ஜம்மு & காஷ்மீர் | இரண்டரை வருடங்களாக அரசு ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை – கவன ஈர்ப்புக்காக 25 வயது வாலிபர் தற்கொலை

இந்திய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீர் பகுதியில், கடந்த புதனன்று 25 வயது வாலிபரான ஷோயப் பஷிர் மீர் தற்கொலை செய்துள்ளார்.

முதுமாணிப் பட்டதாரிப் படிப்பை மேற்கொண்டிருந்த மேற்படி வாலிபர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது வாக்குமூலத்தைக் காணொளி மூலம் பதிவு செய்துள்ளதாகவும் அதில் கடந்த இரண்டு வருடங்களாக, ஆசிரியரான தனது தந்தையார் உட்படப் பல அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனவும் இவ்விடயத்தை உலகின் அவதானத்திற்குக் கொண்டுவருவதற்காகவே தான் தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“எனது தற்கொலையின் மூலம், எனது தந்தையாரினது மட்டுமல்ல, கடந்த இரண்டரை வருடங்களாகச் சம்பளம் வழங்கப்படாமையால் வருந்தும் அனைத்து ஆசிரியர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென நான் நம்புகிறேன். கடந்த இரண்டரை வருடங்களாக எங்கள் வாழ்வு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துயரம் தருவதாக இருந்தது” என மீர் தனது காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தென் காஷ்மீரப் பகுதியிலுள்ள அவில் கிராமத்தைச் சேர்ந்த மீர், நஞ்சருந்திய நிலையில் சிறிநகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார் எனத் தெரிகிறது. ஒன்றரை நிமிடங்கள் பதிவு செய்த காணொளியில் “பொறுமையாக இருங்கள்” என அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

2019 அக்டோபர் 30 அன்று, தனி மாநிலமாக இருந்த ஜம்மு & காஷ்மீர் பிரதேசம் ‘ஜம்மு & காஷ்மீர் மீளொளுங்குச் சட்டம் (2019) இன் கீழ் இந்தியாவின் யூநியன் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீர விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. மீரின் தந்தை விடயத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையைத் தொடர்ந்து தனது நியமனம் அப்போதைய மாநில அரசினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என தந்தையார் பஷிர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தந்தையார் பஷிர் அஹ்மட் மீர் ஒரு முன்னாள் விடுதலைப் போராளியெனவும், 2008 இல் அவர் அரசாங்க ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. பொலிஸ், இராணுவம், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரது விசாரணைகளின் பின்னர், 2014 ஆம் ஆண்டு அவரது நியமனம் நிரந்தரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதா மாதம் நிரந்தரச் சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டு வந்தது, 2019 இல் இப் பிரதேசத்தின் நிர்வாகம் இந்திய மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் எனக்கூறி 65 ஆசிரியர்களது மாதாந்த சம்பளம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

“2018 இல் சம்பளம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அரச உத்தியோகத்தர்கள் சிலரது குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களை வெளிக்கொணர ஒரு இளைஞரது உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஜே&கே நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்” என முன்னாள் ஜே&கே முதலமைச்சர் மெஹ்பூபா மஃப்ரி தெரிவித்துள்ளார்.