Spread the love

சிவதாசன்

சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தல் 2019 நவம்பர் 15 – டிசம்பர் 17 திகதிகளுக்குள் நடைபெறும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள்

பல கட்சிகளும் தத்தம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.தே.கட்சி சில பங்காளிக் கட்சிகளைச் சேர்த்து பொதுவான ஒரு வேட்பாளரை முன்னிறுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது. சிறிலங்கா பொதுசன பெரமுன (SLPP) கட்சியின் வேட்பாளரை ( ராஜபக்ச தரப்பு) எதிர் வரும் ஆகஸ்ட் 11 இல் நடைபெறவிருக்கும் கட்சியின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. ஐ.தே.க. போன்றே ராஜபக்ச தரப்பும் பல பங்காளிக் கட்சிகளுடன் (18) பேச்சுவார்த்தை நடாத்தி இறுதியில் 10 கட்சிகளுடன் ஜூலை 26 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவிருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் இதில் அடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை ஜனாதிபதி சிறீசேன போட்டியிடுவது பற்றி இன்னும் திடமான முடிவொன்றையும் எடுக்காத போதும் பின்னணியில் பல நகர்வுகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் அறியப்படுகிறது. சென்ற தடவை ஜனாதிபதி தேர்தலில் சிறீசேன வெல்வதற்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் காரணமாக இருந்த காரணத்தால் இந்தத் தடவை தமிழர் தரப்பில் எவரையாவது வேட்பாளராக நிறுத்த ராஜபக்ச தரப்பு முனையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஐ.தே.கட்சியில் பங்காளிக் கட்சி ஒன்றின் பிரதிநிதி வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் அதௌ ஐ.தே.கட்சிக்கு அனுகூலமாக இருப்பினும் ஐ.தே.கட்சியின் அங்கத்தவர்களான சஜித் பிரேமதாசவோ அல்லது கரு ஜயசூரியாவோ தேர்ந்தெடுக்கப்படின் அது கட்சிக்குள் ஏற்கெனவே இருக்கும் பூசல்களைத் தவிர்ப்பதற்கு உதவியாகவிருக்கும். ஜே.வி.பி. கட்சியைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் களைவதில் முனைப்போடு இருக்கின்ற வகையில் அவர்கள் ராஜபக்ச கூட்டணியில் சேராது ஐ.தே.க. கூட்டணியில் இணைந்து கொள்வதையே விரும்புவார்கள். அப்படியாகில் அவர்களது பிரதிநிதி ஜனாதிபதி வேட்பாளராகவும் நியமிக்கப் படலாம். த.தே.கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ராஜபக்ச தரப்புடன் சேர்ந்துகொள்வது சாத்தியமேயில்லை. இன்னுமொருதடவை பற்களைக் கடித்துக்கொண்டு ஐ.தே.க. கூட்டணியுடன் இணைவது அல்லது எவருக்கும் ஆதரவு தராமல் இருப்பது என்ற தேர்வுகள் தான் அவர்களுக்கு உண்டு. இரண்டாவது தேர்வும் ராஜபக்ச தரப்புக்குச் சாதகமாகவே இருக்குமென்பதால் மீண்டும் பற்களை இறுகக் கடிப்பதைத் தவிர வேறொரு தேர்வும் இல்லை.

தேர்தலில் எவர் குறைந்தது 50%+1 என்ற எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 2015 இல் நடைபெற்ற தேர்தலில் சிறீசேன 51.28% வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார். எனவே இந்த தடவை ராஜபக்ச தரப்பு சாதுரியமாகச் செயற்பட்டால் அவர்கள் முன்னிறுத்தும் வேபாளர் வெல்வதற்கான சாத்தியங்கள் உண்டு.

2015 தேர்தலில் சிறிசேன வெற்றி பெறுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. சந்திரிகா பண்டாரநாயக்கா, மேற்கு நாடுகள் முக்கியமான பங்கு வகித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா அணி இந்தத் தடவையும் ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. ராஜபக்ச தரப்பு இந்தத் தடவையும் ஐ.தே.கட்சி மேற்கு நாடுகளுடன் சேர்ந்து புலம் பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்கிறது என்ற கோஷத்துடன் பிரசாரத்தை முடுக்கிவிடக் காத்திருக்கிறது. இந்தத் தடவை சிறீசேனா போட்டியிடாமல் கோதபாய ராஜபக்ச களமிறங்கினால் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றியை ஈட்டுவதற்கு நிறையவே சாத்தியங்கள் உண்டு. இந்த நிலையில் தமிழர் வாக்குகள் பிரிக்கப்பட்டால் ராஜபக்ச தரப்பின் வெற்றி உறுதியாக்கப்படும்.

