Tamil History

சோ.சிறீஸ்கந்தரலிங்கம்

இது நடா சுப்ரமணியம் அவர்களால் மே 15, 2017 இல் எழுதப்பட்ட முகநூல் பதிவிலிருந்து உருவியது. ஈழத் தமிழரின் வரலாற்றில் இடம்பெறவேண்டியவை எனக் கருதும் தகவற் துண்டுகளைப் பதியவேண்டுமென்ற ஆவலினால் உந்துப்பட்ட செயலில் இதுவுமொன்று. நன்றி நடா.

*****

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வரிகளில் தொடங்கும் சங்ககாலப் பாடலை இயற்றிய புலவரின் உண்மையான பெயர் ‘கணியன்’ என்பதாகும்.

அவர் தனது பெயருடன் தனது சொந்த ஊரான பூங்குன்றம் என்ற பெயரையும் சேர்த்து – கணியன் பூங்குன்றனார்- என்றே தனது பெயரை சங்ககால இலக்கியங்களில் பதிவு செய்திருந்தார்.

ஆக ‘இந்த பரந்த உலகத்தில் எல்லா ஊர்களும் எனது ஊரே’ என்றும் ‘உலக மக்கள் எல்லாம் எனக்கு உறவுகளே’ என்றும் ஒரு பொதுவுடைமை தத்துவத்தை உலகிற்கு எடுத்து இயம்பிய எமது தமிழ் பெருந்தகையே தான் பிறந்த ஊரை பெருமையுடன் குறிப்பிடும் போது என் போன்ற சாதாரணமான ஒருவன் தான் பிறந்த ஊரின் பெருமைகளைப் பற்றி பேசுவது குற்றமாகாது என்று நம்புகிறேன்….

இனி மேல் இந்தப் பதிவினை எழுதுவதற்கு தூண்டிய சம்பவத்திற்கு வருகிறேன்….

இன்று ஓர் மரண அறிவித்தல் எனது கண்களில் பட்டது..

அந்த மரண அறிவித்தல் பருத்தித்துறை ஆவண காப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது.
அந்த செய்தி:

‘திரு சோ ஸ்ரீஸ்கந்தலிங்கம் காலமானார்’

உண்மையில் அமரர் ஸ்ரீஸ்கந்தலிங்கம் அவர்களை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியாது…

இவரை பற்றி நான் நினைக்கும் பொழுது எனது நினைவுகள் சில தசாப்தங்கள் பின்னோக்கி செல்கிறது..

1970 களின் இறுதி கால கட்டம்…..

அது ஓர் கனாக்காலம் என்று கூறினால் எனது வயதில் எமது ஊரில் வாழ்ந்தவர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்..

தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரோஷமான சிங்கள ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பிக்காத காலம்.. …

ஆயுத கலாச்சாரம் என்பது எமது சமூகத்தை சீரழிப்பதற்கு முன்னரான காலம்…

எங்கள் அழாகான பருத்திநகர் அமைதியில் நிறைந்திருந்த காலம்…

எமது ஊரை பற்றி நினைத்து நினைத்து பெருமைப்பட எமது ஊர் நூறு நூறு சிறப்புக்களை கொண்டிருக்கின்றது….

ஒரு ஊருக்கு ஒரு திசையில் கடல் இருப்பது என்பதே அழகானது!

எமது ஊரோ இலங்கைத்தீவின் உச்சத்தில் உள்ள வடமுனையில் அமையப்பெற்றிருக்கிறது…

எமது ஊரை மூன்று திசைகளிலும் நீலக்கடல் நீளமாக சுற்றிவளைத்து வியாபித்து இருக்கிறது …

அந்த நீல கடலில் எப்பொழுதும் நீந்தி விளையாடும் மீன்பிடி படகுகள்….

பரந்து விரிந்திருக்கும் வெண்ணிற கடற்கரை பரப்பு…

எப்பொழுதும் மேனியை வருடி செல்லும் கடற்காற்று…

(ஆக சிந்து நதியில் தோணிகள் ஒட்டி சேர நாட்டு இளம் பெண்களை பார்த்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்க வேண்டிய பாரதியின் நிர்பந்தம் எமது காலத்தில் வாழ்ந்த எமது ஊர் இளைஞர்களுக்கு இருக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்)

உயர்ந்து வளர்ந்த வெளிச்ச வீடு…..

கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி வழங்கும் கல்லூரிகள்….

வித விதமான கடைகளால் சுற்றி வளைக்கப்படட ஓர் அழகிய சந்தை…..

நகரத்தின் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கும் சினிமா தியேட்டர்கள்….

