News & AnalysisSri Lankaமாயமான்

ஜனாதிபதி பசில் ராஜபக்ச பராக்…பராக்….

அலம்பலும் புலம்பலும்…

மாயமான்

பசில் ராஜ்பகசவின் வருகை, ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப் போல பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரு வெற்றியைத் தேடிக்கொடுத்ததற்காகத் தரப்பட்ட பரிகாரத்தின் விளைவு என்று எண்ணத் தேவையில்லை. அவமானத்தோடு வெளியேறவிருக்கும் ஒரு ஆட்சியைக் காப்பாற்ற எடுக்கும் இறுதி முயற்சியின் விளைவே அது. இதனால்தான், அண்ணன் மஹிந்த கொடுக்க மறுத்த நிதியமைச்சை பலாத்காரமாகப் பிடுங்க அவரால் முடிந்திருக்கிறது. இது அவருக்குக் கிடைத்த முதல் கள வெற்றி. ஒருவகையில் கந்தகப் புகையெழுப்பாமல் அமைதியாக நடைபெற்ற அமெரிக்க சதியின் வெற்றி. மஹிந்தவும், கோதாபயவும் ஏறத்தாள வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்களே.

ராஜபக்ச சகோதரர்கள் அபூர்வ பிறவிகள். மூன்று சகோதரர்களிலும் மூன்று தனி ரகமான குணாதிசயங்கள் உண்டு. மஹிந்த வாய்ச்சாதுரியம் மிக்கவர், புழுகர். இடத்துக்குத் தக்கதுபோலப் பூசி மெழுகிக் கதைத்து தப்பி விடுவார். சொல்வதைச் செய்ய்ம் பழக்கம் அவரிடமில்லை.

கோதாபய முற்கோபக்காரர். அதிகம் பேசுவதில்லை. புழுகவோ பூசி மெழுகவோ தெரியாது. எடுத்த முடிவை நிறைவேற்றவேண்டுமென்ற பிடிவாதம் கொண்ட ஒரு இராணுவ நெறி கொண்டவர். அவரது ஆலோசகர்கள் பெரும்பாலும் இராணுவத் சிந்தனை கொண்டவர்கள். அவருக்கும் அரசியலுக்கும் சரிவராது என்பதை அவரே ஒத்துக்கொண்டு ஒதுங்கிப் போனவர். அவர் ஒரு fresh face என அவரை முன்தள்ளி ராஜபக்ச தரப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.

பசில் இந்த மூவருள்ளும் மிகவும் தந்திரமாகச் சிந்திப்பவர். எவரையும் அவர் தன் வாய்மொழியாலோ அல்லது பண, வள வலிமைகளினாலோ வளைத்துப் போட்டுவிடுவார். ஒரு வகையில் யதார்த்தவாதி (pragmatist). 2005ம் ஆண்டு மஹிந்த ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமான விடுதலைப் புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பு பசிலின் எண்ணக்கரு. அதை எப்படிச் சாதித்தார் என்பது பலரும் அறிந்த ரகசியம்.

போரின் முடிவின் போதும் மேற்குநாடுகளின் இறுதி முயற்சியான விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவினரது சரணடைவை முன்னின்று எதிர்கொள்ளும் அரச தரப்பில் பசில் ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் இருந்தார்கள் எனவும் (மஹிந்த அப்போது வெளிநாட்டில் இருந்தார்) கோதாபய அவர்களை நிறுத்திவிட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. கே.பி.யின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேரப் பேச்சுவார்த்தைகளில் பசில் ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். களமுனைக்கு அவர் செந்றிருந்தால் முடிவுகள் வேறாகவிருந்திருக்கும் என நம்புபவர்களும் இருக்கிறார்கள்.

போரின் அழிவுகளுக்குப் பிறகு தமிழருக்கு அரசியல் தீர்வொன்றை வழங்கவேண்டுமென்ற விடயத்தில் பசில் ராஜபக்ச இணக்கம் கண்டிருந்தார் எனினும் மஹிந்த ராஜபக்ச தென்னிலங்கை சிங்களத் தேசியவாதிகளின் அழுத்தங்களுக்கு இலகுவாக வளைந்துகொடுத்துவிடுவதனால் பசிலின்ஆலோசனைகள் எடுபடமுடியாமற் போய்விட்டது எனக் கூறப்படுகிறது.

