ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை – த.தே.கூட்டமைப்பு ஏமாற்றம்

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (ஜனவரி 05) நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழக் கைதிகளை விடுவிப்பது மற்றும் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக எதுவித முன்னேற்றமும் இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன உட்பட்ட அரசாங்க பிரதிநிதிகளை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்றுச் சந்தித்திருந்தனர்.

“கைதிகள் விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பு தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் இடம்பெறவில்லை. டிசம்பர் 21, 2022 இல் எதைக் கூறினார்களோ அதையே இப்போதும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக அவசியமான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து உதவுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதைத் தொடர்ந்து ஜனவரி 10ம் திகதி அவர்கள் கூடி ஒரு முடிவொன்றை எட்டவுள்ளதாகவும் அப்படி நடைபெறாத பட்சத்தில், எமது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்படாத பட்சத்தில் இச்சந்திப்புக்களை மேலும் தொடர்வதா என்பதுபற்றி நாம் மறுபரிசீலனை செய்யவேண்டி ஏற்படலாம். எப்படியாகினும் அரசியமைப்பைத் திருத்தாம்லேயே ஏற்கெனவே உடன்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த அவர்கள் இணங்க வேண்டும். ஜனவரி 10 சந்திப்பில் இது நடைபெறாவிடில் எமது நிலைப்பாட்டை நாம் மறுபரிசீலனை செய்வோம்” என சுமந்திரன் கூறியதாக ‘தி மோர்ணிங்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க, பிரதமர் குணவர்த்தன, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோர் அரசாங்கத்தின் சார்பிலும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    டிசம்பர் 21, 2022 இல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது பெப்ரவரி 04, 2023 அன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் மூலம் 14 பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகள் விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பு பற்றி பேசப்பட்டு இணக்கம் காணப்பட்டிருந்தது. தற்போது சிறையிலுள்ள 31 ப.த.ச. கைதிகளில் 14 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். இப் பதினான்கு பேரையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்வது பற்றி இச்சந்திப்பின்போது பேசப்பட்டிருந்தது. மீதிப்பேர்களின் விடுதலை பற்றியும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே வேளை, ஜனவரி 2023 இல் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து காணிகளை விடுவித்தல் பற்றியும் முடிவுகள் எட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.