பிரியதர்சன்

சொர்க்கத்தில் கொட்டும் பனி…

பிரியதர்சன் பக்கங்கள் – 06

வெளியில் பனி கொட்டுகிறது.
பதினைந்து cm  வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது.

நாங்கள் பனி பார்க்காத தேசத்தில் இளமையைக் கடந்தவர்கள்.
கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டிப் பார்த்திருக்கிறேன். மிஞ்சி மிஞ்சிப் போனால்  10 பாகை குளிரைக் கண்டிருப்பேன். இங்கெல்லாம் அதைக்  குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.

பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன். சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில் கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம். கொழும்பில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்த காலம். படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.

அக்பர் விடுதி வாழ்கையும் முன்நூற்றம்பது ரூபாய் மகாபொல காசும் முடிந்து போனது. இரண்டு ரூபாய் கன்டீன் சாப்பாடும் இல்லை என்றானது.

காசு கேட்டு வீட்டுக்குக் கடிதம் அனுப்ப வெட்கப்பட்டவர்கள் கிடைத்த வேலையில் தொற்றிக் கொண்டார்கள். பாக்கியவான்களுக்கு கொழும்பிலும் கண்டியிலும் வேலை வாய்த்தது. மற்றவர்களை வேலை எங்காவது ஒரு சிங்கள ஊருக்கு கொண்டுபோய் சேர்த்தது.

எக்கய்,தெக்கய் ,கொந்தய், நரக்கய் மட்டும் சிங்களத்தில் தெரிந்தவர்கள் முழி பிதுங்கினார்கள். எங்காவது வெடிக்கிற குண்டுக்கும் கூட வேலை செய்தவர்கள் முறைத்து பார்த்தார்கள்.

பெடியளின் வெற்றி செய்திகள் வருகிற போது மனதுக்குள் மத்தாப்பு வெடிக்கும். வெளியில் காட்டி கொள்ள முடியாது.
அரசியல் பேச அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். போலி சிரிப்போடு வாழ்கை நகர்ந்தது. கொஞ்சம் வேலை அனுபவம் வந்து சேர்ந்தது.

எங்களை போன்றவர்களுக்கும் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் குடிபெயர்கிற கதவுகள் திறந்தது. கொஞ்சப்பேர் அவுஸ்ரேலியாவுக்கு போனார்கள். மற்றையோர் கனடாவை பார்த்தார்கள்.

கனடாவுக்கு குடிபெயர்கிற நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். கொழும்பில் இருந்த கனடா தூதரகத்துக்கு போயிருந்தேன். வெள்ளைக்கார அதிகாரிக்கு முன்னால் போய்க் குந்தினேன்.

“ஏன் கனடாவில் போய் குடியேற ஆசைபடுகிறாய்”
 என்றார்.

“பேசுகிற மொழிக்காய்த் தண்டிக்க படாத நாட்டில் எல்லா இனத்தவரோடும் கூடியிருக்க விருப்பம்” என்றேன்.

“நல்லது. அது மட்டுமா ?”என்றார்

“கனடா குளிர் காலம் பிடிக்கும் “என்றேன்.

புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்த்தபடி “உண்மையாகவா? ” என்றார்.

நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது என்க்கு புரியவில்லை.

பனி கொட்டும் குளிர் காலமொன்றில் மொன்றியலில் வந்து இறங்கினேன்.

கொழும்பில் அலைந்து திரிந்து  house of fashion வாங்கிய jacket கைகொடுத்தது .  

அந்த jacket  க்குள் என்னை விட இன்னுருவரும் புக முடியும். குளிர் பூந்து விளையாடியது. சொண்டுகள் வெடித்தது. தோல் கரடு முரடாகி வெள்ளை படர்ந்தது. வெளியில் வந்து சறுக்கி விழுந்தேன். புருவத்தை உயர்த்தி Really?  என்று கொழும்பில்  கேட்ட  அந்த அதிகாரியின் முகம் கண்ணுக்குள்  வந்து போனது.

சொர்க்கத்திலும் பனி கொட்டும் என்ற கனவும் கலைந்து.

இப்போது எல்லாம் பழகிப்போனது.