ColumnsSri Lankaசிவதாசன்

ஜனாதிபதி தேர்தல்| ஜெனரல் மஹேஷ் சேனநாயக்காவையே தமிழர் ஆதரிக்க வேண்டும்

சிவதாசன்

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக அறிவித்ததும் ஜனாதிபதி தேர்தலின் மர்மக் காய்நகர்த்தல்கள் முடிவுக்கு வந்து, தேர்தல் பரபரப்பு முன்தள்ளப்பட்டிருக்கிறது.

ஐ.தே.கட்சிக்கு வேறு வழியிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் பல பங்காளிகள், மங்கள சமரவீர உட்பட, சஜித் முகாமின் நீண்டநாள் விருந்தாளிகள். மனோ கணேசன், முஸ்லிம் கட்சிகள் பேரத்தின் விளைவாக இந்த முகாமுக்கு வந்தவர்கள். அவர்கள் மஹிந்த பக்கம் சாய்ந்திருந்தாலும் ஆச்சரியப்படப் போவதில்லை. ஆனால் கூட்டமைப்பு, வழக்கம்போல, உறுதியாக நிற்பது வரவேற்கத் தக்கது. இறுதியாக நடைபெற்ற சஜித் கூட்டத்தில் அவர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட வேண்டியது.

த.தே.கூட்டமைப்பு எந்த விதத்திலும் கோதபாய முகாமுக்குப் போகப் போகிறவர்கள் அல்ல. அது சாணக்கியமல்ல, மனச் சாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். தமிழ் மக்களும் ஏறக்குறைய இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள்.

முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகள் சஜித் முகாமில் விருந்துண்டாலும், கோதபாயவின் மசூதிச் சந்திப்புக்களில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இது சாணக்கிய வகையறாவுக்குள் அடங்கும்.

மனோ கணேசனின் நடிப்பு அரசியலைப் பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லை. கொழும்பில் அவர் வெற்றி பெறுவது அவரது பங்காளிகளால்.

குடிமைச் சமூக அமைப்புக்களின் பலம்

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விழுந்த வாக்குகள் 5.8 மில்லியன். மைத்திரிபால சிறிசேனவிற்கு விழுந்தது 6.2 மில்லியன் வாக்குகள். ராஜபக்ச குடும்பத்தின் வாக்குகள் ‘தமிழரை’ வென்று புலிகளை அழித்ததற்கான வாக்குகள். அவ்வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர் கோதபாய என்பது இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. அப்படியிருந்தும் மைத்திரிபால சிறீசேனவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குடிமைச் சமூக அமைப்புக்கள் (civil society groups).

மாதுலவாவே சோபித தேரர்

2015 இல் குடிமைச் சமூகங்களின் எழுச்சி முதல் முதலாக ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. நாட்டின் நன்மையை மட்டுமே முன்னிறுத்திப் பல குடிமைச் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டன. அதை வழிநடத்தி வெற்றியைத் தேடித்தந்தவர் மறைந்த வணக்கத்துக்குரிய மாதுலவாவே சோபித தேரர். நல்லாட்சியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர் கிராமங்களெல்லாம் நடந்தவர்.

அவர் கொண்டு வந்த நல்லாட்சி, எதிர்பார்த்த அளவுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஊழலை ஒழிக்கவில்லை. ஜனநாயக அம்சங்களைச் செயலாற்ற வைத்தமை மட்டும்தான் அவர்கள் பெற்றுக்கொடுத்த நன்மை.

இருப்பினும் இந்த ஏமாற்றம் குடிமைச் சமூகங்களை வலுவிழக்கச் செய்யவில்லை. அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்தத் தடவை அவர்கள் கட்சி சாராது செயற்படுகிறார்கள். ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டுமென்று போராடி வருபவர்கள் அவர்கள் தான். மைத்திரிபால சிறீசேன முயற்சி செய்த அக்டோபர் 2018 சதியை முறியடித்ததும் இந்த குடிமைச் சமூகம்தான்.

