ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர்
வளரும் வடக்கு

ஜெகன் அருளையா
கடந்த வாரம் (மே 2026) சினமன் குளோபல் குழுவினருடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஜஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் (Jaffna Horticulture) நிறுவனத்திற்கு போனேன். சினமன் குளோபல் நியூ யோர்க்கைச் சேர்ந்த பிரபல தனவந்தரான ராஜ் ராஜரட்ணத்தின் குடும்ப வியாபார நிறுவனங்களில் ஒன்று என்பது மட்டுமல்லாது ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் உள்ளிட்ட வடக்கில் இயங்கும் பல நிறுவனங்களில் முதலீடுகளையும் செய்துவருகிறது.
ஜாஃப்னா ஹோர்ட்டிகல்ச்சர் தனக்கென ஒரு விவசாயப் பண்ணையை வைத்திருப்பதுடன் யாழ் மாவட்டத்திலுள்ள பல தனியார் பண்ணைகளையும் குத்தகைக்கெடுத்து நிர்வகித்து வருகிறது. இப்பண்ணைகளில் உற்பத்தியாகும் விளைபொருட்களைப் பதப்படுத்தி பொதி செய்து தனது இன்னுமொரு நிறுவனமான நியூட்றோ என்னும் பெயரில் சந்தைப்படுத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் சொந்தக்காரர் ஜஸ்டின் குமார் கலிபோர்ணியாவில் படித்துப் பட்டம் பெற்றவர். அங்கு வெற்றிகரமான வியாபார முயற்சிகளை மேற்கொண்ட பின் இலங்கை திரும்பியவர். கோவிட் -19 அவரை வெற்றிகரமாக யாழ்ப்பாணத்தில் முடக்கிக்கொண்டது. இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து யாழ்ப்பாணத்திலிருந்த அவரது குடும்பத்தின் பரம்பரைச் சொத்துக்களான பல ஏக்கர்கள் காணிகளை மறுசீரமைத்து அங்கு தன் வியாபார முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரிசைகளில் முளை விட்டுக்கொண்டிருந்த அவரது பண்ணையொன்றிற்கு 2020 இல் நான் சென்றிருந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாகப் பல தடவைகள் சென்று வந்திருக்கிறேன்.
இப்போது (2026 இல்) அது ஈடனின் தோட்டமாக மிளிர்கிறது. திரும்புமிடமெல்லாம் அழகு கொழிக்கிறது, இயற்கையின் ஓசைகள் ஒரு புறம் மனங்களை வருடும் வாசங்கள் மறுபுறம். அழகிய மாந்தோப்பு அதனிடை வளரும் தேசிப்புல், முருங்கை, கறிவேப்பிலை மரங்கள். இவற்றில் பலமான வாசத்தை அள்ளி வீசும் தாய்லாந்தினர் பாவிக்கும் கறிவேப்பிலை ரகம் குறிப்பிட்டுக் கூறக்கூடியது. முகச்சவரம் செய்பவர்கள் ஏன் இத் திரவியததை இதுவரை பாவிப்பதில்லை என்பது ஆச்சரியமாகவிருக்கிறது. நான் சவரத்தின் பின்னான திரவத்தைப் பாவிப்பதில்லை. அப்ப்டிப் பாவிக்க நேரின் இச்செடியின் திரவத்தையே பாவிப்பேன்.
இத்னைத் தொடர்ந்து உடுவிலில் அமைந்துள்ள ஜஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் ஆலைக்குச் சென்றோம். யாழ் நகரிலிருந்து சுமார் 15 நிமிட வாகன ஓட்டத்தில் இவ்விடத்தை அடையலாம். சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலை வெட்டும், உலர்க்கும், கூழாக்கும், உறையவைக்கும் பணிகளைச் செய்யும் உருக்கினாலான பற்பல பளபளக்கும் எந்திரங்களால் நிறைந்திருந்தது.
ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் மற்றும் அதன் முகாமைத்துவத்துள் அடங்கும் நிறுவனங்கள் தமக்குத் தேவையான மேலதிக பழ வகைகளை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இவர்களது மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு: மாங்கனிக் கூழ். பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட இக்கூழ் ஓட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. என் போன்ற தனியாருக்கென சிறிய, 100 கிராம் பொதிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்மூதீஸ், மில்க்ஷேக், ஐஸ் கிரீம் என அனைத்து பண்டங்களுக்கும் மூலாதாரம் இதுவாகவே இருக்கிறது.
ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் நிறுவனம் தனது ஆலையில் மட்டுமல்லாது அது கொள்வனவு செய்யும் பண்ணைகள் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைகளையும் வருமானத்தையும் வழங்கி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
உலர் உணவுகள், வாசனைப் பொருட்கள் போன்றவற்றை வட அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. வடமாகாணத்தின் விவசாய அறுவடைகளை மதிப்பூட்டி உபபொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதன் மூலம் வடக்கின் விவசாயிகள் அதிக இலாபத்தைப் பெறுகிறார்கள்.
ஜாஃப்னா ஹோர்ட்டிக்கல்ச்சர் வடக்கிற்கு செய்த மிகப்பெரும் மதிப்பூட்டும் (value add) பங்கு அதன் பணியாளர்கள். சாதாரண உள்ளூர்ப் பணியாளர்களை தொழில் விற்பன்னர்களாக மாற்றித்தரும் வித்தை அது. தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் விசுவாசம் மிக்க அதன் நிர்வாகிகளும் பணியாளர்களுமே என்கிறார் ஜஸ்டின் குமார்.





















