ஜனாதிபதி – எதிர்க்கட்சிகள் சந்திப்பு: கூட்டமைப்பின் பதில்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி – எதிர்க்கட்சிகள் சந்திப்பின்போதும், பின்னரும் விக்கிரமசிங்க தமிழர் தரப்பின்மீது நையாண்டியுடன் கூடிய காட்டமான விமர்சனங்களை வைத்ததும் அதை ஊடகங்களும் விமர்சகர்களும் பல்வேறு வழிகளிலும் வியாக்கியானப்படுத்தியும் வருகிறார்கள். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜூலை 31 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது “தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளில் உறுதியாக இல்லை, அவர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்” என்ற கருத்துப்பட ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” 1956 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாட்சை சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கியதாகவே இருந்து வருகிறது. அதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடும் கூட. ஆனால் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு அங்கமல்லாது அது ஒரு பிற்சேர்க்கை அல்ல. அரசியலமைப்பு சாசனத்தை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் ஜனாதிபதி உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளோம். இவ்வரசியலமைப்பின் எந்தவொரு அங்கத்தையும் நடைமுறைப்படுத்தாமலிருப்பது அரசியலமைப்பையே மீறுவதாகும். அந்த அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்துகொள்ளலாம். இது தமிழ் மக்களின் அபிலாட்சைகளைத் தீர்த்துவைக்கப் போகிறது என்று கருதிவிடக்கூடாது” என கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இலங்கை அரசும் இந்திய அரசும் நியாயமான அதிகாரப் பகிர்வொன்றுக்கு உடன்படுவதாக குறைந்தது மூன்று கூட்டறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
“கூட்டமைபினருடனான சமீபத்திய சந்திப்பின்போது பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி கூறியிருந்தார். இது ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதியிலிருந்து வழுவுவதாகும்” என சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க “முதலில் நான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்க என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவரது வாக்குறுதிக்கு நான் கட்டுப்பட்டவனல்ல. அவர் கூறியதுடன் நான் உடன்படுகிறேன், ஆம் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். முழுமையான நடைமுறையாக்கம் என நான் கூறியதும் சபையில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதனால் தான் பொலிஸ் அதிகாரத்தைப் பின்னர் எடுத்துக் கொள்வோம் எனக் கூறினேன். எனவே நீங்கள் அதைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை” எனத் தெரிவித்திருந்தார். அதே வேளை எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த கோரிக்கையில் அவர் “போதுமான அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபைகளை நாம் பேணவேண்டும் அல்லது அவற்றை முற்றாக ஒழித்துவிடவேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.
இதே வேளை கடந்த மூன்று வருடங்களாகப் பின்போடப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டுமெனவும் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கோரியுள்ளது.
“சில குறைபாடுகள் இருப்பினும் 9 மாகாண சபைகளும் சீராக இயங்கிவந்தன. பின்னர் வாக்களிப்பு முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென்ற விருப்பில் அவற்றின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் தினேஷ் குண்வர்த்தனா தலைமையில் நிறுவப்பட்ட தெரிவுக்குழு “ஒத்திவைக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல்கள் மக்களது ஜனநாயக உரிமைகளை மறுப்பதாக அமையும் எனக்கூறி ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல்களை நடத்தும்படியும் பரிந்துரைத்திருந்தது” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு பரிந்துரைத்ததன் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்கான ஆணையைப் பாராளுமன்றம் பிரகடனப்படுத்தவேண்டுமென பா.உ. சுமந்திரன் முன்மொழிந்த தனியார் சட்டமூலம் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக்கப்பட்டது.
“மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டுமென 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் நாம் முன்வைத்த கோரிக்கையையேதான் ஜூலை 26 இலும் முன்வைத்திருந்தோம். எனவே எமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை” என கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.