Entertainmentமாயமான்

‘ஜகமே தந்திரம்’ – இன்னுமொரு பார்வை

விமர்சனம்

மாயமான்

நண்பர் ஒருவர் நள்ளிரவுக்குச் சற்று முன்னர் தொலைபேசியில் அழைத்தார். “மச்சான், இவங்களை விடக்கூடாது. ஜகமே தந்திரம் பாத்திட்டியா. எங்கட போராட்டத்தைக் கொச்சைப்படுத்திறாங்கள்”. மிச்சத்தை நான் சொல்லி உங்களுக்குக் கடுப்பேத்த விரும்பவில்லை.

இதற்குள் நெட்ஃப்ளிக்ஸில் படம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது என இன்னுமொரு தகவலும் கிடைத்தது. விடுதலைப்புலி ஆதரவாளர்கள், எதிரிகள், உண்மையான சினிமா விமர்சகர்கள் (மிகச் சொற்பம்) என எல்லோருமே முகநூலின் வழியாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள். படம் ஒரு flop என்பது உறுதியாகி விட்டது. இப்போதுதான் அதைப் பார்க்கவேண்டுமென ஊக்கம் வந்தது. நண்பரின் அழைப்பு அதற்கு ஒரு Red Bull.

படம் பார்த்தாகி விட்டது. அந்த ‘ச்ப்’ பென்ற feeling இன்னும் போகவில்லை. அதை யார் மீதாவது download செய்துவிடவேண்டும் என்ற அவசரத்தில் இதை எழுதுகிறறேன்.

இப் படத்தை நான் இரண்டு கோணங்களில் பார்த்து எநது மதிப்பீட்டை முன்வைக்கிறேன்.

முதலாவது: ஒரு சாதாரண சினிமா ரசிகராக –

சினிமாவாக, கார்த்திக் சுப்பராஜ் சொதப்பி விட்டார். அவரது இதர படங்களோடு ஒப்பிடுகையில் அவரைப் பற்றிய அந்த assembled image (not constructed) கொஞ்சம் பிசகியது போல உணரவேண்டியிருக்கிறது.

படம் gagster / political (UK, India, Tamilnadu, Eelam) / drama / hero buildup எல்லாவற்றினதும் சாம்பார். ஆனால் ஈழத் தமிழர் விவகாரம் தான் அதில் முதன்மைப் படுத்தப்படுகிறது. நண்பர் கூறியதைப் போல negative ஆக அல்ல – அதை உறுதியாகச் சொல்வேன். ஆனாலும் படம் சொதப்பல்.

சுப்பராஜ், Al Pacino, Robert De Nero, Charles Bronson (Death Wish) படங்களை மேலோட்டமாகப் பார்திருப்பதற்கான அறிகுறிகள் இப்படத்தில் தெரிகின்றன. அதுவென்றாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர் போராட்டம் பற்றி மதுரையில் எங்காவது உணவகத்தில் கேள்விப்பட்டபின் ஆர்வக் கோளாறினால் இப்படத்தை எடுத்திருப்பது போல் தெரிகிறது. இவ் விடயத்தில் சுப்பராஜ் மட்டுமல்ல பல இந்திய சினிமாக் காரர் எல்லோரும் ஒன்று தான். ஈழப் போராட்ட விடயத்தில் இந்தியாவின் பங்கும், ரஜீவ் காந்தியின் கொலையும், IPKF இன் அவமானமும் அவர்களுக்குப் பதிவான அளவுக்கு ஈழத்தமிழரின் இநப்பிரச்சினையின் மூலம், பரிணாமம் என்பன பற்றிய அறிவு கொஞ்சம் கம்மி தான். சுப்பராஜ் அதை இங்கே நிரூபிக்கிறார்.

