ஜனாதிபதி தேர்தல் | மூன்றாவது அணி வெற்றியைத் தீர்மானிக்கும்! -

ஜனாதிபதி தேர்தல் | மூன்றாவது அணி வெற்றியைத் தீர்மானிக்கும்!

அநுரகுமார திசநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைப்பு (NPP) பலம் வாய்ந்த மூன்றாவது சக்தியாக உதயம்.
சிவதாசன்

இந்த மாதம் 18ம் திகதி காலிமுகத் திடலில் ஒரு புதிய அரசியல் சக்தி ஒன்று உருவெடுத்திருக்கிறது. ஜே.வி.பி. உள்ளிட்ட 30 அமைப்புக்கள் சேர்ந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி என்று அந்த அமைப்புக்குப் பெயர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது சார்பில் ஒருவரைக் களமிறக்குகிறார்கள். அவர் நாட்டில் நன்கு அறியப்பட்ட நேர்மையான அரசியல்வாதி, ஒரு உண்மையான இடதுசாரி. தற்சமயம் ஜே.வி.பி. கட்சிக்குத் தலைமை தாங்கும் அனுர குமார திசநாயக்கா.

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இடதுசாரிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்றவர்கள் அழித்துவிட்டுப் போன இலங்கையின் இடதுசாரி இயக்கம் தேசிய மக்கள் சக்தியாக மீண்டும் உருவெடுத்திருக்கிறது. வரலாறு திருப்பி எழுதப்படுகிறதா? காலி முகத் திடலில் திரண்ட மக்கள் பெருவெள்ளம் அதைத் தான் சொல்கிறது.

“காலி முகத் திடல் எங்கும் மனித தலைகள். ஆனால் அவைகள் ஒன்றும் வெற்றுத் தலைகள் அல்ல”

அருந்ததி சங்கக்கார

ராஜபக்ச குடும்பத்தாலோ அல்லது ஐ.தே.கட்சியாலோதான் காலிமுகத் திடலை நிரப்ப முடியுமென்ற இரு தரப்பினரினதும் இறுமாப்பு தவிடு பொடியானது. பெண்கள், பால் கொடுக்கும் குழந்தைகளுடன் மார்புகளோடு இறுக அணைத்தபடி கிராமங்களிலிருந்து காலிமுகத்துக்கு வந்திருந்தார்கள். அன்று நடந்தது ஒரு வரலாற்றுப் பிரளயத்தின் சாட்சியம்.

Photo Credit: Colombo Page

சமூக ஊடகங்கள் சில வருடங்களாக உலகெங்கும் மாபெரும் புரட்சியைச் செய்து வருகின்றன. அரபு வசந்தமாக வந்து அராஜக ஆட்சிகளைப் புரட்டி எடுத்த பின் இப்போது ஜனநாயக மரபின் பாரம்பரிய அரசியல் தளங்களை ஜனரஞ்சகத் (populism) தேர்வுகள் மூலமாக மாற்றீடு செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவே நிலை. வழக்கமான இருகட்சி அரசியலை மக்கள் ஒதுக்கி வருகிறார்கள். கிளிப்பிள்ளைப் பாடங்களை விடப் பலவிதமான மாற்றுப் பாடங்களும் உண்டு என்பதைச் சமூக வலைத்தளங்கள் கற்பித்துவருகின்றன. பிரான்சில் மக்றோன், அமெரிக்காவில் ட்ரம்ப், யூக்கிரெய்னில் செலென்ஸ்கி என்று மக்கள் மாற்றுத் தலைமைகளையும், மாற்றுச் சித்தாந்தங்களையும் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜே.வி.பி. தன் கடந்த காலப் பாடங்களை நன்றாகவே மனப்பாடம் செய்து வைத்திருக்கிறது. தீவிரவாத வாகனங்கள் ஓடுவதற்கான பாதைகள் இப்போது இல்லை. ஒவ்வொரு குடிமகனினது விரல்களும் தான் இன்றய ஜனநாயகத்தைத் தக்கவைத்திருக்கின்றன.

Photo Credit: Colombo Page

சிறீலங்காவில் அரங்கேறிய அக்டோபர் 2018 புரட்சி, மக்களின் மனநிலைகளை, புத்திசாலித் தனங்களை, மட்டமாக எடைபோட்ட பாரம்பரிய அரசியல்வாதிகளால் தான் நிறைவேற்றப்பட்டது. பக்க விளைவாக, நேர்மையான அரசியல்வாதிகளை அது புடம் போட்டுக் காட்டிக் கொடுத்தது. அதுவே இந்த மக்கள் சக்தி.

Related:  கோதாவின் இலங்கை...

கடந்த நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் நடைபெற்றது, ஒரு வகையில், ஒற்றை ஆட்சியே. அரசாங்கமும் எதிர்க்கட்சி இல்லாத அரசாங்கமாகவே செயற்பட்டது. 19வது திருத்தம் நீதித் துறை, பாராளுமன்றம் போன்ற சாதனங்களை ராஜபக்சவின் சிறையிலிருந்து மீட்டுக் கொடுத்திருந்தாலும் அவற்றைச் சுதந்திரமாக நடமாட நல்லாட்சி அனுமதித்தது என்று சொல்ல முடியாது. குற்றவாளிகள் அதே சீருடைகளுடன், அதே பணியகங்களில், அதே இறுமாப்புடன் பதவியுயர்வுகளைக் கொண்டாடி மகிழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஊழல் திணைக்களம் மட்டுமே ஒழுங்காகப் பணிபுரிகிறது.

