ஜெநிவா 48 வது அமர்வு | ஆணையாளர் பக்கெலெயின் வாய்மொழி அறிக்கை சமர்ப்பிப்பு


வெளியார் தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்

திங்களன்று (செப் 13) ஜெனிவாவில் ஆரம்பாமாகிய ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 48 வது அமர்வின்போது ஆணையாளர் மிஷெல் பக்கெலெ தனது வாய்மொழி அறிக்கையைச் சம்பிரதாயபூர்வமாகச் சமர்ப்பித்தார்.

ஜூன் மாதம் இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச அறிவித்த “நல்லிணக்கம், பொறுப்புக்கூரல் விடயங்களில் ஐ.நா.வுடந் இணைந்து பணியாற்ற நாம் விருப்பமாகவுள்ளோம்” என்ற வாக்குறிதியைத் தான் வரவேற்பதாகவும் அது தொடர்பாக, தமது சிபார்சுகளை அனசரித்து, மேலும் காத்திரமான முன்னெடுப்புக்களை இலங்கை மேற்கொள்ளுமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் பக்கெலெ தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2021 இல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையம் இந்த வருட முடிவிற்குள் தனது அறிக்கையைச் அமர்ப்பிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அதை அடிப்படையாக வைத்து தாம் எப்படியான முடிவுகளை எடுக்கவிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வசந்த கரன்னகொட விடுதலை, துமிந்த சில்வா விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாகத் தொடரும் கைதுகள் போனற பல சம்பவங்கள் அதிருப்தியளிப்பதாகவும், தனது அலுவலகம் தீர்மானம் 46/1 இன் பிரகாரம் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வேலைகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும் ஆனால் அதற்கான மனிதவளம் இன்னும் தயாராகவில்லை எனவும் தெரிவித்தார். அதே வேளை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. வசமிருந்த ஆதாரங்களுடனான 120,000 தகவல்களைக் கொண்ட ஒரு ‘தகவற் பெட்டகத்தைத்’ தாம் உருவாக்கியுள்ளதாகவும், இந்த வருடமும் இயலுமான அளவுக்கு மேலும் தகவல்கள் சேகரிக்கப்படுமெனவும் இதற்கான பண ஒதுக்கீட்டை அங்கத்தவ நாடுகள் விரைவில் நிறைவேற்றினால் தனது அலுவலகம் இக் கடமையை விரைவில் முடிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் முன்னெடுப்பு தொடர்பாக, இலங்கையில் நடைபெறும் விடயங்களை இறுக்கமாக அவதானிக்கும்படி அவர் அங்கத்துவ நாடுகளைக் கேட்டுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

48 வது அமர்வில், இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர், நேற்று (14) இணைய வழியாகக் கலந்துகொண்டு ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்தார். அதில் ” பொறுப்ப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா. பரிந்துரைக்கும் புதிய விசாரணைகளை இலங்கை அறவே நிராகரிப்பதாக” அவர் தெரிவித்தார்.

“இலங்கையில் உள்ளக பொறிமுறை ஒன்றுக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும்போது, தீர்மானம் 46/1 இன் பிரகாரம் ஐ.நா. வெளியாரின் தலையீடுகளைத் திணிப்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அது எமது சமூகங்களை அரசியல் ரீதியாகத் துருவப்படுத்தும். சம்பந்தப்பட்ட ஒரு நாடு ஒத்துழைக்காமல் ஐ.நா. தான் எதிர்ப்பர்ர்க்கும் நோக்குகளை அடைய முடியாது. இதற்காகச் செலவழிக்கும் வழங்களை உலகின் இதர தேவைகளுக்குப் பாவிக்கலாம்” என அமைச்சர் பீரிஸ் அவைக்குத் தெரிவித்தார்.