தேசிய மக்கள் இயக்கம்

சஜித் மீதோ, கோதபாய மீதோ அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களது தேர்வு கரு ஜயசூரிய. அவரை முன் தள்ளிப் பார்த்தார்கள். சஜித் முகாம் அதற்கு விட்டுக்கொடுக்க மறுக்கவே இப்போது தேசிய மக்கள் இயக்கம் (National Peoples Movement -NPM) என்ற அமைப்பின் மூலம் தமது வேட்பாளராக முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்காவை இறக்கியிருக்கிறார்கள். சஜித் முகாமிற்கும் ரணில் முகாமிற்கும் இடையில் பல குத்து வெட்டுக்கள். இன்னும் முடிந்தபாடில்லை. ரணில் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விடத் தயாரில்லை. கட்சி உறுதியாகவும், சிதறாமலும் இருக்க வேண்டுமானால் சஜித்தின் விருப்பங்களுக்கு இசைந்து போவதே சரி. என்ன இருந்தாலும் புதிய ஜனாதிபதியைவிடப் பாராளுமன்றத்துக்கும், பிரதமருக்குமே அதிக பலம்.

ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென்பதில், ரணில், குடிமைச் சமூகங்கள், கற்றோர், தொழிற்சங்கவாதிகள், ஜே.வி.பி., த.தே.கூ. எல்லோருமே உடன்படுகிறார்கள். தேர்தலுக்கு முன் 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதி ஒரு போதும் கட்சி சார்ந்தவராக இருக்கக்கூடாது; அவர் எந்தக் கட்சியிலும் அங்கத்தவராகவும் இருக்கக் கூடாது என்பதை நடைமுறையாக்க முனைந்தது. அதை முன்மொழிய சுமந்திரனும் முன் வந்தார். ஆனால் திடீரென்று சஜித் முகாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அவரது பங்காளிகளான மனோ கணேசன், முஸ்லிம் கட்சிகள் பல்டி அடித்தனர். 20 வது திருத்தம் வெற்றி பெற முடியாது என்பது நிதர்சனமாகியது.

மகாசங்கத்தின் ஈடுபாடு

வண.மாதுலவாவே சோபித தேரர் இல்லாத நிலையில் தற்போது 22 பீடங்களைச் சேர்ந்த 16,000 பிக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகாசங்கம், சர்வோதய இயக்கம் போன்ற குடிமைச் சமூகங்கள் ஒன்றிணைந்து கட்சி சாராத தார்மீக வழியில் நடந்துகொள்ளக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த முன்வந்தனர். அவர் தான் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கா. ஜே.வி.பி. இருக்கக்கூடியதாக அவரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

யாரிந்த மகேஷ் சேனநாயக்கா?

ஜெனெரல் சேனநாயக்காவின் பெயர் அடிபடத் தொடங்கியது உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களின் பின்னர் தான். குண்டு வெடிப்புக்களுக்கு முன்னரே பல வித எச்சரிக்கைகளையும் உளவு நிறுவனங்கள் கொடுத்திருந்தும் ஜனாதிபதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த பனிப்போரினால் 250 அப்பாவி உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. நாட்டில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்த இரு தலைவர்களும் இயலாதவர்களாக இருந்தபோது அதிகாரத்தைக் கையிலெடுத்து மக்களைப் பாதுகாத்தவர்தான் இந்த ஜெனெரல் மகேஷ் சேனநாயக்கா. தலைவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்க, வேறெந்த உயிரிழப்புகளும் இல்லாது பயங்கரவாதிகளை வளைத்துப் பிடிததவர், கட்சி சார்பற்றவர், தொழில் நேர்த்தியுள்ள உண்மையான போர்வீரர் எனப் புகழப்படுபவர். நாட்டு மக்களின் அச்சம் தீர்த்த ஒருவர் அதிகாரி ஸ்தானத்திலிருந்து அசையவுமில்லை, ஊடகங்கள் முன்னிலையில் பவனி வரவுமில்லை. ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அதனால் தான் ஜனாதிபதி அவரைத் தூக்கி விட்டு இனப்படுகொலை வீரரான ஷவேந்திர சில்வாவைத் தளபதியாக நியமித்தார்.

