ஜருஷா ஜயச்சந்திரன் | பெருமைக்குரிய தமிழர் 02

Spread the love
ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஈசிபுக்கிங் (ezBooking.io) ஒரு உயர்தர ஓட்டல் பதிவு செய்யும் நிறுவனம். இதன் 50% உரிமையாளர் ஜருஷா ஜயச்சந்திரன். வேம்படி மகளிர் கல்லூரியில் படித்து க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தாது ஒரு தொழில் வல்லுனராக இருக்கிறார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்கெனவே கணிசமான அளவு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஈசிபுக்கிங் (ezBooking.io) நிறுவனம் ஜருஷாவினதும் அவரது பங்காளியினதும் ஆரம்பத் தொழில் முயற்சி (start up). விரைவில் தென், தென் கிழக்கு ஆசியாவில் தனது சேவைகளைப் பரப்பவிருக்கும் ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சி.

யாழ்ப்பாணம் நகரிலிருந்து சில் மைல்கள் வடக்கே இருக்கும் சங்கானையில் இரண்டு சகோதரர்களுடன் பிறந்தவர் ஜருஷா. தந்தையார் ஒரு சிறு வியாபாரி. சிங்கப்பூரில் சாரதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர், தன் சிறு தொழில் முகவரான சகோதரர் போர்க்காலத்தில் இறந்தபோது அத் தொழிலைப் பொறுப்பேற்கவெனத் திரும்பி வந்தவர்.

சங்கானையிலுள்ள கல்லூரியொன்றில் மென்பொருள் விருத்தி (Software Development) பற்றிய கல்வியைப் பெற்ற ஜருஷா ‘இனோவே’ (Innovay) என்ற நிறுவனத்தில் நிர்வாகச் செயலாளர் பதவியில் இணைந்தார். ரொபின்சன் பி.பிரசாந்தன் என்பவர் இந் நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவியிருந்தார். இங்கு பணியை ஆரம்பித்தது ஜருஷாவுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகப் போய்விட்டது.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய நகரங்களில் இருக்கும் அலுவலகங்களிலிருந்து ‘இன்னொவே’ இணையத் தளங்கள் (Web), மொபைல் பிரயோகங்கள் (Mobile Apps), சமூக வலைத் தளங்கள் (Social Media) ஆகிய துறைகளுக்கு மென்பொருள் சேவைகளைச் செய்து வருகிறது ‘இனோவே’.

ஜருஷாவின் நிறுவனம்

ஜருஷாவின் திறமை பற்றிப் பிரசாந்தன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். அவரைத் தர உத்தரவாதத்தில் (Quality Assurance) 6 மாதப் பயிற்சிக்காக கொழும்பிலுள்ள SLIT என்னும் நிறுவனத்திற்கு அனுப்பினார். அப் பயிற்சி முடிந்து திரும்பி வந்து நான்கு வருடங்கள் ஜருஷா ‘இனொவே’ யில் பணி புரிந்தார்.

2017 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது ‘ஸ்ரார்ட்டப் வீக்கெண்ட்’ (Stratup Weekend) என்ற நிகழ்வில் ஜருஷா பங்குபற்றினார். “வெற்றிகரமான இளம் தொழில் வல்லுனராக ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் நான் அங்கு போகவில்லை. பாடசாலைக் காலங்களில் ஏற்பட்ட தோல்விகளினால் இழந்துபோன எனது துணிவையும், தன்நம்பிக்கையையும் மீளப் பெறுவதற்காகவே நான் ‘ஸ்ரார்ட்டப் வீக்கெண்ட்’ டுக்குப் போனேன் என்கிறார் ஜருஷா. நிகழ்வைப் படம் பிடிக்கவும் பதிவு செய்யவுமென ஒரு ஊடகராகவே அவர் அங்கு சென்றிருந்தார். அதன்போது கிரகித்த விடயங்கள் அவரை உத்வேகப்படுத்திவிட்டன. அடுத்த கட்டமாக அவரது சுய தொழில் முயற்சி பாய்ச்சல் கண்டது.

ஜருஷாவின் திறமையும், பிரஷாந்தன் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும் இணைந்து, சம பங்காளிகளாக, ‘ezBooking.io’ நிறுவனம் பரிணமித்தது. சிறிய, நடுத்தர பயண விடுதிகளுக்கும், உணவகங்களுக்கும் தேவையான ‘இனொவே’ யின் தயாரிப்புகளான, முழுமையான கணனிச் சேவைகளை ‘ஈசிபுக்கிங்க்’ வழங்குகிறது. இணையத்தளம், இணையத்தின் மூலம் விடுதிப் பதிவுகள் (online booking), வாடிக்கையாளர் தரவுப் பராமரிப்பு, போன்ற வியாபாரத் தேவைகள் போன்றவற்றின் முழுமையான சேவைகளை இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வழங்குகின்றன.

தொடங்கி முதலாவது வருடத்திலேயே, ‘ஈசிபுக்கிங்’ 100 பயண விடுதிகளைத் தனது வாடிக்கையாளர்களாக்கியது மட்டுமல்லாது 1000 த்துக்கும் மேலான பதிவுகளை (booking) யும் செய்திருக்கிறது. இன் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட டெல்ப்ட் சமுத்திரா (DeftSamudra.Com) இணையத்தளத்தைப் பார்த்த பின்னர் எனக்கே ஆச்சரியமாகவிருந்தது இப்படியொரு இடம் நெடுந்தீவில் இருக்கிறதா என.

