ஜூன் 20 இல் தேர்தல்கள் நடைபெறமுடியாது – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு அறிவிப்பு

ஜூன் 20 இல் தேர்தல்கள் நடைபெறமுடியாது – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு அறிவிப்பு

Spread the love

சுமந்திரன் அவரது கட்சிக்காரரின் வழக்கைத் தொடரமாட்டார்

மே 20, 2020: ஏற்கெனவே அறிவித்திருந்த ஜூன் 20 இல் தேர்தல்களை நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதி அறிவித்த பாராளுமன்றக் கலைப்பு செல்லுபடியாகாது அதனால் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனப் பல தரப்புகள் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்குகளைப் பதிவுசெய்திருந்தன. அவற்றின் மீதான விசாரணைகள் மே 18 முதல் நடைபெற்று வருகின்றன.

முதலாவது நாள் வாக்குமூலத்தின்போது ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய விக்டர் ஐவான் சார்பில் தோன்றிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (PC), அரசியலமைப்பை உதாசீனம் செய்து, தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை நிர்ணயித்திருந்தமை குறித்து உச்சநீதிமன்றத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் பிரகாரம், இன்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் தோன்றிய சட்டத்தரணி சலியா பீரீஸ் (PC), ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 20 அன்று தேர்தல்களை நடத்தமுடியாது என அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தனது கட்சிக்காரர் சார்பில் கொடுத்திருந்த விண்ணப்பம் (SC FR 83/2020) சார்பான வழக்கை மேற்கொண்டு தொடரப்போவதில்லை என சுமந்திரன் அறிவித்துள்ளார்.

அதே வேளை, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் சார்பில் தோன்றிய சட்டத்தரணி விரான் கொரியா, உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்கையில் “ஜூன் 2 ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றக் கலைப்புபற்றிய ஜனாதிபதியின் பிரகடனம் செல்லுபடியாகாததாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 70(5), ஜனாதிபதிக்கு அளிக்கும் மூன்று அதிகாரங்கள், பாராளுமன்றத்தைக் கலைப்பது, தேர்தல்களுக்கான திகதியை அறிவிப்பது, பாராளுமன்றத்தைக் கூட்டுவது” ஆகியன மட்டுமே என கொரியா உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email