ராஜபக்ச தரப்பின் வெற்றியின் விளைவுகள்

2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறீசேன ஜனாதிபதியாகவும் ஐ.தே.க. ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தமிழருக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறாவிடினும் நாட்டிற்கு விளைந்த நன்மைகள் பல. அவற்றில் முக்கியமானவை: ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டமை, நீதித்துறை போன்ற ஜனநாயக அங்கங்கள் சுதந்திரமாகப் பணியாற்ற வழிசெய்தமை ஆகிய சில. அரசியலமைப்பின் 18, 19 வது திருத்தங்கள் இவற்றுக்கு வழிகோலின. இருப்பினும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைப் பாராளுமன்றம் நிறைவேற்றவிருந்த தருணத்தில் சிறீசேனவின் அக்டோபர் (2018) ‘புரட்சி’ தமிழர்களின் கனவைச் சிதறடித்து விட்டது. இதன் பின்னணியில் சிங்களப் பேரினவாத சக்திகள், குறிப்பாக ராஜபக்ச தரப்பு செயற்பட்டிருந்தது என்பது வெட்ட வெளிச்சம்.

தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைப் பல விட்டுக்கொடுப்புகள், அவமானங்கள், பல்லிளிப்புகள் மத்தியிலும் த.தே.கூ. பேரம் பேசிப் பெற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் தான். இத் தீர்வு சாத்தியமாகுமானால் அது ரணில் விக்கிரமசிங்க அரசின் காலத்திலேயே தான் முடியும் என்பதைக் கூட்டமைப்பு நம்பியிருந்தது. இதைத் தடுத்து நிறுத்தியது ஜனாதிபதி சிறிசேன தான். ராஜபக்ச தரப்பு சிங்களப் பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து சிறிசேனவுக்கு ஆசை காட்டி இக் காரியத்தைச் சாதித்திருக்கிறார்கள். சிறிசேனவிருக்கிருந்த ஒரே ஆசை தான் தொடர்ந்தும் ஜனாதிபதியாகவிருக்க வேண்டுமென்பதே.

ராஜபக்ச தரப்பின் வியூகம்

18, 19ம் திருத்தங்களுடனான அரசியலமைப்பு ராஜபக்ச தரப்புக்கு சிம்ம சொப்பனமாக ஆகிவிட்டது. ஒன்று மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்து விட்டது. அத்தோடு கோதபாய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையைக் காரணம் காட்டி அவரையும் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டது. ஆனாலும் கோதபாய தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கிறார். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகுமோ தெரியவில்லை.

எனவே ஜனாதிபதி பதைவியை ரஜாபக்ச தரப்பின் வேட்பாளர் கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் முதல் நடவடிக்கையாக அவர்கள் செய்யப்போவது 18ம், 19ம் திருத்தங்களைச் செயலிழக்கச் செய்து ஜனாதிபதியின் களையப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை மீள் நிர்ணயம் செய்து கொள்வது. இதனால் தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பல தீங்குகள் ஏற்படக் காரணமாகும்.

சிறிசேன கையில் இருக்கும் காவல் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரங்கள் முறையாக இயங்குமாயின் கோதபாய ராஜபக்சவின் நடவடிக்கைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம் எனினும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ராஜபக்ச தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நடபெறுகிறதாகவே படுகிறது. அத்தோடு ராஜபக்ச தரப்புக்குத் தேவையான பிரசாரப் பீரங்கிகளான ஞானசார தேரர், அதுரலிய ரத்தின தேரர் அவர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டுவைத்திருப்பதும் அவர்களின் பக்கத்துக்கு வலுச் சேர்க்கும் விடயமாகவே தெரிகிறது. இச் சூழ்நிலையில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை ராஜபக்ச தரப்பு தமிழருக்கு எதிரானதொரு விஞ்ஞாபனமாகவே முன்னெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழர் தரப்பின் சவால்கள்

2015 தேர்தலைப் போன்று தமிழரின் வாக்குகள் யார் ஜனாதிபதியாவார் என்பதைத் தீர்மானிக்க முடியுமா என்பது இந்தத் தடவை சந்தேகமாகவே இருக்கப் போகிறது. காரணம் பலவீனமான ஐ.தே.க., எதிர்பார்க்க முடியாத முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் த.தே.கூட்டமைப்புக்கு எதிரான தமிழரின் பிரசாரங்கள். இத்தோடு சிங்களப் பேரினவாதிகளின் கைக்கூலிகளாகத் தமிழர் ஒருவரோ பலரோ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டால் தமிழர் எதிர்காலம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இருண்டதாகவே இருக்கும்.

 

Print Friendly, PDF & Email