2019 இல் ஜனாதிபதி கோதபாய 6.9 மில்லியன் வாக்குகளுடன் ஆணையைப் பெற்றதும், அவரது இராணுவ நண்பர்களும் ‘வியத்மக’ பேராசிரியர்களும் ஜனாதிபதியின் உள்வட்ட ஆலோசகர்களாக ஆனதும் பசில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டார். அவர் எதிர்பார்த்த நிதி அமைச்சுடன் கூடிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சை அவருக்குக் கொடுக்க மஹிந்த விரும்பாமையால் அவர் மன வெறுப்புடன் அமெரிக்காவிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார் எனத் தெந்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அவரது ஆலோசனைகளை உள்வாங்காது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல் நாடு வெளிநாடுகளின் கடனில் அமிழ்ந்துபோகும் நிலை உருவாகிவருகிறது. இதன் விளைவாக சீனா இலங்கையில் மிகவிரைவாகக் குடிகொள்ளும் நிலைமை நாட்டிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களைக் கவலைகொள்ள வைத்தன. அதே வேளை, தற்போதுள்ள ராஜபக்ச குடும்பத்தினரில் மேற்குநாடுகள், குறிப்பாக அமெரிக்கா ஓரளவு பேச்சுவார்த்தைகளைச் செய்யக்கூடிய ஒரே ஒருவர் பசில் மட்டும்தான். எனவே அவரின் வருகையின் பின்னால் மேற்குநாடுகள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதனால் தான் பசிலின் மீள்வருகை ஏறத்தாள ஒரு ambush தரத்துடனாக இருக்கிறது என நான் கருதுகிறேன். ‘உங்களால் முடியாது விலகிக்கொள்ளுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்னும் ஒரு hostile takeover ஆக அவரது வருகை இருக்கிறது என நான் கருதுகிறேன். மேற்குநாடுகளின் பிந்னுதவி இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

பசிலின் முதல் வெற்றி

ராஜபக்சக்களின் வெற்றிக்குக் காரணமான பல பங்காளிக் கட்சிகளையும், தொழிற்சங்கங்கள், புத்த மகாசபையினரையும் இலகுவாகத் தூக்கி எறிந்துவிட்டு கோவிட் கட்டுப்பாட்டு விதிகளின் அநுசரணையுடனும் பொலிஸ். இராணுவ உதவியுடனும் ஆட்சியை முன்னெடுத்து சீனாவின் துறைமுகநகரம் பணத்தை வாரி இறைக்கும் என்ற நம்பிக்கையுடன் சீனாவில் எழுதப்பட்ட நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி இறுகப்பற்றிக்கொண்டு இருப்பது மிகவும் அபாயகரமானது என்பதை பசில் மட்டுமல்ல, மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும் கூடப் புரிந்துகொண்டு விட்டனர். இம் மக்களையோ, அல்லது சிவில் சமூக அமைப்புக்களியோ சமாதானப்படுத்த முயற்சிக்காமல் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் உதாசீனம் தள்ளிவிட்டுப் போகும் முறை பலன் தராது. ஒருகாலத்தில் ராஜபக்சக்களின் திட்டங்களை நடைமுறையாக்கிய foot soldiers ஆன விமல் வீரவன்ச, முறுத்தெட்டுவ தேரர், உதய கம்மன்பில ஆகியோர் கோவிட் விதிகள் காரணமாக வீதிக்கு இறங்க முடியாவிட்டாலும், போருக்கான படைகளைத் தயார்செய்து வைத்திருக்கிறார்கள் என்பது பசில் போன்றவர்களுக்கே புரியும். எனவே தான் பசில் பதவியேற்றதும் முதல் செய்த காரியம், பங்காளிக் கட்சித் தலைவர்களைச் சமாதானம் செய்தது. இது அவரது முதலாவது வெற்றி.

