Sri Lanka

ஜனாதிபதி தேர்தல்: யாழ்ப்பாண மக்களுக்கு அனுரகுமாரவின் எச்சரிக்கை!

“இலங்கை பூராவும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் மாற்றமொன்றைக் கோருகிறார்கள். இம்மாற்றத்திற்கான தேசிய இயக்கத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்” என வியாழனன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கா அறைகூவல் விடுத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கப்போவதாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த முடிவை விமர்சித்த திசநாயக்கா “நாட்டில் உருவெடுத்து வரும் சாதகமான மாற்றத்திற்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்கக்கூடாது. நாங்கள் இத்தேர்தலில் வெற்றியடையப்போவது திண்ணம். தெற்கில் நாங்கள் பல மில்லியன் வாக்குகளைப்பெறுவோம்; இவ்வெற்றியில் யாழ்ப்பாண மக்களும் பங்குகொள்ளவெண்டும் ” எனத் தெரிவித்தார்.


நாட்டில் ஒற்றுமையும், தேசிய ஒன்றிணைவும், சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படும் நிலையை உருவாக்க வல்ல ஒரு அரசாங்கத்தையே தாம் நிறுவுவோம் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதே வேளை வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அவர் ” வடக்கு மக்களுக்கு தெற்கு மக்கள் மீது அவநம்பிக்கையும் அதே போல் தெற்கு மக்களுக்கும் வடக்கு மக்கள் மீது அவநம்பிக்கையும் இருப்பதை நான் அறிவேன். இப்போது அது பெருமளவில் குறைந்துவிட்டது. சகலரும் ஒரு பாரிய தேசிய மாற்றத்தினைக் கோருகிறார்கள். தெற்கு மக்கள் இம்மாற்றத்திற்கு எதிராக ஒன்றிணையும்போது அதற்கு எதிராக வடக்கு மக்கள் அணிதிரண்டு வாக்களித்தால் தெற்கு மக்களின் மனப்பான்மை எப்படியிருக்கும் என்பது குறித்து யாழ்ப்பாண மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாங்கள் கட்டாயம் வெற்றியடைவோம். அவ்வெற்றியில் நீங்களும் பங்குகொள்ளாவிட்டால் அதை எதிர்த்தவர்கள் என்ற அடையாளத்தைச் சுமக்கவேண்டி வரும்” பேசியிருந்தார்.

அனுரகுமார திசநாயக்காவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் நடைபெற்றன.