சொல்வதெல்லாம் உண்மை – உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை
புலனுணர்வுச் செயலாட்சி (perception management) என்பது மேற்கு நாடுகளின் ஊடகத் துறையில் நெடுங்காலமாகவே கையாளப்பட்டுவரும் செயல் கீழை நாடுகளுக்கு அச் செயன்முறையை ஏற்றுமதி செய்வதில் மறுப்பும் தயக்கமும் அந்நாடுகளில் அனுட்டிக்கப்பட்டன. பனிப்போரில் ஈடுபட்ட இரண்டு வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் இச்செயன்முறையைக் கையாண்டு வந்ததும் இச்செயன்முறைகளின் பரம்புதல் கீழைத்தேயப் பாமரரிடம் நம்பகத் தன்மையை அழித்துவிடுமென்றும் அவர்கள் கருதியிருக்கலாம்.
தகவற் குழப்பம் (disinformation), பரப்புரை (propaganda), சூழ்ச்சி (deception) என்று பல தடைகளையும் தாண்டிப் போகும்போது ‘உண்மை’ ஊனமுற்றுப் போய்விடுவதால் ஏற்படும் எதிர்வினைகள் போர்களில் முடிவடைவது செய்தியல்ல. மனித அழிவுக்கென உருவாக்கப்பட்ட பெருங்கருவிகளிலொன்றாக செய்தி ஊடகங்கள் இன்று வடிவெடுத்திருப்பது மிகவும் துர்ப்பாக்கியம். சில தசாப்தங்களுக்கு முன்னர் எங்களுக்கு அந்நியமாகவிருந்த இக்கருவிகள் இன்று எம்முற்றத்தில் விதைத்துக் கிடப்பதற்கு முக்கிய காரணங்களாக நுட்ப வளர்ச்சியையும் மனிதப்பரம்பலையும் இனங்காட்டலாம்..
‘பாபர் மசூதி இடிப்பு இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொலைவெறியைத் தூண்டுவதற்கு தொலைக்காட்சியும் ஒரு காரணம்’ என்று செய்தியைப் படித்தபோது ஊடகத்தின் பலம் பற்றி அறிய முடிந்தது. ஊடகங்களை எப்படி உடுக்குகளாகக் கையாண்டு பாமர மக்களுக்கு உருவேற்றலாமென்பது அரசியல்வாதிகளுக்குப் புகட்டப்பட்ட ஒருவித புலனுணர்வுச் செயலாட்சிமுறை.
முதலாம் வளைகுடாப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் குவைத்தில் ஈராக் இராணுவத்தினர் செய்கின்ற அட்டகாசங்கள் பற்றிய பலவிதமான ‘நேர்முக வர்ணனைகள்’ காட்டப்பட்டன. அப்படியான காட்சியொன்றில் ‘மருத்துவ நிலையமொன்றிலருந்து சில பசுங்குழந்தைகளை ஈராக் இராணுவத்தினர் சிலர் அவை துயிலும் தூளிகளிலிருந்து இழுந்தெடுத்து வெட்டிக் கொன்றதைக் கண்ணால் கண்டதாக’ ஒரு தாதிப்பெண் கண்ணீரும் கதறலுமென உருக்கத்தோடு கூறினார். சதாம் உசேன் மீதான அமெரிக்க மக்களின் வெறுப்பிற்கு இச்செய்தி தூபமிட்டிருக்க முடியாது என்று யாரால் வாதிட முடியும்?
இங்கு கொலை செய்யப்பட்டது குழந்தைகளல்ல ‘உண்மை’ மட்டுமே என்பதை அமெரிக்க மக்கள் அறிவதற்கு முன்னரே ஐந்து லட்சத்துக்கும் மேலான மக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டுவிட்டன. உண்மை ஒரு வருடம் தாண்டி அடிபட்டு உதைபட்டு இழுத்துக்கொண்டு கனடிய ‘மனச்சாட்சி’ ஊடகமொன்றின் மூலம் திரைகளுக்கு வந்தபோது மக்கள் அதை மறந்துவிட்டிருந்தார்கள். அமெரிக்க ஊடகங்கள் அச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததொன்றும் ஆச்சரியப்பட வைக்கவில்லை.