சென்ட்ரல் தியேட்டரில் இரண்டாம் காட்சி பார்த்து விட்டு வரும் பொழுதும் பசியாற 24 மணி நேரமும் திறந்து இருக்கும் சிறீஸ்கபே….

ஒவ்வொரு தொழிலும் சிறப்பு திறன் கொண்ட பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்த பாங்கு…

இந்து, கிறீஸ்தவ, முஸ்லீம் என்று மூன்று மதத்தினரும் அவர்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட அழகு அழகான கோயில்கள் தேவாலயங்கள்….

என்று அடுக்கி கொண்டே போகலாம்…

அங்கு நாம் தொலைத்த சந்தோசங்களை எந்த மொழியாலும் மொழிபெயர்க்க முடியாது..

எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது…

இங்கு நான் குறிப்பாக குறிப்பிட முன்வருவது அந்த நாட்களில் இடம்பெறும் மெய்வல்லுனர், விளையாட்டு போட்டிகள் பற்றியே.

நான் பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் நான் பார்த்து பார்த்து வியந்த மல்யுத்த வீரர்கள், ஆணழகர்கள் நிறையவே எம்மூரில் இருந்தார்கள்..

எங்கள் அயலில் சாண்டோ துரைரத்தினம் என்ற ஓர் பிரபலமான பயிற்சியாளர் (Trainer) இருந்தார்.

அவர் வீட்டிற்கு அந்த நாட்களில் பல இளைஞர்கள் மல்யுத்த, பாரம் தூக்கும் பயிற்சிகளை பெறுவதற்கு வருவார்கள்.

அன்றைய நாட்களில் என்னைப்போன்ற சிறுவர்களின் மனதினில் அரியாசனம் இட்டு அமர்ந்திருந்த நிஜமான கதாநாயகர்கள் இந்த இளைஞர்களே…

அந்த நாட்களில் வருடத்திற்கு ஒரு தடவை பருத்திநகரின் மையத்தில் அமைந்து இருந்த திக்கமுனை மைதானத்தில் மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கலை பண்பாட்டு நிகழச்சிகள் என்பன இரவிரவாக இடம்பெறும்…

பாரிய பாரம் கொண்ட லாரிகளை நெஞ்சில் ஏற்றுபவரும் மோட்டார் சைக்கிளை பல்லால் கட்டி இழுப்பவரும் என்று வீர சாகசங்களை செய்து காட்டும் நிஜமான வீரர்கள் அந்த நாட்களில் எமது ஊரில் நிறைந்து இருந்தனர்…

இன்றைய நாட்களை போல திரைகளில் காணும் நடிகர்களை கொண்டாட வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை…

அவர்களில் அமரர் ஸ்ரீஸ்கந்தலிங்கம் அவர்களை திக்கமுனை மைதானத்தில் இடம்பெறும் ஆணழகன் போட்டி மல்யுத்த போட்டிகளில் பார்த்து இருக்கிறேன்.

அந்த நாட்களில் என்னை போன்றவர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்த வீர கதாநாயகர்களில் இவரும் ஒருவர்.

சாண்டோ துரைரத்தினம் அவர்களின் மாணவரான இவர் குத்துசண்டை மல்யுத்தம் அதிபாரம் தூக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்று வடமராட்சி சிறந்த ஆணழகனாக நான்கு வருடம் தொடர்ச்சியாக இருந்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் உறுப்பினரான இவர் 1979 இல் 220 இறாத்தல் நிறையை தூக்கி சாதனை படைத்தவர்.

1977 இல் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர் மல்யுத்தம் free style இல் தேர்ச்சி பெற்ற இவர் சிறந்த மல் யுத்த வீரராக விளங்கினார்.
பாரமான மோட்டார் சைக்கிள் கட்டி தூக்குதல்,112 இறாத்தல் சிமெண்ட் bag தூக்குதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அது மட்டும் அல்லாது கலைஞர் வட்டம் நடத்திய நாடகங்களில் சண்டை காட்சிகளில் நடித்தார்.
(அவன்தான் மனிதன்) இன்றும் இவரது சண்டை காட்சிகள் பேசப்படும் ஒரு நாடகமாக இருந்தது.

பருத்தித்துறையின் பாரம்பரிய விளையாட்டு கலைகளும் அந்த கலைகளின் தலைமுறையினரும் நம்மை விட்டு முற்றாக விடைபெற்று விட்டார்கள் என்று நினைக்கும் பொழுது கண்களின் ஓரம் பனிக்கும் கண்ணீர் துளிகளை அடைக்க முடியவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *