீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

2020-2021 கூட்டத் தொடரின் போது இலங்கை விவகாரங்களை அப்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா முன்னெடுத்திருந்ததும் இதன்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கை எதிர்பார்த்த அளவுக்கு அதற்கு ஆதரவான வாக்குகள் கிடைத்திருக்கவில்லை.

இந்தத் தடவை தமக்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் பொருட்டு இலங்கைத் தரப்பு பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அங்கத்தவர்களிடம் தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது.