ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி – ஜூலை 20 வாக்கெடுப்பு
இன்னும் கோதாபயவின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை
ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஜூலை 20 இல் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார். பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இத் தெரிவு இடம்பெறும்.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைத்ததும் உடனடியாக தற்போதைய பிரதமர் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்பார். அதைத் தொடர்ந்து ஜூல்ய் 20 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் தெரிவாகும் ஜனாதிபதி மீதியாகவுள்ள தவணைக் காலத்துக்கு பதவி வகிப்பார்.
இதுவரை இப் பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகிறார்கள். ஐ.தே.கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க, சமாகி ஜன பலவேகய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச, சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து டலஸ் அளகப்பெருமா ஆகியோரே அவர்கள். நாட்டின் வரலாற்றில் தவணைக் காலம் முடியுமுன்னரே பதவி காலியாகுவது இது இரண்டாவது தடவை. இதற்கு முன்னர், மே 1, 1993 இல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் கொலையை அடுத்து பதவி காலியாகியிருந்தது.
விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பத்துக் கட்சிக் கூட்டணியுட்பட ஏனையோர் அளகப்பெருமாவை ஆதரிக்கவுள்ளதாகத் தெரிகிறது. கட்சி அரசியலில் விருப்புக் கொள்ளாத சுயாதீனமான ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்பதே ஜே.வி.பி.யின் விருப்பம். இதனால் அவர்களது தெரிவு சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தனவை ஜனாதிபதியாக நியமிக்கவேண்டுமென்பதே அக் கட்சியின் விருப்பம். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாத நிலையில் அபயவர்த்தன தவிர்ந்த மூவரும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளார்கள். 50% மான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.
இதஹ்ற்கு முதல் ஜனாதிபதி ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் விரைவில் கிடைக்கும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.