‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்து இலங்கையில் வதியும் சீனர்களுக்கே முதலில் வழங்கப்படவேண்டும் – சீனா கட்டளை

சமீபத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கோவிட் தடுப்பு மருந்து முதலில் அங்கு வதியும் சீனர்களுக்கே வழங்கப்படவேண்டுமென சீனா உத்தரவிட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தர்ஷினி ஃபெர்ணாண்டோபிள்ளை அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சீனாவின் நிலப்பகுதியான துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், சீன நிறுவனங்கள், மற்றும் சீன உதவியுடன் மேற்கொள்ளப்படும் உட்கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றில் பல்லாயிரக் கணக்கான சீனர்கள் பணிபுரிகிறார்கள்.

கொழும்பு துறைமுக நகரத்திந் நிர்வாகம் தமது பணியாளர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட ‘சைனோஃபார்ம்’ தடுப்புமருந்தை வழங்கும்படி சுகாதார அமைச்சுக்கு நேரடியாக கோரிக்கை விடுத்திருக்கிறது என அமைச்சர் ஃபெர்ணாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். அதே வேளை சீனாவினால் வழங்கப்பட்ட இம் மருந்து சீனருக்கு வழங்கப்பட்ட பின்னரே இலங்கையர்களுக்கு வழங்கப்படவேண்டும் என இலங்கையிலுள்ள சீன தூதரகம் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்து இலங்கையில் பரிசோதிக்கப்படவில்லையாயினும் அவசர தேவை என்ற முறையில் அதன் பாவனையை இலங்கையின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதித்திருந்தது.

நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிராம சேவகர் பிரிவு மூலமாக தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் ஃபெர்ணாண்டோபிள்ளை மேலும் தெரிவித்தார்.