76 வது ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வார்
ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (செப். 18), அமெரிக்கா பயணமானார்.
இம் மாதம் 21ம் திகதி, நியூ யோர்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தில், சுமார் 100 உலகநாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, கோவிட்டுக்குப் பின்னான உலகத்தின் மீட்சி பற்றி விவாதிக்கவுள்ளார்கள். பதவியேற்றதிலிருந்து, இப்படியான ஒரு வெளிநாட்டில் நடக்கும் சந்திப்பொன்றில் ஜனாதிபதி கலந்துகொள்வது இதுவே முதல் தடவை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அவருக்கும் இதுவே முதல் ஐ.நா. சபை அமர்வு.
இவ்வருடத்துக்கான விவாதத்தின் கருப்பொருள் ” நம்பிக்கையின் மூலம் தாங்குதிறனைக் கட்டியெழுப்புதல் – கோவிட் 19 இலிருந்து மீளுதல், நிலையான மீள் வளர்ச்சியை ஏற்படுத்தல், பூமியின் தேவைகளைப் பொறுத்துச் செயலாற்றுதல், மக்களின் உரிமைகளை மதித்தல், ஐ.நா.அமைப்பை மீள்கட்டுமானம் செய்தல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தொடக்க நாளன்றும் (21), இலங்கை ஜனாதிபதி இரண்டாவது நாளும் (22) பேசுவார்கள். அதன் பிறகு நடைபெறும் ‘வெளி வீதிச்’ சந்திப்புகளில் கோதாபய இதர நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதியுடன், அதன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் துணையாகச் செல்கிறார்கள்.