இப்படியான ஒருவரை தேசிய மக்கள் இயக்கம் தனது ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததற்கு வேறு பல காரணங்களும் உண்டு. அது ஒரு சாணக்கிய நகர்வு.

கோதபாய முகாமில் பல முன்னாள் இராணுவத் தளபதிகளும் வீரர்களும் இருக்கிறார்கள். பொதுவாக தளபதி சேனநாயக்காவுக்கும் இராணுவத்தில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. எனவே இராணுவம், அவர்களது குடும்பங்கள் சார்பான வாக்குகளைக் கவர்வதற்கு சேனநாயக்கா தகுதியானவர்.

இரண்டாவதாக, கோதபாய தன் பிரச்சாரத்துக்குப் பாவிக்கும் ‘ நாட்டைப் பாதுகாக்க வல்லவன் நான் ஒருவனே’ என்ற சுலோகம் இனி எடுபடாது. சிறியளவிலாக இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களின் பின்னரான நாடு தழுவிய நடவடிக்கைகள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளன. அவரின் தலைமைத்துவம் அரசியல் ஆதரவற்ற நிலையிலும் தனித்து நின்று வெற்றியீட்டியது.

ஜெனெரல் சேனநாயக்கா, கட்சி அரசியலால் அசிங்கப்படாதவர். கட்சி சாராதவர். அவரை வேட்பாளராக அறிவித்ததும் அதை ஏற்றுக்கொண்டு பேசுகையில் மிகவும் காத்திரமாக ஜனாதிபதி பதவியின் கட்சி சார்பின்மையின் தேவை குறித்து தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மகாசங்கத்தினரையும், குடிமைச் சமூகத்தினரையும் சந்தித்தபோது ஜனாதிபதியின் நடுநிலைத் தன்மைபற்றிய தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார். உண்மையில், ஜனாதிபதி சிறீசேன நடுநிலைத் தன்மையைக் கடைப்பிடித்திருந்தால் 2015 இல் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நல்லாட்சி அரசு நிறைவேற்றியிருக்கலாம்.

ஜெனெரல் சேனநாயக்காவை முன்னிறுத்தியிருக்கும் தேசிய மக்கள் இயக்கம் கட்சி சாராத அமைப்பு என்று சொல்லப்படுகிறது. (இப்படித்தான் யாழ்ப்பாணத்திலும் குடிமைச் சமூகத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் கட்சி அரசியலுக்குள் நுழைந்தது) இருப்பினும் இந்த தே.ம.இயக்கம் ஒரு காலத்தின் தேவை எனவே பார்க்கப்படுகிறது.

இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தின் தேவை பற்றியும், சிறுபான்மை இனங்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் சேனநாயக்கா பேசியிருக்கிறார். இந்த விடயத்தில் கோதபாய முகாம் மெளனம் சாதிக்கிறது.

சர்வோதய இயக்கம் போன்ற குடிமைச் சமூகங்களும் மகாசங்கத்தின் பீடங்களும் மிக நீண்ட காலமாக அடித்தட்டு மக்களிடையே பணிபுரிந்து வருபவர்கள். எனவே ஐ.தே.க, சி.ல.ம.பெ., ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் கிராமப்புற மக்களின் வாக்குகளை இலகுவாகத் திசை திருப்ப இவ்வமைப்புகளால் முடியும். அதே வேளை கட்சி சாராதவர் என்ற வகையில், கற்றோர், இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியடைந்த நகர்வாசிகள் போன்றோரது வாக்குகளையும் ஜெனெரல் சேனநாயக்காவால் இலகுவில் கவர்ந்து கொள்ள முடியும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்ததில் மிக முக்கிய பங்காற்றிய குடிமைச் சமூகங்களான ‘சாதாரண சமாஜய’, ‘பூரவேசி பலய’ ஆகியனவும், தொழிலாளர் சங்கங்களின் குடிமைச் சமூகம் (Civil Society and Trade Union Collective – CSTUC) போன்ற அமைப்பும் ஜெனெரல் சேனநாயக்காவுக்கே தமது ஆதரவைக் கொடுக்கின்றன.

