ஜகத் ஜயசூர்யாவின் அவுஸ்திரேலிய வரவு: போர்க்குற்றங்களை ஆராய்வதில் அரசின் மெத்தனப் போக்கே காரணம் – அவுஸ்திரேலிய மத்திய காவற்துறை

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைகளை ஆரம்பித்திருப்பதனாலும் அதை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரித்திருப்பதனாலும் ஜகத் ஜயசூரியா அவுஸ்திரேலியாவில் இல்லாத காரணத்தினாலும் அவர் மீது நாம் வழக்கெதையும் பதியப் போவதில்லை

அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை

இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களைப் புரிந்தவரெனக் குற்றம்சுமத்தப்படும் ஜகத் ஜயசூரியாவின் அவுஸ்திரேலிய வரவை அனுமதித்ததில் அந் நாட்டின் நிர்வாக மெத்தனப் போக்கும் , போர்க்குற்றங்களை ஆராய்வதிலுள்ள தாமதமுமே காரணம் என அவுஸ்திரேலிய மத்திய காவற்துறை தெரிவித்திருக்கிறது.

தற்போது ஓய்வு பெற்றுள்ள ஜெனெரல் ஜகத் ஜயசூரியா அவுஸ்திரேலியாவிற்குள் நுழைகிறார் என 2019 இல் பல மனித உரிமை அமைப்புகள் அவுஸ்திரேலிய மத்திய காவற்துறைக்கு அறிவித்திருந்தன. இறுதிப் போரின்போது தமிழர் மீது நடத்தப்பட்ட பல போர்க்குற்றங்களை மேற்பார்வை செய்திருந்ததாக ஜயசூரியா மீது பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

2007 முதல் 2009 வரை வவுனியாவிலிருந்த ஜோசெஃப் முகாமிலிருந்து ஜயசூரியா படை நகர்த்துதலைச் செய்து வந்தார் எனவும் அப்போது அவரது முகாமில் துன்புறுத்தல், பாலியல் கொடுமைகள் எனத் தமிழ் கைதிகள் மீது பலவிதமான போர்க்குற்றங்கள் புரியப்பட்டன என அங்கிருந்து மீண்ட 14 கைதிகளின் சாட்சியங்களைக் கொண்டு மனித உரிமை அமைப்புகள் ஜயசூரியாவுக்கு எதிரான ஆவணங்களைத் தயாரித்திருந்தன. அதே வேளை ஆட் கடத்துதல், துன்புறுத்தல், பொதுமக்களைக் கொன்றமை, மருத்துவமனைகளில் குண்டுகளை வீசியமை, பாலியல் கொடுமைகளைப் புரிந்தமை எனப் பல குற்றச்சாட்டுகள் ஜயசூர்யாவின் மேற்பார்வையில் நடைபெற்றன என்பதற்கு நிறைய ஆதாரங்களை இவ்வமைப்புகள் சேகரித்திருந்தன.

இவ்வாதாரங்களைக் கொண்டு, பிரேசிலைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான கார்லோஸ் கஸ்ட்றிசானா ஃபெர்ணாண்டேஸ் பிரேசில், கொலம்பியா, சிலி, ஆர்ஜென்ரீனா, பெரு ஆகிய நாடுகளில் ஜயசூரியாவுக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்திருந்தார். 2015 இல் இலங்கை அரசு ஜயசூரியாவை பிரேசில், கொலம்பியா, ஆர்ஜென்ரீனா, சிலி, பெரு ஆகிய நாடுகளுக்கு தூதுவராக நியமித்திருந்தது. எனவே இந் நாடுகளில் ஃபெர்ணாண்டெஸ் ஜயசூரியாவுக்கு எதிரான வழக்குகளைத் தொடர்ந்திருந்தார். நீதிக்கும் சமாதானத்துக்குமான திட்டம் (ITJP) என்ற அமைப்பு அவருக்குத் தேவையான போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கியிருந்தது. சூரினாம் மட்டும் ஜயசூரியாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கவில்லை. இவ்வழக்குகள் தொடரப்பட்டதும் ஜயசூரியா தலைமறைவானார். இருப்பினும் அவரது நடமாட்டங்களை மனித் உரிமை அமைப்புகள் கண்காணித்து வந்தன.

2019 இல் அவர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் விடயத்தை அறிந்ததும் இவ்வமைப்புகள் அவுஸ்திரேலிய மத்திய காவற்துறையை எச்சரித்திருந்தன. சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம் (Australian Centre for International Justice (ACIJ) என்ற அமைப்பு மிகவும் விளக்கமான ஆதாரங்களை அவுஸ்திரேலிய காவற்துறைக்கு வழங்கியிருந்தது. இவ் விடயங்களைத் தாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் ஆனால் அவற்றை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் (கிறிஸ்டியன் போர்ட்டர்) அனுமதி தேவைப்படுகிறது எனவும் காவற்துறை கூறியிருந்தது. ஆனால் இதுபற்றி ACJJ விசாரித்தபோது ஜயசூரியா மீது வழக்குப் பதிவதற்கு சட்டமா அதிபரின் அனுமதி தேவையில்லை என சட்டமா அதிபரின் திணைக்களம் கூறிவிட்டது.

இலங்கை அரசு மேலும் பல போர்க்குற்றச் சந்தேகநபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைத் தப்பியோட வழிசெய்கிறது என்ற காரணதினால் சென்ற வருடம், இரண்டு மனித உரிமை அமைப்புகள் அவுஸ்திரேலிய காவற்துறையிடம் ஜயசூரியா மீதான நிலைப்பாடு பற்றி தகவல் தரும்படி கேட்டிருந்தன. இதற்குப் பதிலளித்த காவற்தூறை நிர்வாக மெத்தனத்தின் காரணமாக இவ் விடயம் தொடர்பாக எதுவித விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தற்போது அது விசேட விசாரணைக் குழுவொன்றிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது எனப் பதிலளித்திருக்கிறது.

சென்ற மாதம் அவுஸ்திரேலிய காவற்துறை இம் மனித உரிமை அமைப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “ஜகத் ஜயசூரியா அவுஸ்திரேலியாவில் இல்லாத காரணத்தினால் அவர் மீது தாம் வழக்கெதையும் பதியப் போவதில்லை” எனப் பதிலளித்திருக்கிறது. அத்தோடு, “போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைகளை ஆரம்பித்திருப்பதையும் அதை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரித்திருப்பதையும் அவுஸ்திரேலிய காவற்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. அவுஸ்திரேலிய காவற்துறையின் இந்நடவடிக்கை மீது விசாரணைகள் மேற்கொள்ள்ப்படவேண்டுமென்று பல மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. “போர்க்குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்ப்ட்டிருக்கும் ஒருவர் அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாகத் திரிவதை அனுமதிக்கும் அதேவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமை காரணமாக அவுஸ்திரேலிய காவற்துறை இழைத்த தவறிற்கு அது பதில் சொல்லியேயாக வேண்டுமென ACJJ யின் நிர்வாகப் பணிப்பாளரான ரவான் அராஃப் தெரிவித்திருக்கிறார். அத்தோடு சரத் ஜயசூரியா மீது ‘மக்னிற்ஸ்கி’ தடைகளைப் பிரயோகிக்குமாறு இவ்வமைப்புகள் அரசைக் கேட்டுள்ளன.