Spread the love

ஜூன் 19, அமெரிக்காவில் விடுமுறையாகப் பிரகடனப்படுத்தநாள். ஜூன் மாதத்தின் கடைசிப் பதின்ம நாள் என்பதால் ஜூன்ரீந்த் எனப்படுகிறது. அமெரிக்காவின் கறுப்பின மக்கள் சட்டபூர்வமாக விடுதலை பெற்ற நாள்.

1865 ம் ஆண்டு, ரெக்சாஸ் மாகாணத்தில் வைத்து மத்திய அரசு, அடிமைகளாக வரிக்கப்பட்டிருந்தவர்களின் முன்னிலையில் அவர்கள் இன்று முதல் விடுதலையாகிறார்கள் எனப் பிரகடனம் செய்த நிகழ்வை, வருடா வருடம் நினைவுகூரும் நாள் ஜூன் 19. ஜோர்ஜ் ஃபுளோய்ட் தன் உயிர்த் தியாகத்தின் மூலம் அமெரிக்காவினதும், உலகினதும் மனச்சாட்சியை உலுப்பிச் சென்ற இந்த வருடத்தில் இன் நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாறு

அமெரிக்க சிவில் யுத்தம் (1861-1865) வரை நடைபெற்றது. வடக்குப் பகுதியில், ஜனாதிபதி ஏப்ரஹாம் லிங்கனின் தலைமையில் இயங்கிய தேசிய அரசுக்கும் (United States of America), தெற்குப் பகுதியில் ஜெனெரல் றொபேர்ட் லீ தலைமையில் இயங்கிய சில மாநிலங்களின் கூட்டமைப்பு (confederate) க்குமிடையில் அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்றது.



அடிமைகளை வைத்திருப்பது பற்றி இப்போர் அக்கறை கொண்டிருக்காவிட்டாலும், தெற்கு அமெரிக்க மாநிலங்களில் தான் அடிமை வியாபரமும், பாவனையும் அதிகம் இருந்தன. அதனால் அடிமைகளை விடுதலை செய்வதில் கூட்டமைப்புத் தரப்பு எப்போதும் எதிர்ப்பையே காட்டி வந்தது. இதனால் கூட்டமைப்பின் கொடி (confederation flag) எப்போதும் இனவாதத்தின் சின்னமாக மிதவாதிகளால் பார்க்கப்பட்டு வருகிறது.

வடக்கு அமெரிக்காவில் அடிமைகளை விடுவிப்பதற்கு ஆதரவு இருந்தது போலவே எல்லை மாநிலங்களில் கணிசமான எதிர்ப்பும் இருந்தது. இருப்பினும் ஜனவரி 1, 1863 அன்று ஜனாதிபதி ஏப்ரஹாம் லிங்கன் அடிமை விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறார். அதில் “கலகம் செய்யும் மாநிலங்களில் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் இன்று முதல் சுதந்திரம் பெறுகிறார்கள் (that all persons held as slaves” within the rebellious states “are, and henceforward shall be free)’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தென் மாநிலங்கள் இப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது லிங்கனின் அரசாங்கத்தையோ ஏற்றுக்கொள்ளவில்லை. போர் தொடர்ந்தும் நடைபெறுகிறது. ஏப்ரல் 9, 1865 இல் ஜெனரல் றொபேர்ட் லீ, லிங்கனின் அமெரிக்க யூனியன் தரப்பிடம் சரணடைந்தவுடன் சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. அனைத்து மாநிலங்களும் யூனியன் ஆட்சிக்குள் கொண்டுவரப்படுகிறது.

ஜூன் 19, 1865 அன்று, 2,000 பேரைக் கொண்ட யூனியன் தரப்புப் படைகள், மேஜர் ஜெனெரல் கோர்டன் கிறேஞ்சர் தலைமையில் ரெக்சாஸில் கூடி, போர் முடிவுற்றதை அறிவித்ததோடு, ஜனவரி 1, 1863 இல் ஆப்பிரஹாம் லிங்கனால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரகடனத்தையும் மீண்டும் அறிவிக்கிறார்.



தாங்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டோம் என அறிந்ததும் அமெரிக்காவின் கறுப்பின மக்கள் ஜூன் 19ம் திகதியைத் தமது சுதந்திர தினமாகவும், அதற்கு ‘ஜூன்ரீந்த்’ எனப் பெயரிட்டும் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். அன்றிலிருந்து அமெரிக்காவில் இரண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 4 (அமெரிக்கா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள்) ஜூன் 19 (கறுப்பின மக்கள் விடுதலை பெற்ற நாள்) இரண்டுமே விடுமுறை நாட்களாகப் பிரகடனப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

Print Friendly, PDF & Email
ஜூன்ரீந்த் | அமெரிக்காவில் கறுப்பின மக்கள் விடுதலை பெற்ற நாள்

ஜூன்ரீந்த் | அமெரிக்காவில் கறுப்பின மக்கள் விடுதலை பெற்ற நாள்