World

ஜூலியன் அஸாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கு பிரீதி பட்டேல் அனுமதி வழங்கினார்

நிறைவேறினால் 175 வருடங்கள் சிறை!

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகரான ஜூலியன் அஸாஞ்சை அமஎரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய உள்ளக அமைச்சர் பிரீதி பட்டேல் நேற்று (17) வழங்கியுள்ளார். நாடு கடத்தப்பட்டால் அஸாஞ் 175 வருட சிறைவாசத்தை எதிர்நோக்கலாம் என அறியப்படுகிறது.

“அஸாஞ்சை நாடுகடத்துவதன் மூலம் அவர் அமெரிக்காவில் அநீதியாகவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டோ நடத்தப்படுவார் என்பதற்கோ அல்லது அமெரிக்க நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மதிக்கமாட்டா என்பதற்கோ ஆதாரங்கள் எதுவுமில்லை என பிரித்தானிய நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ளன. கருத்துச் சுதந்திரத்தைப் பேணவும், ஆரோக்கியத்தைக் கவனிக்கவும அவருக்கு அங்கு பூரண உரிமைகள் உண்டு. அமெரிக்க நிர்வாகத்தால் அவர் உரிய முறையில் நடத்தப்படுவார்” என உள்ளக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளக அமைச்சரின் இத் தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத் தீர்மானத்துக்கு எதிரான மேன்முறையீட்டைச் செய்வதற்கு அஸாஞ்சின் சட்டத்தரணிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் அங்கு அஸாஞ் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் அல்லது சிறையில் அமெரிக்க நிர்வாகத்தால் முறைகேடாக நடத்தப்படக்கூடும் என்பதஹிக் காரணம் காட்டி அவரது நாடுகடத்தலை பிரித்தானிய நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருந்தது. ஆனாலும் அத் தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்க நிர்வாகம் மேன்முறையீடு செய்திருந்தது. இதன் பிரகாரம் உள்ளக அமைச்சர் பிரீதி பட்டேல் இந் நாடுகடத்தலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்தின் முறைகேடான இரகசிய நடவடிக்கைகளை அஸாஞ்சும் அவரது சகாக்களும் விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தனர். இது அமெரிக்க நிர்வாகத்துக்கு பெரும் அவமானத்தையும் தலையிடியையும் கொண்டுவந்திருந்தது. இந்நாடுகடத்தல் நிறைவேற்றப்படின் இனி எந்தவொரு ஊடகவியலாளரும் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். இது ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கை. இதன் மூலம் பிரீதி பட்டேலின் பெயர் நிரந்தர களங்கத்திற்குள்ளாகும் என்பதோடு வரலாற்றில் அவர் ஒரு அமெரிக்க எடுபிடி எனவே அறியப்படுவார் என அஸாஞ்சின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்றம்ப் நிர்வாகத்தின்போது எக்குவாடோர் தூதரகத்தில் அடைக்கலம் கேட்டிருந்த அஸாஞ்சைத் திருட்டுத்தனமாகக் கடத்திக் கொலைசெய்வதற்கு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ. யிற்கு அப்போதைய பணிப்பாளர் மைக் பொம்பியோ உத்தரவிட்டிருந்தார் என்ற ஒரு செய்தியை முன்னர் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

2010 முதல் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திவரும் தகவல்களில் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா புரிந்த போர்க்குற்றங்கள் பற்றியனவும் அடங்கும். இதைக் காரணம் காட்டி அமெரிக்க உளவுச் சட்டத்தின் பிரகாரம் விக்கிலீக்ஸ் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது.