ஜிம்மி கார்ட்டர் மரணம்
அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியும், மனித உரிமைகளுக்கான நோபல் பரிசு பெற்றவரும், அந்நாட்டின் ஜனாதிபதிகளில் அதிக காலம் உயிர்வாழ்ந்தவர் எனக்கருதப்படுபவருமான ஜிம்மி கார்ட்டர் அவரது 100 வயதில், இன்று (ஞாயிறு) காலமானார்.
கடந்த சில வருடங்களாக அவர் முதியோர் விடுதி ஒன்றில் வைத்துப் பராமரிக்கப்பட்டார் எனவும் 2023 இல் அவர் மிகவும் உக்கிரமான சரும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனவும் கூறப்பட்டது.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மானிலத்தில் பிளெய்ன்ஸ் என்னும் நகரில் அவர் அக்டோபர் 1, 1924 இல் பிறந்தார். கடற்படைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் அவர் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிப் பிரிவில் பொறியியலாளராகப் பணியாற்றினார். 1971 இல் ஜோர்ஜியா மாநிலத்தின் ஆளுனராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் பின்னர் 1977 இல் ஜனாதிபதியாகத் தெரிவாகி 1981 வரை சேவையாற்றினார்.
உலக அமைதிய விரும்பும் ஒருவரான கார்ட்டர் தனது ஆட்சிக் காலத்தில் சோவியத் குடியரசுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் பூசல்களைத் தவிர்க்க முயற்சித்தார். 1979 இல் சோவியத் தலைவர் லியோனிட் பிரெஷ்நேவ் உடன் இணைந்து ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் (Strategic Arms Limitation Talks II (SALT II)) கையெழுத்திட்டிருந்தார். இருப்பினும் அவரது மிதவாத முயற்சிகளுக்கு அக்கால செனட் ஆதரவு வழங்காமையால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் 1979 இல் சோவியத் குடியரசின் ஆப்கானிஸ்தான் தலையீடு காரணமாக அதற்கெதிரான நடவடிக்கைகளை கார்ட்டர் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டது. சோவியத் குடியரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் சோவியத் குடியரசு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. இந்த முஜாஹிதீன் போராளிகலே பிற்காலத்தில் தலிபானாக உருவாகினர்.
1978 இல் எகிப்திற்கும் இஸ்ரேலுக்குமிடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைத்து ‘காம்ப் டேவிட் ஒப்பந்தம்’ (Camp David Accords) முதல் தடவையாக ஒரு அரபு நாடு இஸ்ரேலை அங்கீகரிக்கச் செய்திருந்தார். 1999 இல் பனாமா கால்வாயை பனாமாவிடம் ஒப்படைத்திருந்தார். (இப்போது ட்றம்ப் இக்கால்வாயை மீள எடுக்கப்போகிறேன் என மிரட்டி வருகிறார்)
இருந்தாலும் இவரது ஆட்சியின் இறுதிக்காலங்களில் அமெரிக்க மக்களின் எதிர்ப்பை இவர் சம்பாதிக்க வேண்டி ஏற்பட்டது. இக்காலத்தில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் காரணமாக அமெரிக்க ஆதரவாளரான ஷாவின் ஆட்சி கலைக்கப்பட்டு ஆச்ட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட அமெரிக்கப் படைகள் 444 நாட்களுக்கு புரட்சியாளரால் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்க கார்ட்டர் எடுத்த இராணுவ நடவடிக்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க மக்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு சரிந்தது. இதற்கு காரணம் அப்போதிருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளர் றோணால்ட் ரேகனுக்கும் இஸ்லாமிய புரட்சியாளருக்குமிடையே இருந்த எழுதப்படாத ஒப்பந்தமே. இதன் போது புரட்சியாளருக்குப் பணம் கொடுக்கப்பட்டு தேர்தல் வரும் வரைக்கும் கைதிகளை விடுதலை செய்யவேண்டாமென அறிவுறுத்தப்பட்டது எனப் பின்னர் உண்மை தெரியவந்தது. அமெரிக்க வலதுசாரி ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பரப்புரைகள் கார்ட்டரின் செல்வாக்கு சரிந்தமைக்கு முக்கிய காரணம். இதனால் அவரது இரண்டாவது தவணை சாத்தியமற்றுப் போனது.
இருப்பினும் அவர் தனது சமாதானம், ஜனநாயகம், மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ந்தும் அயராது உழைத்து வந்தார். அவரும் அவரது துணைவியாரும் இணைந்து 1982 இல் உருவாக்கிய கார்ட்டர் மையம் மூலமாகத் தனது பணிகளை முன்னெடுத்து வந்தார். தனது தள்ளாத வயதிலும் நேரடியாகக் களத்தில் இறங்கி வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார். இவரது நற்குணத்திற்கும், பணிகளுக்குமான வெகுமானமாக 2002 இல் மனித உரிமைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
” எனக்கு மட்டுமல்ல சமாதானம், மனித உரிமைகள், சுயநலமற்ற நேசம் ஆகியவற்றை விரும்பும் ஒவ்வொருவருக்கும் எனது தந்தையார் ஒரு ஹீரோ” என அவரது மகன் ஜேம்ஸ் ஈ கார்ட்டர் III தெரிவித்திருக்கிறார்.
கார்ட்டரது மறைவு உலகசமாதானத்திற்கான பேரிழப்பு. (Image Credit: Sydney Morning Herald)