படத்தில் இங்கிலாந்தில் நடப்பதாகக் காட்டப்படும் gang war visuals இற்குக் கொடுத்த முக்கியத்துவத்த்தோடு ஒப்பிடும்போது, ஈழத் தமிழர் போராட்டம், ஒரே ஒரு ‘குண்டு வீச்சு’ காட்சியைத் தாண்டி அப்பால் நகரவில்லை. ஈழத் தமிழரது அவலத்தை வெளிப்படுத்துவதில் – என்னதான் இருந்தாலும் – தீபா மேத்தா தன் ‘Funny Boy’ இல் குண்டு வீச்சுகள் எதுவுமின்றி, முகங்களில் கரி எதுவும் பூசப்படாமலேயே ஒரு அகதி முகாமில், காட்டப்ப்டும் visuals மூலம் வரவழைத்த கண்ணீரை சுப்பராஜினால் ‘ஜெகமே தந்திரத்தில்’ காட்டப்பட குண்டு வீச்சு காட்சி கொண்டுவரவில்லை. அந்தளவுக்கு அது செயற்கையாக இருந்தது.

இக் குண்டுவீச்சுக் காட்சியின்போது குறியீடாக ஒரு விமானத்தின் நிழலைக் காட்டிவிட்டு எரிந்துகொண்டிருக்கும் விளையாட்டுத் திடல், இறந்த, காயப்பட்ட மனிதர்கள் என்று பலவற்றைக் காட்டி பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கலாமென அவர் முயற்சித்திருக்கலாம். அதில் பறந்துபோன விமானத்தின் நிழல் ஒரு போர் விமானத்தைப் (கிஃபிர் / மிக் / எஃப்16) பிரதிபலிக்கவில்லை. அது ஒரு பயணிகள் விமானத்தை ஒத்திருந்ததாக எனக்குப் பட்டது.

ஈழத் தமிழர்களாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் சில ஆங்காங்கே சில யாழ்ப்பாணத் தமிழில் ஒலித்தாலும், அதில் தொடர்ச்சியில்லை. பெரும்பாலான தருணங்களில் அவர்களது தமிழ்நாட்டுப் பாஷை ஆட்சி செய்கிறது. இது யதார்த்தத்துக்கு புறம்பானதாகவிருந்தாலும் இப் படத்தின் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்காரர் என்பதை மனதில் வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை வியாபாரக் கோணத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அந்த சமரசம் இயக்குநரின் மீதான தர மதிப்பீட்டைக் குறைத்து விடுகிறது.

இவ் விடயத்தில் பீட்டர் ஆக வரும் (James Cosmo) பாத்திரம், சுப்பராஜின் மீது கட்டப்பட்ட பிரமாண்டமான பிம்பத்தை இலகுவாகத் தகர்த்துவிடுகிறது. பீட்டர் ஒரு மாஃபியா டொன் போலக் காட்டப்படுகிறார். பிரித்தானிய அரசியல்வாதிகள் அரசுகளை அழிப்பதோ அல்லது gang members ஐ அழிப்பதோ, கூடுதலாகத் தந்திரம் அல்லது subversive activities மூலம் தான். எனவே இந்த பாத்திரப் படைப்பு /கதை பிரித்தானிய மண்ணுக்கு ஒத்துவராத ஒன்று. பிரித்தானியர் சுங்கான் பிடித்துக்கொண்டு – சுருட்டு என்றால் கியூபாவின் நீளமான சுருட்டு – உரத்துப் பேசாமலேயே cunning ஆகக் காரியத்தைச் சாதித்து விடுவார்கள். பீட்டர் பாத்திரம் நியூ யோர்க் மாஃபியா டொன்னிற்குப் பொருந்தும், இங்கிலாந்துக்கல்ல. பீட்டரின் வாயில் வரும் தூஷண வார்த்தைகள் கூட இடப்பொருத்தமற்றவை.

