ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பில்லை – ஜனாதிபதி பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் ஜனநாயகத்துகான உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இலங்கை இடம்பெறவில்லை.
டிசம்பர் 9-10 திகதிகளில் இணையவழிச் சந்திப்பாக நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்கு உலகம் முழுவதிலுமிருந்து, தாய்வான் உட்பட, 110 நாடுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. அரச தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பலரும் இம் மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர்.
உலகம் முழுவதிலும் ஜனநாயகம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வழிவகைகள் மற்றும் அதனால் மக்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களையும் பற்றிய ஆக்க பூர்வமான, துணிச்சலான, நடைமுறைச் சாத்தியமுள்ள யோசனைகளை இம்மாநாட்டில் கலந்துகொள்பவர்களிடமிருந்து பெறுவதே இம் மாநாட்டின் நோக்கமாகும். மூன்று முக்கிய கருப்பொருள்களை அனுசரித்து இய் யோசனைகள் அமையவேண்டுமென மாநாடு எதிர்பார்க்கிறது.
- சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்
- ஊழலுக்கு எதிரான போராட்டம்
- மனித உரிமைகளை முன்னெடுத்தல்
கீழே காணப்படும் படத்தில் ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் கொண்டிராத சீனா போன்ற நாட்டுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சீனா தனது ஒரு அங்கமெனக் கூறிவரும் தாய்வானுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை சீனாவையும், சீன சார்பாக நடந்துகொள்ளும் நாடுகளையும் அமெரிக்கா தனிமைப்படுத்த முனைகிறது என்பதை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.
