ஜனாதிபதி ட்றம்ப்பிற்கு ‘பிறபொருளெதிரிக் கலவை’ (monoclonal antibodies) மூலம் சிகிச்சை

ஜனாதிபதி ட்றம்ப்பிற்கு ‘பிறபொருளெதிரிக் கலவை’ (monoclonal antibodies) மூலம் சிகிச்சை

Spread the love

REGN-COV2 எனப்படும் ‘பிறபொருளெதிரிக் கலவை’ (antibody cocktail) வழங்கப்படுகிறது

வால்ட்டர் றீட் இராணுவ மருத்துவமனையில் கொறோணாவைரஸ் தொற்றுக்குச் சிகிகிச்சை பெற்றுவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்.

நேற்றிரவு திடீரென கோவிட் நோயறிகுறிகளைக் காட்டியவுடன், அவரும் அவரது மனைவி மெலேனியா ட்றம்பும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு நோய் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். மெலெனியாவுக்கு, கணவனைப் போல தொற்றுத் தீவிரமாக இல்லை எனக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில், ஜனாதிபதிக்கு, இதுவரை முழுமையாகப் பரீட்சிக்கப்பட்டாத பிறபொருளெதிரிக் கலவை (antibody cocktail) ஒன்றின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய பிரத்தியேக மருத்துவர் இச் சிகிச்சை முறையைத் தேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நோயாளிகளில் சிறப்பான விளைவுகளைத் தருவதாகக் கருதப்படும், REGN-COV2 எனப்படும் இம் மருந்து இரு பிறபொருளெதிரிகளின் கலவையாகும். இன்னும் பரீட்சார்த்த நிலையில் இருக்கும் இம் மருந்து அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Regeneron Pharmaceuticals இனால் தயாரிக்கப்படுகிறது. SARS-CoV2 வைரஸுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய செயற்கையாகச் செய்யப்பட்ட இரண்டு பிறபொருளெதிகளின் கலவை (Monoclonal Antibodies) இது. இதே நிறுவனம், ஈபோலா நோய்க்குச் சிகிச்சையாகத் தயாரித்த மருந்தும் இப்படியான கலவையொன்றுதான். எனவே இம் முறை முற்றிலும் அந்நியமான சிகிச்சை முறை எனச் சொல்வதற்கில்லை.வழக்கமாக, பிறபொருளெதிரியன்பது, சுய அடையாளங்களுடன் (antigen) வரும் வைரஸ்களை ‘இனம் கண்டு’ அவற்றில் ஒட்டிக்கொண்டு அழித்து விடுவதன் மூலம் தமது உடல் காக்கும் கடமையைச் செய்கின்றது. ஆனால் ஒரு நோயாளியில் இது உருவாகுவதற்கு கால அவகாசம் தேவை. அதற்குள் வைரஸ் விரைவாகக இனப்பெருக்கம் செய்துவிடவும் கூடும். அதே வேளை, உடல் தானே தயாரிக்கும் பிறபொருளெதிரிகள் சில வேளைகளில் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் (cytokine storms), அதனால் ஏற்படும் அழற்சியினால் உயிராபத்து ஏற்படவும் காரணமாகிறது. இதனால், இயற்கையான பிறபொருளெதிரி உற்பத்தி செய்யும் மட்டும் பொறுத்திராமால், செயற்கையாகப் பிரதியெடுக்கப்பட்ட (cloned) பிறபொருளெதிரிகளை மனித உடலுக்குள் செலுத்துகிறார்கள். இயற்கையான பிறபொருளெதிரி எப்படி எதிரியின் ‘அடையாள நாடாவை’ (antigen /epitope) இனம் காண்கிறதோ அதே போன்று இந்த செயற்கையான பிறபொருளெதிரியும் செயலாற்றுகிறது.

ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்ட கலவையில் REGN10933 மற்றும் REGN10987 என இரண்டு செயற்கை பிறபொருளெதிரிகள் உள்ளன. சில வைரஸ்கள், உடலின் பாதுகாப்பு படையை ஏமாற்றுவதற்கு, மிகவும் கெட்டித்தனமாகத், தமது அடையாள நாடாக்களில் (antigens) சிறிய மாற்றங்களைச் செய்துகொள்கின்றன. இதை எதிர்பார்த்து பல விதமான மாற்றங்களுடன், செயற்கை பிறபொருளெதிரிகளைத் தயாரித்துக் கலந்து நோயாளிக்கு ஏற்றுகிறார்கள். இப்படியாக இரண்டு சேர்ந்த கலவையே ஜனாதிபதிக்கு ஏற்றப்பட்டுள்ளது.அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் அங்கீகரிக்காத ஒரு மருந்தை நோயாளிகளில் பாவிக்க முடியாது. ஜனாதிபதி விடயத்தில் ‘மனிதாபிமான’ காரனங்களுக்காக (compassionate), 8 கிராம் மருந்தைத் தாம் ஜனாதிபதியின் மருத்துவருக்கு வழங்கியுள்ளதாக இந் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இம் மருந்தோடு, துத்தநாகம், வைட்டமின் D, மெலட்டோநின், அஸ்பிரின், பெப்சிட் ஆகிய மருந்துகளும் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இம் மருந்து பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கப்படாவிடினும், அமெரிக்காவின் கொறோணாவைரஸ் ஆலோசகர் டாக்டர் அந்தோணி ஃப்வுச்சி இம் மருந்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதகத் தெரிகிறது.

-அகத்தியன்

Print Friendly, PDF & Email