சுருளியாக வரும் தனுஷின் உடல் வாகு, சிகையலங்காரம் (?) லண்டன் கிரைம் சீனுக்கு பொருந்தாது. மதுரைக்கு அது பொருத்தமாக இருக்கலாம். லண்டனில் அட்டகாசம் புரியும், சிவதாஸின் (ஜோஜு ஜோர்ஜ்) தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கும்பலை ஒழிப்பதற்கெனப் புறப்பட்ட பீட்டரின் கும்பலுக்கு ஆலோசகராக மதுரையில் உணவகம் ஒன்றை நடத்தும் சண்டியன் சுருளியை (தனுஷ்) லண்டனுக்குக் கொண்டுவருவதுதான் பிரதான கதை மையம். இங்கு சுருளி, தமிநாட்டில் அகதியாகவிருந்து பின்னர் லண்டன் வந்து ‘கோப்பை கழுவும்’ முருகேசனை (சுப்பராஜின் அப்பா) சந்திப்பதும், இன்னுமொரு ஈழ அகதி அட்டில்லாவின் காதலில் வீழ்வதும், வடிவுக்கரசி (தனுஷின் தாய்) லண்டனை விட்டுத் தமிழ்நாடு திரும்புவதும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தொட்டுக் காட்டுவது இரண்டாவது கதை. பிரித்தானியாவிலுள்ள வெள்ளை இனத் துவேஷிகளின் அரசியல் அபிலாஷையான ‘வெள்ளையரல்லாத குடிவரவாளரை’த் திருப்பி அனுப்புவதற்கான திட்டத்தை நிறைவேற்ற பீட்டர் செயற்படுவது மூன்றாவது கதை. இம் மூன்றின் மசாலாதான் ‘ஜெகமே தந்திரம்’

இதில் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தவறிழைத்தது என்பதற்காக சுருளி பாத்திரம் மூலம் ஈழத்தமிழரிடம் மன்னிப்புக் கேட்பது (redemption) சுப்பராஜின் அடிப்படை நோக்கமெனின் அதை அவர் சிவதாஸ், முருகேசன், அட்டில்லா, சுருளி பாத்திரங்கள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

பல technical errors இப்படத்தில் உண்டு. எல்லாவற்றையும் சொல்வதால் ஒந்றும் மாறிவிடப்போவதுமில்லை. சுப்பராஜ் தமிழ்நாட்டுக் கதைகளுடனும், தமிழ் ரசிகர்கள் தரத்துடனும் நின்று கொள்வது நல்லது. சர்வதேச சூழல்களை வேண்டுமென்றால் பின்னணியாகப் பாவிக்கலாம். அவற்றை வைத்துக் கதையைப் பின்னாமல் இருப்பது நல்லது. சின்ன பட்ஜெட் மலையாளப் படங்களை எப்படி ஆரவாரம் இல்லாமல் எடுத்து வெற்றிபெறுகிறார்கள் எனப் பார்த்து அத் தராதரத்திலோ, அல்லது ரஜிநி போன்றவர்களை வைத்து ஷங்கர் தரத்திலோ படங்களை எடுத்து புகழை அல்லது பணத்தை ஈட்டிக்கொள்வது அவருக்கு அல்லது.

இப்படத்தில் ஒரு புதுமையை சுப்பராஜ் செய்திருக்கிறார். அது ஒரு வகையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி.

ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களில் கறுப்பர்களுக்கும், இந்தியர்களுக்கும் ராக்ஸி ட்றைவராகவோ அல்லது தேவையற்றுக் கொல்லப்படும் பாத்திரமாகவோ அல்லது ரயில் நிலையத்தில் கழுவித் துடைக்கும் பாத்திரமாகவோ ஒன்றுதான் கொடுக்கப்படுவது வழக்கம். மாறாக, இந்தியப் படங்களில் வெள்ளையர்களுக்கு, திறந்த கார்களில் உலா வரும் சீமான் / சீமாட்டி பாத்திரங்களே வழங்கப்படும். இப்போது பல ‘வெள்ளையர்கள்’ தமிழ்ப் படங்களில் வில்லன்களாகவும், தமிழ் ஹீரோக்களால் கொல்லப்படுபவர்களாகவும் காட்டப்படுகிறது. இப்படியாக லண்டனிலுள்ள ஒரு வெள்ளைச் சிங்கத்தின் குகைக்குள் போய் அவனைப் போட்டுவிட்டு வரும் மதுரைத் தமிழனை சுப்பராஜ் அறிமுகம் செய்கிறார். அது சித்தாந்த ரீதியிலானதா அல்லது வணிக ரீதியிலானதா எனத் தெரியாது. இருப்பினும் என்னைப்போன்ற சிலருக்கு ஒரு சிறிய சித்தாந்த மகிழ்ச்சி.

Family Man 2 வில் சாமந்தாவுக்கு முகத்தில் கரி பூசிக் கறுப்பாக்கினார்கள், இங்கு அட்டிலாவுக்கு முகத்தில் bleach போடப்பட்டதோ தெரியாது. இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. வணிக சமரசத்துக்கு அது தேவையெனில் நாமென்ன கூற முடியும்?

