Sri Lanka

ஜூலை 09: ‘நாடு முழுவதும் கொழும்புக்கு’- வரலாறு காணாத ஆர்ப்பாட்டம்

கலவரம் வெடிப்பதற்குச் சாத்தியம்?

#கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முன்னெடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜூலை 09 அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. நாடு வரலாறு காணாத எரிபொருள் பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கும் அதே வேளை அதிலிருந்து வெளியே வருவதற்கான காத்திரமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் ஜனாதிபதி கோதாபயவைப் பதவியிலிருந்து விலகும்படி கோரி இவ்வார்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

நாடெங்கிலுமிருந்து கொழும்புக்கு வந்து இவ்வார்ப்பாட்டத்தில் மக்களைக் கலந்துகொள்ளும்படி கோரி சமூக ஊடகங்கள் மூலம் அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. ‘இலங்கையின் வரலாற்றிலேயே இது ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டமாக இருக்கும்’ என இதன் அமைப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரும், சமீபத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவருமான சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார இது பற்றி விடுத்த ருவிட்டர் செய்தியில் இவ்வார்ப்பாட்ட நிகழ்வுக்கு ஆதரவு தரும்படி தாம் சமாகி ஜன பலவேகய மற்றும் ஜே.வி.பி. போன்ற எதிர்க்கட்சிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர்கள் ஏறத்தாள சம்மதம் தெரிவித்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இலங்கையின் 74 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி என்ற வகையில் இதற்குக் காரணமான கோதாபய ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென ‘அரகாலய’ என்னும் பெயரில் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பியக்கம், நியூ யோர்க்கின் வால் ஸ்ட்றீட்டில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ‘ஒக்குப்பை வால்ஸ்ட்றீட்’ (Occupy Wall Street) போன்று ‘கோதா கோ கம’ என்ற பெயரில், கொழும்பு காலி முகத் திடலில், ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே ஏறத்தாள நிரந்தரமாகக் களம் கொண்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச பதவி விலக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இவ்வார்ப்பாட்டத்தின் பலமும் அதில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வருவதாவே அவதானிக்கப்படுகிறது. இருப்பினும் அரசும் மக்களும் எதிர்ப்பார்த்தவாறு பொருளாதார செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதோடு உணவு, எரிவாயு, பெற்றோல், டீசல், மின்சாரம் எனப் பலவற்றிலும் தட்டுப்பாடுகளும் அதனால் மக்கள் நாட்கணக்காக வரிசைகளில் நிற்கவேண்டி ஏற்படும் நிலைமையும் அதிகரித்து வருவதால் அரகாலயா ஒழுங்கமைப்பாளர்கள் ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் இம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து வருகிறார்கள்.

இருப்பினும் எரிபொருள் பற்றாக்குறையினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையில் நாடு தழுவிய ரீதியில் மக்களின் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பது கேள்விக்குறியே. இதே வேளை அரசாங்கமும் இதை உன்னிப்பாக அவதானித்து வருவதோடு சட்ட ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பல முற்காப்பு நடவடிக்கைகளுக்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிகிறது.

“மக்களை இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வைக்கவேண்டுமென்று நாம் முழு முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். எங்கள் நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்ய விக்கிரமசிங்க போன்றோர் முயற்சிக்கிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் மிகவும் தீர்மானமாகவும் எதற்கும் தயாராகவும் இருக்கிறோம். எமது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பதை நிரூபிக்க ஜூலை 09 ஒரு மிகவும் முக்கியமான சோதனை நாளாகும்” என ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான சாமிந்தா டயஸ் தெரிவித்துள்ளார். (ஈகொணொமி நெக்ஸ்ட்)