நெடுந்தீவிலுள்ள ‘டெல்ப்ட் சமுத்திரா’ – இணையத்தளம்

சென்ற வருடம் (2018) டெல்ஹியில் நடைபெற்ற, ரெக்சாஸ் (ஒஸ்ரின்) பல்கலைக் கழகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட ‘சவுத் ஏசியன் கன்னெக்ட்’ நிகழ்வில் சிறீலங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சிறந்த ‘ஸ்ரார்ட்டப்’ என்ற விருது ஈசிபுக்கிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. கனடாவின் ‘உலக பல்கலைக்கழகச் சேவை’ விருதும், சிறீலங்கா தேசிய வர்த்தக சம்மேளன விருதும் (2108) ‘ஈசிபுக்கிங்’ நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளன.

பெண்ணாக இருப்பது அனுகூலமாக இருக்கிறது. ஆண்களை விடப் பெண்களை வாடிக்கையாளர் அதிகம் நம்புகிறார்கள்

ஜருஷா ஜயச்சந்திரன், ஈசிபுக்கிங்.io.

ஜருஷாவின் அயராத விடாமுயற்சியும், தன்நம்பிக்கையும் அவரது தொழிலின் வேகமான வளர்ச்சியை உறுதிசெய்துள்ளன. சிறீலங்கா சுற்றுலாச் சபை, அறுகம் பே ஹொட்டேல் அசோசியேசன் போன்றவற்றுடன் ஜருஷா தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் பல வாடிக்கையாளர்களைத் தேடியுள்ளார். ஒவ்வொரு பயண விடுதி, உணவகமென்று கதவுகளைத் தட்டி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொள்கின்றார். காலை 3 மணிக்கு சங்கானையிலிருந்து புறப்பட்டுத் திருமலை சென்று மாலை 9 மணிக்கு வீடு திரும்புவது வழக்கமாகி விட்டது அவருக்கு.

சிறீலங்காவில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெண் தொழில் முகவராக இருப்பதில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்று ஜருஷாவிடம் கேட்டபோது “பெண்ணாக இருப்பது அனுகூலமாக இருக்கிறது. ஆண்களை விடப் பெண்களை வாடிக்கையாளர் அதிகம் நம்புகிறார்கள்”

இதுவரை அவர் எதுவித அசம்பாவிதங்களையும் சந்திக்கவில்லை. சில வேளைகளில் வாழ்க்கையில் அவர் சவால்களை எதிர்கொள்ளும் விதம் வித்தியாசமானதாகவும் இருக்கலாம்.

ஜருஷா வேலைக்குப் போகத் தேவையில்லை, கல்யாணத்தைக் கட்டிக்கொண்டு வீட்டில் பேசாமல் இருக்குமளவுக்கு வசதிகளுண்டு என்கிறார் அவரது தந்தையார். குடும்பத்தினரும் உறவினரும் வேலைக்குப் போவது பற்றி வம்பு தான் பேசுகிறார்கள். வம்பு பேசுவதும் , கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக, சிறீலங்காவின் தேசீய விளையாட்டுகளில் ஒன்றுதானே. கல்யாணம் கட்டிக்கொள்வதோ, வீட்டிலிருப்பதோ இப்போதைக்கு ஜருஷாவின் திட்டங்களில் இல்லை.

தன் தொழிலுக்கு அப்பால், பெண்களைத் தொழில் முகவர்களாக ஆக்கவேண்டுமென்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். கடந்த மாதம் யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தில் பெண்கள் அணியொன்றை உருவாக்கி அதற்குத் தலைவராகவும் செயற்படுகிறார். இதில் தற்போது 30 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலோர் கோழி வளர்ப்பு, விவசாயம், உணவுத் தயாரிப்பு போன்ற தொழில்களை நிர்வகிக்கிறார்கள். அவர்களில், கொக்குவிலிலுள்ள ஒரு மூதாட்டி, உணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பணை செய்கிறார். ‘அவருடைய கடையைக் கண்டுபிடிப்பதே, அதற்கு முன்னால் வரிசையில் காத்து நிற்கும் மக்களைக் கொண்டுதான்’ என்று சொல்லிச் சிரிக்கிறார் ஜருஷா.

ஜருஷா இந்தியாவுக்குப் போயிருந்தபோது ‘ரெக்ஸ்ரார்ஸ்’ (TechStars) நிறுவன முகவர்களைச் சந்தித்தார். அவர்கள்தான் ‘ஸ்ரார்ட்டப் வீக்கெண்ட்ஸ்’ நிகழ்வுகளை ஒழுங்குசெய்பவர்கள். ஜருஷாவின் முயற்சியால் சிறீலங்காவில் முதன் முதலாகப் பெண்களுக்கான ‘ஸ்ரார்ட்டப் வீக்கெணட்ஸ்’ நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதன் முதன்மை அமைப்பாளராக ஜருஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. ஆ-ர்

Print Friendly, PDF & Email
>/center>