நடந்தது இதுதான். முதலாம் வளைகுடாப் போரிற்கான தயாரிப்பின்போது அமெரிக்காவின் அதிபிரபலமான பரப்புரை நிறுவனமொன்று அரசினால் சேவைக்கமர்த்தப்பட்டது. போரின்பால் அமெரிக்க மக்களை உற்சாகத்தோடு ஈடுபட வைப்பதில் அரசுக்கு அப்போது தேவையிருந்தது. அதனால் அமரிக்காவில் நடித்து சின்னத்திரைகளில் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் தாதியாக ‘அழுதழுது’ நடித்தது குவைத்தின் அமெரிக்கத் தூதுவரின் மகள். பரப்புரை விடயத்தில் மட்டுமல்ல போரிலும் அமெரிக்காவுக்கு அமோக வெற்றி.
இந்தியாவில் முன்னாட்களில் போருக்கென்றொரு விதிமுறை இருந்தது. இரண்டு மன்னர்களுக்கிடையேயான போராயினும் அது மக்கள் வாழாதவிடத்தில், பசுக்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபரை ஒதுக்கியதோர் தனியிடத்தில் நடாத்தப்படும். இப்பொழுதெல்லாம் போர் முதலில் ஆரம்பிக்கப்படுவது மக்கள் மனங்களிலேதான். வெற்றி கொள்ளப்படாத மக்கள் மனங்களின் மத்தியில் போர் வெல்லப்படவும் முடியாது வென்றாலும் அவ்வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அக்கடமையை ஊடகப் பெருங்கருவிகள் செவ்வனே செய்து முடிக்கின்றன.
அமெரிக்க இராணுவம் தனது போர்களை நவீனப்படுத்தவெனக் கையாண்ட முதல் உத்தி ‘தகவற் போர்’ தான். மனித விருத்திக்கென்று அடிக்கடி பொதிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறோமென்று வல்லரசுகளின் சார்பில் விண்ணூர்திகள் சென்று வந்த போதெல்லாம் அங்கு விதைக்கப்பட்ட உலங்கு விண்கலங்கள் (spy satellites) தகவற் பெருஞ்சாலையை விரிவாக்கின. ஒரு தீப்பெட்டியிலிருக்கும் எழுத்துக்களைத் துல்லியமாக வாசித்துக் கொடுக்கும் இவ்வுலங்கு கலங்களின் வழிநடத்தலில் ;ஆவி’ யாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் நமது தகவற் பெருஞ்சாலையின் ஆவி அகதிகளே!
பிந்திய செய்திகள் உண்மையானால், பென்டகன் ஞானிகளின் அடுத்தகட்டப் போர் உலக மக்களை நோக்கிய விரிவாக்கப்பட்ட தகவற் போரே எனக் கூறப்படுகிறது. ஆனால் அஞ் ஞானிகளிடையே ஏற்பட்டிருக்கும் கிலேசம், அத் தகவற்போரை அமெரிக்க மக்களுக்கு மட்டும் எப்படி இருட்டடிப்புச் செய்வதென்பது. உலக அரங்கில் அமெரிக்காவின் முலாம் வெகு வேகமாகக் களையிழந்து வருவது இஞ்ஞானிகளுக்குக் கவலையளிக்கிறது என்பதனாலேயே உலகை நோக்கிய போர் முடுக்கல். புலனுணர்வுச் செயலாட்சியே (perception management) அவர்களது அடுத்தகட்டச் செயல் வடிவம்.
அதன் பரீட்சார்த்த செயன்முறை இரண்டாம் வளைகுடாப் போரில் தெளிவாகியது. பல செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும்போது அவற்றின் மூலமென மத்தியகிழக்கின் இணையத் தளமொன்றைக் குறிப்பிடுவார்கள். கட்டுப்பாடற்ற இணையச் சாலைகளில் எவரும் எப்போதும் குறுக்கிடலாமென்ற சுதந்திரத்தில் வதந்திகள் பலவடிவங்களில் உலவ விடுவார்கள். எவரும் எப்போதும் அவற்றைக் குறிப்பிடலாம். போருக்கு எதிராகக் குரல் கொடுத்த பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினர் ஒருவர் சதாம் உசேனிடம் பெருவாரி பணத்தைப் பெற்றார் என்று இரண்டு அச்சு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஒரு வருடத்துக்குப் பிறகு உண்மை வழமைபோல ஊர்ந்து வந்து சேர்ந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இரண்டு ஊடகங்களும் பல மில்லியன் டாலர்களை இழக்கத் தயாராகிவிட்டன.