எதிர்க்கட்சி மாற்றப்பட்டதன் பின்னரும் நிலைமை மாறவில்லை. ராஜபக்ச குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றுவதில் செலுத்தும் கவனம் அரசைக் கேள்வி கேட்பதில் செலுத்தவில்லை. சதிகளும், சாணக்கியமும், பேரம் பேசுதலும் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்தது. புலிகளை ஒழித்து பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய ரட்சகர் கோதாபாயவை முள்ளிவாய்க்காலில் நிறுத்திவைத்துக்கொண்டு நகர்ந்துவிட்ட மக்களை மீளவும் அழைக்கிறார்கள். தேசிய பாதுகாப்பு என்று நாட்டைச் சுற்றி இனவாதத்தால் வேலிபோட முனைகிறார்கள். மக்கள் வெகுதூரம் சென்றுவிட்டார்கள். வேலிகளற்ற உலகத்தைச் சமூகவலைத்தளங்கள் அவர்களுக்குக் காட்டிவிட்டன. பாரம்பரிய அரசியல் கட்சிகளையும், வெள்ளையாடை அரசியல்வாதிகளையும் அவர்கள் இனம்கண்டுவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் தேடுவது நேர்மையான அரசியலை, அரசியல்வாதிகளை, அமைதியான எதிர்காலத்தை. அவர்கள் விருப்பமே அன்று காலிமுகத் திடலில் திரண்டு நின்றது. அதுதான் அவர்களின் சக்தி. நாகரிகமான, நேர்மையான நாடொன்றைக் கட்டியெழுப்ப விரும்பும் அந்த சக்தி அனுரகுமார திசநாயக்காவை மேய்ப்பராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

இந்த சக்தியில் பெண்களின் பங்கு அபாரமானது. நிறையப் பெண்கள் ஆத்மார்த்தமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசியிருந்தார்கள். புத்திவசப்பட்ட புதிய பெண்தலைமுறையொன்று இப்போதுதான் முகம் காட்டியிருக்கிறது. அது நல்ல அறிகுறி.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய, சஜித் / ரணில் / கரு, அனுரா என்ற மும்முனைப் போட்டியே நடைபெறும் . இரண்டாவது ஆட்டத்தில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது தேசிய மக்கள் சக்தியாகவே இருக்கப்போகிறது. நல்லாட்சியால் மீண்டும் மீண்டும் காயப்படுததப்பட தமிழர் தரப்பு மக்கள் சக்தியுடன் நிற்பதுவே சிறந்தது. தமிழ் மக்கள் வாக்குகளைச் சிதையாமல் கட்டிக் காப்பதுவே அவர்கள் கடமையாக இருக்க வேண்டும். வெடி கொழுத்தும் சிறுவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக தீபாவளி வந்துவிட்டதென்று அர்த்தமில்லை. நம் தலைவர்களும் புத்திக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும்.

சமன்பாடு பல தெரியாக் காரணிகளைக் கொண்டிருக்கிறது. கோதபாய குடியுரிமை விடயத்திலோ அல்லது அவரது குற்றச்செயல்களால் தண்டிக்கப்படுவதனாலோ வேட்பாளர் தகைமையை இழக்கலாம். இந்நிலையில் சிராந்தி ராஜபக்ச வேட்பாளராகலாம். ஐ.தே.க. தரப்பில் ரணிலுக்கு வேட்பாளர் பதவி போனால் அக்கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டு வாக்காளர் ஏனைய தரப்புக்களுக்குத் தாவலாம். முஸ்லிம் தரப்பு திறமையாகப் பேரம் பேசி இரண்டாவது சுற்றில் ஒளித்து விளையாடலாம். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.

Related:  இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!

இடதுபக்கம் போதுமான அளவுக்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டது. பழைய ‘இசக்’ கனவுகளெல்லம் தகர்க்கப்பட்டு வாய்ப்பாடுகளற்ற, மக்கள் தேவை கருதிய அரசியலை முன்னெடுக்கும் இளைய தலைமுறையொன்றின் எழுச்சி காலிமுகத் திடலில் சூல் கொண்டிருக்கிறது. இடது பக்கம் நிற்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. வலது பக்கம் நாறடிக்கப்பட்டு விட்டது. இனி இடதுகளின் காலம்.

குரல்கள் ஆர்ப்பரிப்பது தெரிகிறது. அது சுனாமியாகவும் இருக்கலாம். அனுரா திசநாயக்காவே ஜனாதிபதியாக ஆகினாலும் ஆச்சரியப்படப் போவதில்லை. அதற்காகத் தமிழர் தரப்பு அணிலாகப் பயன்பட்டால் மகிழ்ச்சியே.

அருந்ததி சங்கக்காரவின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)