ஜனாதிபதியானால் பிரதமரை மாற்றுவேன்! – பிரேமதாச
“நான் ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தில் எவர் அதிக பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறாரோ அவரையே பிரதமராக்குவேன்” எனப் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் சஜித் பிரேமதாச கூட்டமொன்றில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.
“எனது மந்திரிசபையில் ஊழல் குற்றாச்சாட்டுச் சுமத்தப்பட்ட எவருக்கும் இடம் இராது” என பிரத்தியேக தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, பிரேமதாசவின் பதவிக்காலத்தில் தான் தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன் என சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
தான் நியமிக்கவிருக்கும் மந்திரிசபையில் இளைய, திறமையுள்ள, தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் பகிரங்கமாக அறிவிப்பவர்களுக்கே இடம் கொடுக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார்.
தான் பதவிக்கு வந்ததும் எவ்வளவு விரைவாகப் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துவேன் எனவும் அதன் மூலம் ஸ்திரமான அரசாங்கமொன்றை நிறுவி தேசியப் பட்டியல் மூலம் தகமையுள்ள துறைசார் வல்லுனர்களையும் பெண்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பேன் எனவும் சஜித் மேலும் தெரிவித்தார்.
தெரிந்தவர்களுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் பதவிகளைக் கொடுக்கும் ஊழல் அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும். வன்முறை, பலம், அதிகாரம் ஆகிய வழிகளைப் பாவித்து நீண்டகாலம் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் அப் பேட்டியிந்போது தெரிவித்தார்.