இப் படத்தில் அட்டில்லாவாக நடிக்கும் ஐஷ்வர்யா லெக்ஸ்மி இயற்கையாக நடித்திருக்கிறார். அவருடை கோபம், வெறுப்பு, ஆதங்கம், தோல்வி, துரோகம், ஏமாற்றம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு victim இகுரிய இயல்பான தோற்றம். தனுஷ் தனக்கு ஏற்ற சோடியேயல்ல என்பதைப் பல இடங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் நல்ல நடிகன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் தான் பலம் என்பதை அவரும் இயக்குநர்களும் உணர வேண்டும்.

படத்தில் ஏகப்பட்ட ரஜினி பிரசார வாடை அடிக்கிறது. தலைவர் ரஜினியைப் புகழ்வதும், பலவிடங்களில் தனுஷ் ரஜினியின் ஸ்டைல்களைப் பிரதி பண்ணுவதும் சுப்பராஜ் சில வேளைகளில் செட்டை விட்டுப் போய்விட்டாரா அல்லது ரஜினி செட்டில் வந்து நின்றாரா என்ற மயக்கத்தைத் தருகிறது. படம் வணிக ரீதியாக வெற்றியடைவதற்காக நிறைய இழப்புக்களை சுப்பராஜ் சந்திக்கிறார்.

ஈழத் தமிழர்கள் கோணத்தில்

இப் படம் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறது என்பதற்கு அவர்கள் வைக்கும் விடயங்கள் சில சிவதாஸின் பாத்திரத்தை ஒரு gang leader ஆகச் சித்தரிப்பது. உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தாமல் இப் படத்தை எடுத்திருந்தால் பாத்திரத் தேர்வும், சித்தரிப்பும் சில வேளைகளில் சரியாகப் பொருந்தியிருக்கலாம். விடுதலைப் புலி உறுப்பினர்களின் குணாதிசயங்கள் எனப் பல தமிழர்கள் எழுப்பி வைத்திருந்த பிம்பத்தை சுப்பராஜ் உடைத்து விடுகிறார். அவ் விடயத்தில் அவர்களது கோபம் நியாயமானது. அத்தோடு முருகேசனின் மரணச்சடங்கின்போது பாவிக்கப்பட்ட பறை ஈழத்தமிழர் நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒன்றல்ல. இவையெல்லாம் technical errors.

ஆனால் உண்மையில் சுப்பராஜின் நோக்கம் அதுவல்ல என்பது படத்தில் பல தடவைகள் வெளிப்படுகிறது. “எங்களுக்குப் போர்களைத் தொடங்கத்தான் தெரியும், முடித்து வைக்கத் தெரியாது” என்ற வசனம் பல தடவைகள் சொல்லப்படுகிறது. சிவதாஸின் கொலைக்குக் காரணம் தனுஷ் செய்த நம்பிக்கைத் துரோகம் என்பதை வடிவுக்கரசி ஒரு பெரிய சொற்பொழிவாகவே செய்து முடிக்கிறார். குண்டு வீச்சுக்கு முதல் “இந்தியா எங்களைக் கைவிடாது” என நம்பிக்கையோடு சொல்லுகிறது ஒரு பாத்திரம். சிவதாஸின் படத்தைத் தூசி தட்டி வைத்து மன்னிப்புக் கேட்கிறார் தனுஷ். ‘தலைவர் மரணமடையவில்லை, திரும்பி வருவார்’ என்ற வசனங்கள் இங்கும் கேட்கின்றன. இவற்றை வைத்துக்கொண்டு பார்க்கும்போது இப்படம் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதென நான் கூறமாட்டேன். விடுதலைப் புலிகளைத் தொட்ட சுப்பராஜுக்கு அவர்களைப்பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்ள நேமிருக்கவில்லை. அந்த விடயத்தில் ஈழத் தமிழர்களின் விசனம் நியாயமானது. அதற்காக இது ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ஒரு படமென அறுதியாகக் கூறிவிடவும் முடியாது.

தீர்ப்பு: அடுத்த படத்தில் சுப்பராஜ் கொஞ்சம் ஆலோசனைகளைக் கேட்டுப் படமெடுப்பது அவருக்கு நல்லது