பசசில் ராஜபக்ச இப்படியான ‘தீயணைப்பு’ விவகாரங்களில் மிகவும் மதிநுட்பத்தோடு செயற்படுபவர். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இப்போது பசில் புராணம் பாடத் தொடங்கி விட்டார்கள். அடுத்ததாக புத்த மகாசபையினர், தொழிற்சங்கங்கள் என அனைத்து முகாம்களிலும் பசில் நுழைந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த நடவடிக்கை

இப்போது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரிய விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளப்பெறுதல் பற்றியது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள்பரிசீலனை செய்வதை முக்கிய நிபந்தனையாக ஐ.ஒன்றியம் முன்வைத்திருந்தாலும், அமெரிக்காவின் உதவியுடன் அதற்கு கால அவகாசம் வாங்குவது பசிலின் அடுத்த முயற்சியென எதிர்பார்க்கலாம். அதில் அவர் இலகுவாக வெற்றிபெறுவார் என்பதில் சந்தேகமில்லை. கொறோணா பெருந்தகை மீது பழியைப் போட்டுவிட்டு ஐரோப்பிய ஒன்றியம் வளைந்து நெளிந்து அவகாசம் கொடுக்கும் என உறுதியாக நம்பலாம். ஆனால் அதற்குப் பரிகாரமாக வழக்கறிஞர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இதனால் ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பலரது மீசைகளில் மண்படாமல் அவரவர் முகாம்களில் win-win வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்திக் கொள்வார்கள்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மூலம் பசில் பொருளாதார வெர்றியை மட்டும் பெறப்போவதில்லை. ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள், குடும்பங்கள், இதர சகோதர தொழிற்சங்கங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடப் போகும் அடுத்த ராஜபக்ச பசிலாகவே இருக்கும். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மூலம் அவர் அடையும் பொருளாதார வெற்றியை விட அவருக்குக் கிடைக்கும் அரசியல் வெற்றிதான் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மகனுக்கு முடியைத் தந்துவிட்டு மஹிந்த ஓய்வு பெற்றுவிடுவார். ‘என்னை விட்டுவிடு ராசா என’ கோதாபய தனது துறைமுக நகர மாளிகையிலோ அல்லது இப்போதுள்ள குடிசையிலோ அமைதியாக ஓய்வெடுத்துக்கொள்ளலாம். வீரவன்ச குழுமத்தின் வீரக் குழறல்களுடன் பசில் அடுத்த ஜநாதிபதியாக வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

“நாட்டின் அடுத்த தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” எனக்கூறிய முறுத்தெட்டுவ தேரரைத் திருப்திப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவரும் இப்போது அந்நாட்டில் இல்லை. பாவம் சஜித் பிரேமதாச, புத்த துறவியாகப் போயிருக்க வேண்டியவர் தவறுதலாக அரசியலுக்குள் தள்ளப்பட்டுவிட்டார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பசில் ராஜபக்ச எண்ணற்ற சமரசங்களைச் செய்ய வேண்டும். அதிலொன்று வீரியம் குறைக்கப்பட்ட தமிழர் சுய நிர்ணய உரிமையாகவும் இருக்கலாம்.

அடுத்த சில வருடங்களில் தாய்வான் சீனாவின் இன்னுமொரு மாகாணமாக மாறிவிடுமானால் இலங்கையை சீனா கொஞ்சம் கடுமையாகவே கையாளும். அம்பாந்தோட்டை துறைமுகப் பிரதேசம் சீனாவுக்கு வெளியேயுள்ள மிகப்பெரிய Military Industrial Complex. அதையும் துறைமுக நகரத்தையும், இத்தனை முதலீடுகளின் பின்னரும், இலகுவாக விட்டுக்கொடுக்க சீனா இணங்காது. சீனாவுக்கு பசில் எதிரி. அது நாமல் ராஜப்கசவையே (அடுத்த பிரதமர்) முன்தள்ள முயற்சிக்கும்.

இப்படியான இழுபறிகளுக்குள் பசில் ராஜபக்சவைத் தக்கவைக்க அமெரிக்கா தன் அனைத்து முயற்சிகளையும் பாவிக்கும். முன்னர் போல ஜே.வி.பி. யும், இதர தொழிற்சங்கங்களும் ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு’ எதிராகத் தெருவுக்கு இறங்கமாட்டார்கள். எனவே அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ச என்பது ஏற்கெனவே அமெரிக்க மதில்களில் எழுதப்பட்டுவிட்டது.