கோதபாய முகாமில் இருக்கும் அமைப்புக்களில் முக்கியமானவை, ‘வியத்மக’ (முன்னாள் இராணுவ அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள், வியாபாரிகள்), பொது பல சேனா, ராவண பலயா ஆகியன. இவர்கள் எல்லோரும் சிறுபான்மையினருக்கு எதிரான பெளத்த சிங்கள தீவிரவாதிகள். ஜே.வி.பி முகாமுக்கு தேசிய மக்கள் அமைப்பு (பல்கலைக்கழக ஆசிரியர்கள், புத்திசீவிகள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள்) எனப்படும் குடிமைச் சமூகம் ஆதரவு தருகிறது. இருப்பினும் ஜே.வி.பி. யின் பழைய நடவடிக்கைகள் இன்னும் மக்கள் மனங்களில் பசுமையாக இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் செயற்பாடுகள், கொள்கைகள் என்பன மக்களை அசைக்காது. ஜனாதிபதியாக இருப்பதற்கான தனி மனித குணாம்சத்தையே மக்கள் அவதானிப்பார்கள். அதற்கு அடுத்தபடியாக மக்களோடு தொடர்ந்து ஊடாடுபவர்களது உந்துதல். அந்த வகையில் கிராமப்புற, நகர்ப்புற வாக்குகளைப் பெறக்கூடியவர் ஜெனெரல் சேனநாயக்காவாகவே இருப்பார் எனத் தெரிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தமிழரைப் படுகொலை செய்தவர் என்ற உணர்விலிருந்து எந்த விதத்திலும் மக்களின் மனங்களை மாற்ற முடியாது. சஜித் பிரேமதாச தமிழ் மக்களது தேசீயப்பிரச்சினை தொடர்பாக எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்கத் தயாரில்லை. எல்லோரும் இலங்கையர்கள் என்ற சுலோகம் தான் அவரது தாரக மந்திரம். அதைச் சிங்கள மக்கள் உணராதவரை பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.வி.பி. யின் அனுரகுமார திசநாயக்க நல்ல மனிதராக இருந்தாலும் அவரது கட்சி மக்கள் மீதும், பாதுகாப்பு படைகள் மீதும் ஏற்படுத்திய தழும்புகள் இன்னும் ஆறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே ஜெனெரல் சேனநாயக்காவின் தேசிய மக்கள் இயக்கம் மூன்றாவது மகாசக்தியாகப் பரிணமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாராளுமன்றத்தினால் தமிழருக்குத் தீர்வு கொண்டுவர சிங்களப் பெரும்பான்மை ஒருபோதும் அனுமதியளிக்காது. நல்லதொரு மனிதன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்திருந்தால் சில வேளைகளில் அந்த அதிகாரம் சில நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னால் இதுவே திட்டமாக இருந்தது. சிறீசேனவை ஒரு நல்லவராகவே எல்லோரும் பார்த்தார்கள். ஓரளவு அதிகாரப்பகிர்வாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை யையும் தகர்த்தது சிறீசேன-ரணில் பகைமை. இதற்கு மேல் தமிழர் தரப்பு எதையும் நம்ப வேண்டியதில்லை.

எனவே நொந்துபோயிருக்கும் தமிழர் தரப்பு கட்சி சார்பற்ற ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது குறைந்த பட்சம் தமிழரை மதிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கோ தங்கள் வாக்குகளை அளித்துவிட்டு நடப்பதைப் பார்க்க வேண்டியது தான் ஒரே தேர்வு.