இந்தப் பென்டகன் ஞானிகள் எந்த இணைய வலையைத் தமது எதிரிகள் மீது வீசினார்களோ அல்லது எந்த நுட்பக் கருவிகளால் எதிரிகளை அடையாளமிட்டார்களோ அவ்வலையிலேயே அவர்கள் சிக்கியும், அக்கருவிகளாலேயே அவர்கள் அழிக்கப்பட்டு வருவதும் இயற்கை விதிகளை மீற முடியாது என்பதையே காட்டி நிற்கிறது. கணனிகளின் ‘மவுஸ்’ கள் பெற்ற திடீர் மவுசு அச்சூடகங்களின் காலைச் செய்திகள்; சூடாறுவதற்கு முன்னரேயே அமெரிக்கச் சமையலறைக் கணனிகளால் அச்செய்திகளைப் பொய்யென்றுரைத்துவிடும் புதுமை அங்கு நடைபெற ஆரம்பித்துவிட்டது. விரித்த வலைகளில் வீழும் ஞானிகள் மீது இரக்கம் ஏற்படுவது அரிதாகிக் கொண்டு போகிறதென்கிறார்கள். இதனால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்பக்கூடிய செய்திகளை எப்படி வெளியிடுவது என்பதற்காக பென்டகனில் யாகம் ஆரம்பித்திருக்கிறது.
பனிப்போர்க் காலங்களில் அமெரிக்காவைவிடவும் சோவியத் குடியரசே தகவற்போரில் முன்னணி வகித்தது. உள்நாட்டுத் தகவற்சாதனம் கடிவாளமிடப்பட்டிருந்தது அவர்களுக்கு மிகவும் வசதியாகவிருந்தது. சோவியத் குடியரசின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் முதல் கடமையாக அமைந்தது அதிபர் யெல்ஸ்ரினைக் ‘குடிகாரராக்கி’ எஞ்சியிருந்த தகவற் பெருஞ்சாலைகளில் குடிபுகுந்து கொண்டமையே.
இன்றய மத்தியகிழக்கில் அமெரிக்காவின் இந்த புலனுணர்வுச் செயலாட்சி அவர்கள் நினைத்திருந்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்கிறார்கள். அல்-ஜஜீரா போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் கொடுக்கின்ற தலையிடி போதாதென்று தற்போது அல்-மனார் என்ற புதியதொரு தொலைக்காட்சி சேவைக்கு வந்திருக்கிறது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா விடுதலை இயக்கத்தை முதன்மைபடுத்தும் இத் தொலைக்காட்சி இஸ்லாமிய மக்களை உளவியற் போருக்குத் தயார்படுத்தும் ஊடகமாக இருக்கப் போகிறது என்கிறார்கள்.
ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் படைத்தளபதி ஜோர்ஜ் கேசி என்பவர் பொது நிர்வாக தகவற் தொடாடபுச் சாதனத்தையே மக்களது புலன் மயக்கப் பணிகளுக்கு ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். உண்மை மீண்டும் மீண்டும் பலமாக அடிபடப் போகிறது. இதில் முரண்நகை என்னவென்றால் இவரது தந்தையார் முன்னாள் சீ.ஐ.ஏ. அதிபர் வில்லியம் கேசி புற்றுநோய் காரணமாக உயிர் பிரிவதற்கு முன் ஒத்துக்கொண்ட உண்மை “ லெபனானில் கார்க் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து தொண்ணூறுக்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதற்கு சீ.ஐ.ஏ. தான் காரணம்”
நமது தமிழ் ஊடகங்கள்? வேண்டுமென்றே பொய்களை அவர்கள் சொல்வதுமில்லை, எழுதுவதுமில்லை. இன, மத, சாதி வெறிகளைத் தாண்டி வெளியே வருவதற்குள் உண்மை உயிர் நீத்து விடுகிறது. அவ்வளவுதான்.
‘சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை’!